vrijdag 7 oktober 2011

தொலைநோக்கு எங்கே போனதோ!!

07 October, 2011 
புலிகளை அமெரிக்கா தனிமைப் படுத்தியது போல..


ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர், கடந்த வாரம் ரகசியப் பயணம் ஒன்றை (பெயர் குறிப்பிடாத அரபு நாடு) ஒன்றுக்கு மேற்கொண்டார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. பயணத்தின்போது, அங்கு வைத்து பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார் என்று பூசி மெழுகப்பட்டது. ஆனால் அதற்கு அப்பாலும் ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதுதான் திடுக்கிடவைக்கும் சந்திப்பாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் இச் செயலுக்கும் எமது விடுதலைப் போராட்டத்துக்கும் ஒரு நெருக்கமான ஒற்றுமை உண்டு என்பதனால் நாம் இதனை எழுதவேண்டி உள்ளதோடு நன்கு ஆரயவேண்டியும் உள்ளது. சரி மேட்டருட்டருக்கு வருவோம்:

பாகிஸ்தானில் நிலைகொண்டு அக்கானிஸ்தானில் சமீப நாட்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடாத்துவதில் முன்னிற்கும் அமைப்பு ஹக்கானி குழு ஆகும். இதன் தாக்குதல்கள் சில அமெரிக்காவை அதிரவைத்துள்ளதோடு இவ்வியக்கத்தின் மூத்த தளபதிகளைக் கொல்ல அமெரிக்காவால் முடியவில்லை. காரணம் அவர்கள் பாகிஸ்தானில் மறைந்திருந்து அக்பானிஸ்தானில் தாக்குதலை நெறிப்படுத்துகின்றனர். அத்தோடுமட்டுமல்ல இவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ யுடன் தொடர்புகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இச் சர்ச்சைக்குரிய கருத்தை அமெரிக்க தளபதி ஒருவர் முன்வைத்ததும் யாவரும் அறிந்ததே.

இப்படி நேரடியாக குற்றம் சாட்டிய பின்னரும், ஹக்கானி குழுவின் தளபதிகளை அமெரிக்கா ஏன் ரகசியமாகச் சந்திக்க வேண்டும் ? அதுவும், அந்த தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரியின் உதவியுடன் சந்திக்க வேண்டிய அவசியம் தான் என்ன ? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன. அதுதான், அமெரிக்காவின் "டீலிங் ஸ்டைல்" என்கிறார்கள் சிலர். தாம் நேருக்கு நேராக மோதிக் கொள்பவர்களுடன், மற்றொரு பக்கமாக ரகசிய டீலிங் ஒன்றையும் வைத்திருப்பார்கள் அவர்கள். இரண்டும், வெவ்வேறு இலாகாக்களினால் கவனிக்கப்படுமாம். இந்த ரகசிய சந்திப்பின் உண்மையான நோக்கம் என்ன, நோக்கம் நிறைவேறியதா, என்பது போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடையாது. அமெரிக்க எப்படி செயல்படும் என்று பரிச்சயம் இருந்தால், ஓரளவுக்கு ஊகிக்கலாம்.

ஊகம் என்னவென்றால் இந்த "ஹக்கானி" குழுவின் தாக்குதல்கள் அமெரிக்க ராணுவத்துக்கு ஆப்கானிஸ்தானில் தேவையில்லாத சங்கடங்களைக் கொடுக்கின்றன. அமெரிக்கா தனது ராணுவத்தை அடுத்த வருடம் ஆப்கானில் இருந்து திருப்பி அழைத்துக் கொள்ள விரும்புகிறது. அதுவரை, இந்த தாக்குதல்களை ஹக்கானி குழு நிறுத்திக் கொண்டால் அமெரிக்காவுக்கு பெரிய உதவியாக இருக்கும். இதற்கு ஹக்கானி குழு ஏன் சம்மதிக்க வேண்டும்? தாக்குதலை நிறுத்துவதால், அவர்களுக்கு என்ன ஆதாயம் ? என்று கேட்கிறீர்களா ? அதுக்கு தான் அமெரிக்கா வைத்திருக்கிறது பயங்கரவாதப் பட்டியல் ! அதாவது உலகளவில் ஒரு இயக்கத்தை பயங்கரவாதிகள் ஆக்குவது. இவ்வாறே விடுதலைப் புலிகளையும் அமெரிக்கா முதலில் பட்டியலிட்டது. அதனைத் தொடர்ந்து அதன் நேசநாடுகளும் புலிகளைப் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிட்டன.

தற்போது அல்-கைதா மற்றும் தலிபான் அமைப்புகளையே அமெரிக்கா பயங்கரவாதப் பட்டியலில் இட்டுள்ள இதேவேளை ஹக்கானி அமைப்பையும் பட்டியலிட்டு விடுவோம் என அது மிரட்டியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இவ்வியக்கத்துக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்படலாம் என்பதனை ஓபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதேபோலவே விடுதலைப் புலிகளுக்கும் தற்கொலைத் தாக்குதல்களை மட்டுமாவது நிறுத்திக்கொள்ளுங்கள் என்ற அறிவுரை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாகவே மேற்குலக நாடுகள் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இட்டது என்பது போன்ற பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் நடந்ததை அனைவரும் அறிவார்கள். எந்த ஒரு உலக நாடுகளும் புலிகள் விடையத்தில் தலைபோடவே இல்லை. குறைந்தபட்சம் மக்களையும் காக்க முன்வரவில்லை.

தற்போது இதேபோன்றதொரு இரகசியச் சந்திப்பில் மற்றுமொரு அமைப்பையும் அமெரிக்கா சிக்கவைக்க முனைவதைப் பார்த்தால் காலங்காலமாக இதனையே இவர்கள் தொழிலாகக் கொண்டிருப்பார்கள் போல உள்ளது. ஹக்கானி குழு, அமெரிக்க எச்சரிக்கையில் பொதிந்துள்ள பயங்கரத்தைப் புரிந்து கொள்வார்களா ? தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்களா ? அது அவர்களது சர்வதேச ராஜதந்திர அறிவைப் பொறுத்த விஷயம். அவர்களது தலைமை எடுக்க வேண்டிய முடிவு அது. ஹக்கானி குழுவின் பிரதான தலைமை, மௌலவி ஜலாதுதீன் ஹக்கானி, அவரது மகன் சிராஜூதீன் ஹக்கானி ஆகியோர்தான். சிராஜூதீனின் மற்றொரு சகோதரர் பதாருதீன் ஹக்கானி, தலைமை மட்டத்தில் உள்ள மற்றொருவர். இவர்கள் தமது சர்வதேச ராஜதந்திர அறிவுக்கு உகந்த விதத்தில் எடுக்கும் முடிவு, இவர்களது இயக்கத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றது என்று சொல்லலாம்

Geen opmerkingen:

Een reactie posten