தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

அமைச்சர் சமரசிங்க மீண்டும் இன்று ஜெனீவா பயணம்! நேற்று ஜனாதிபதியுடன் 2 மணிநேரம் ஆலோசனை


ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா பயணமாவதற்கு முன்னதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்தாலோசனையொன்றை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் சமரசிங்க, ஜனாதிபதியை நேற்று சந்தித்துரையாடியதை அவரது அமைச்சின் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியதுடன், அலரிமாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜெனீவாவில் இலங்கை விவகாரம் தொடர்பில் தற்போது ஏற்பட்டிருக்கும் பரபரப்பு நிலைகளில் எப்படி காய்நகர்த்தல்களை மேற்கொள்வது என்பது பற்றி ஜனாதிபதியும் அமைச்சரும் இதன்போது கலந்தாலோசித்திருப்பதாகவும் அரச தரப்பு வட்டாரங்கள் கூறின.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஏற்கெனவே கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியிருந்தார் அத்ததுடன், பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய தீர்மானத்துக்கும் கடுமையான ஆட்சேபத்தையும் முன்வைத்திருந்தார்.
இதன் பின்னர் நாடு திரும்பியிருந்த அமைச்சர் சமரசிங்க மீண்டும் இன்று ஜெனீவா செல்லவுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் மீண்டும் உரையாற்றவுள்ள மஹிந்த சமரசிங்க, எதிர்வரும் 20ம் திகதியும் அங்கு உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி பேரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையும் உரையாற்றவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் உரைக்கு  பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் சரமசிங்கவின் அன்றைய தின பேச்சு அமைந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே ஜெனீவாவில் இருக்கும் இலங்கை தூதுக்குழுவினர் இலங்கைக்கு ஆதரவு திரட்டிக் கொள்ளும் பொருட்டு பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இன்று ஜெனீவா பயணமாகி அங்கு பலதரப்பட்ட முக்கிய சந்திப்புகளை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Geen opmerkingen:

Een reactie posten