donderdag 8 maart 2012

ஈழத் தமிழர் ஒருவர் இந்தியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் !


இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக அகதியாக இந்தியா சென்றடைந்த ஈழத்தமிழர் சாகும்வரையான உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயமோகன் என்பவரே இவ்வாறு நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதியாக தமிழ்நாட்டில் தங்கியிருந்த வீ.ஜெயமோகன் உட்பட 14 பேரை கடந்த 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இந்திய குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருந்துகளை இந்தியாவிலிருந்து அனுப்ப முயன்றதாக குற்றச்சாட்டின் பேரில் திடீரென கைது செய்து செங்கல்பட்டு முகாமிற்கு கொண்டுசென்றிருந்தனர்.

ஆனால் ஒரே குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 14 பேரில் 12 பேரை விடுதலை செய்துள்ளபோதும் ஜெயமோகன் கெங்காதரன் ஆகிய இருவரை மட்டும் இன்னும் விடுதலை செய்யாது நீதிக்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே தடுப்புக்காவலில் உள்ள ஜெயமோகன் தம்மை விடுவிக்கக் கோரி 3 தடவைகள் உண்ணானிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இருப்பினும் பல வாக்குறுதிகளை வழங்கி அவரது உண்ணா நிலைப் போராட்டத்தை நிறுத்திய முகாம் அதிகாரிகள் இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத காரணத்தால் தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பு முகாமிலுள்ள ஜெயமோகன் இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் முன்னரும் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் உதவி அத்தியட்சர் தாசிதார் மற்றும் பூந்தமல்லி காவல் ஆய்வாளருக்கு முன்னாள் இரண்டு வாரங்களுக்குள் என்னை விடுதலை செய்வதாக வாக்குறுதி தந்த போதும் இதுவரை எந்த பதிலும் இன்றி நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். துணை மாவட்ட ஆட்சியாளர் வந்தும் இப்படி பொய்யாக வாக்குறுதி தந்தால் நான் யாரை நம்புவது! எனவே இனிமேலும் அதனை நம்பி இருக்கத் தயார் இல்லை என்ற முடிவோடு இறுதியாகவும் உறுதியாகவும் நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரையான உண்ணா நிலைப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten