விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இரணுவத்தினரால் நீதிக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, சனல்-4 ஆவணப்படம் சுமத்தும் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் இன்னமும் நிராகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக, ஜனாதிபதி மகிந்தவின் ஊடக ஆலோசகரும், பேச்சாளருமான பந்துல ஜெயசேகரவிடம் இந்திய ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில்,


தாம் இன்னமும் அந்த காணொளிப் பதிவைப் பார்க்கவில்லை என்றும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அந்த காணொளியைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக செயற்படுவதில் மும்முரமாக இருக்கின்றனர் என பதிலளித்துள்ளார்.
மேலும், சனல்-4 வெளியிட்ட முதலாவது காணொளியை நாம் ஒவ்வொரு கட்டமாக ஆராய்ந்து பார்த்தோம். விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் பெண்கள் பற்றிய ஆயிரக்கணக்கான காணொளிகளை எம்மால் தயார்படுத்த முடியும்.
அவர்கள் சிறுவர்களைக் கொலை செய்ததை எம்மால் உறுதி செய்ய முடியும். இலங்கை இராணுவத்தினர் இவற்றில் ஈடுபடவில்லை. நாம் மேற்கொண்டது மனிதாபிமானப் போர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஒளிப்பட ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அரசாங்கம் அது பற்றிய எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten