'இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும்' என்ற இந்தப் புத்தகம் மிகமிக முக்கியமான காலகட்டத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது. ஆயுதமும் அரசியலும் தமிழர்களைக் காப்பாற்றவில்லை. என்ன காரணம் என்பதை அறிய இந்தப் புத்தகம் உதவும்.
இலங்கைப் பிரச்னையைத் தமிழர் பிரச்னையாகவும், இன வாத மோதலாகவும் கவனித்துவரும் சூழலில் 25 ஆண்டுகளுக்கு முன்னால், 'இது சர்வதேசப் பிரச்னை’ என்பதை அக்கறையோடும் எச்சரிக்கையோடும் சொன்னவர்கள் உதயனும் விஜயனும்.
'இலங்கையின் இனப்பிரச்னை என்பதும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலை என்பதும் இந்து சமுத்திரப் பிரச்னை’ என்பதையும் அப்போதே சொன்னவர்கள். அதுதான் உண்மை என்பதை மூன்று லட்சம் பேர் பலியானதற்குப் பிறகு, தமிழர்கள் உணர்ந்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆயுதமும் அரசியலும் தமிழர்களைக் காப்பாற்றவில்லை. என்ன காரணம் என்பதை அறிய இந்தப் புத்தகம் உதவும்.
இலங்கை மிகச்சிறிய நாடு. ஆனால், அது மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. இலங்கை மூலமாக பொருளாதார நலன்களைப் பெறுவதைவிட, இராணுவ நலன்களைத்தான் அனைத்து நாடுகளும் குறிவைத்தன.
ஆகப்பெரிய இந்தியாவை கைக்குள் வைத்திருந்த பிரிட்டிஷார், 'இந்த இந்தியாவைத் தக்கவைக்க வேண்டுமானால் இலங்கையும் நம் வசம் இருக்க வேண்டும்’ என்று நினைத்தார்கள். அதனால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த ஏழு மாதங்களுக்குப் பிறகு இலங்கைக்கு வழங்கினார்கள்.
சேனநாயக்கா காலம் முழுக்க பிரிட்டிஷ் ஆதிக்கம் அதனால் தொடர்ந்தது. பண்டாரநாயக்கா காலத்தில் சோவியத்தும் சீனாவும் கால் ஊன்றின. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அமெரிக்காவின் கைப்பாவையாக மாறினார். பிரேமதாசாவும் அதனைத் தொடர்ந்தார். இன்றைய மகிந்தா, சீனாவின் செல்லப் பிள்ளை.
இப்படிக் கடந்த 60 ஆண்டுகளாக ஏதோ வெளிநாட்டின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டே இலங்கை இருந்துள்ளது. எனவே, அதன் செயல்பாடுகள் வெறும் சிங்களச் செயல்பாடுகளாக மட்டும் இல்லாமல், சர்வதேச செயல்பாடுகளின் ஏவல் முயற்சிகளாகவே அமைந்துவிட்டன.
இதை ஈழத்தமிழ்த் தலைவர்கள் உணரவில்லை. போராளி இயக்கங்களுக்குப் புரியும் போது... காலம் கடந்துவிட்டது!
இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் புலிகள் உட்பட போராளி இயக்கங்களுக்கு, இந்தியா ஆயுத உதவிகளும் பயிற்சியும் கொடுத்து வந்தது. அன்றைய பண நெருக்கடியில், புலிகளுக்கு இந்த உதவிகளின் உள்நோக்கம் புரிபடவில்லை.
'இன்றைய எமது போராட்டத்தையும் தியாகங்களையும் தத்தமது நலன்களுக்காகவே வெளிநாடுகள் பயன்படுத்த முற்படுகின்றன. எவ்வளவு தியாகம் செய்கிறோம் என்பது அல்ல முக்கியம். எமது தியாகம் யாருக்குச் சேவை செய்கிறது என்பதே முக்கியம்.
எமது போராட்டத்தை எமக்குச் சேவை செய்யக்கூடியதாய் அமைக்க வேண்டுமாயின், அதற்குரிய சர்வதேச சூழ்நிலைகளைச் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று நூலாசிரியர்கள் எச்சரித்தார்கள்.
புலிகளை வளர்த்தெடுத்த இந்தியாவும் - புலிகளுடனே மோதியது. இந்தியாவை விரட்ட இலங்கை அரசாங்கமே புலிகளை பயன்படுத்தியது.
வலிய வலியப் போய் இலங்கைக்கு நாம் உதவிகள் செய்தாலும், அவர்கள் சீனாவையும் பாகிஸ்தானையுமே ஆதரித்தார்கள்.
இந்தியாவை அச்சுறுத்த இலங்கைக்கு எல்லா உதவியும் செய்த அமெரிக்கா, இன்று ஜெனீவாவில் அதற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக இலங்கை விவகாரத்தில் மௌனம் சாதித்த இந்தியா, இப்போது அதன் முக்கிய ஆபத்பாந்தவனாக மாறிவிட்டது.
இப்படி சர்வதேச வேட்டைக்காடாக இலங்கை மாறிய அவலம் தொடர்கிறது.
சீனாவின் அறிவிக்கப்படாத காலனி நாடாக இலங்கை மாறிவரும் சூழலில், உதயன் - விஜயனின் சிந்தனைகள், மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க விஷயங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன.
Geen opmerkingen:
Een reactie posten