dinsdag 19 maart 2013

ஜெனிவா தீர்மானம் மீது வாக்கெடுப்பைக் கோருமா சிறிலங்கா? குழப்பத்தில் கொழும்பு !


ஜெனிவா தீர்மானம் மீது வாக்கெடுப்பைக் கோருமா சிறிலங்கா? குழப்பத்தில் கொழும்பு

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் 21ம் நாள் அமெரிக்கா முன்வைக்கவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுப்பதா இல்லையா என்ற குழப்பம் சிறிலங்கா அரசுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்தவாரம் ஜப்பான் புறப்பட முன்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில், இது தொடர்பாக ஆராயப்பட்டது.
அப்போது, தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தும்படி பேரவையில் அங்கம் வகிக்கும் நட்பு நாடு ஒன்றின் மூலம் கோரும்படி, அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு, சிறிலங்கா அதிபர் ஆலோசனை கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, வாக்கெடுப்பைக் கோராமல் விடுவது குறித்து ஆராயப்பட்ட போதிலும், சிறிலங்கா வாக்கெடுப்பை நடத்தக் கோராது விட்டாலும், வாக்கெடுப்பை நடத்தும்படி அமெரிக்கா கோரவுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்தத் தகவல் கூறுகிறது.
அதேவேளை, தீர்மானத்தை நீர்த்துப் போக வைக்க அமெரிக்காவுடன், சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இரண்டு இணக்க முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் எலீன் செம்பர்லைன் டோனஹேயுடன், இது தொடர்பாக பேச்சு நடத்தியிருந்தார்.
அப்போது, சிறிலங்காவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டாக தீர்மானத்தை முன்வைக்கலாம் என்று அமெரிக்கத் தூதுவர் எலீன் சேம்பர் லைன் டோனஹே கூறிய ஆலோசனையை சிறிலங்கா நிராகரித்து விட்டது.
இன்னொரு முனையில் இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக் மூலம் மேற்கொண்ட இணக்க முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பைக் கோரும் திட்டத்தை சிறிலங்கா கொண்டிருக்கவில்லை என்று மற்றொரு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இந்தியா அறிவிக்கவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே சிறிலங்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பது என்று இந்தியா தெளிவான நிலையில் இருப்பதாகவும், அமெரிக்காவை எதிர்ப்பதில்லை என்று சிறிலங்கா தெளிவான நிலையில் இருப்பதாகவும் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் நிலையில், அணிசேரா நாடுகள் வாக்கெடுப்பை தவிர்க்கலாம் என்றும், அந்த நாடுகள் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பாது என்றும் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் சிறிலங்கா வாக்கெடுப்பைக் கோரினாலும், ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அதில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொள்ளும் என்றும் முன்னாள் இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten