maandag 18 maart 2013

இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதித்தால் பாதிப்பு ஈழத்தமிழர்களுக்கே!


தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை பிரச்சனையில் மத்திய அரசையும், காங்கிரஸ் கட்சியையும், குறை கூறி ஒரு பிரச்சாரம் தமிழகத்தில் நடக்கிறது. குறிப்பாக மாணவர்களையும், இளைஞர்களையும் இந்த பிரச்சனையில் உண்மை நிலைக்கு மாறாக சில செய்திகளை பதிவு செய்து தூண்டுதல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
சுதந்திரத்திற்கு முன்பே, இலங்கையிலுள்ள இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வாங்கித் தந்தது நம்முடைய மகாத்மா காந்தி. வாக்குரிமை இல்லாமல் இருந்த இந்திய வம்சாவழி தமிழர்கள் 5 லட்சம் பேருக்கு வாக்குரிமை வாங்கித் தந்து, 5 லட்சம் பேரை இந்தியாவில் ஏற்றுக் கொள்வதற்கு துவக்கம் செய்தவர் நேரு.
சிங்கள அரசின் கெடுபிடி மற்றும் ஆதிக்கம் அதிகரித்த பொழுது, ஆயுதம் ஏந்திய இலங்கைத் தமிழர் குழுக்களுக்கு எல்லாவித உதவியும் இந்தியாவில் செய்து கொடுத்தது இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தான் அவர்கள் ஆதரவு இல்லாமலிருந்தால், ஆயுதம் ஏந்திய தமிழ் போராட்டம் இலங்கையில் நீர்த்துப் போயிருக்கும். ராஜீவ்காந்தி – ஜெயவர்த் தனே ஒப்பந்தம் இலங்கை வாழ் தமிழர்களுக்காக என்பதை பலபேர் இன்று மறந்துவிட்டாலும், இந்த காலகட்டத்தில் நினைவூட்டுவது எனது கடமை! இன்று வடக்கு பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு நல்வாழ்வு, பாரபட்சமற்ற வாழ்க்கை, குடியமர்ப்பு, சிங்களர்களுக்கு சமமான அரசியல் சம உரிமை, சுருக்கமாக ராஜீவ்- ஜெயவர்த்தனே கண்ட ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை அரசு நிறைவேற்றிடல் வேண்டும்.
நடந்து முடிந்த போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாரபட்சமற்ற ஒரு விசாரணையும், இந்த குற்றங்களை செய்தவர்கள் மீது நடவடிக்கையும், தண்டனையும் கொடுத்தாக வேண்டும் என்பதும், பாலியல் பலாத்காரம், வன்கொடுமை, கொலை போன்ற செயல்களால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள், பிரபாகரன் குடும்பம் உட்பட உண்மை நிலை கண்டறியப்படவேண்டும் என கோரிக்கைகளில் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசிற்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராக இந்தியா வாக்களிக்காது என்ற கொள்கையை மாற்றிக் கொண்டு கடந்த முறை வாக்களித்தது தமிழர்களின் நலனுக்காக.
அப்போதும்கூட வாக்களிக்கும் என்கிற செய்தி கடைசி நேரத்தில்தான் இந்திய அரசால் சொல்லப்பட்டது. இன்று பொருளாதாரத் தடை இந்தியா மட்டும்தான் விதிக்க முடியும். அப்படி விதித்தால் இந்தியா இன்றைக்கு தமிழர் பகுதிகளுக்கு 50 ஆயிரம் வீடுகள், 10 ஆயிரம் சைக்கிள்கள், 1 லட்சம் விதை மூட்டைகள், 500 டிராக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊர்திகள், மருத்துவ உபகரணங்கள் கொடுத்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல, இடிந்துபோன பள்ளிக் கூடங்கள், பாழ் பட்டுக்கிடக்கின்ற மருத்துவ மனைகள் போன்றவற்றை இந்திய அரசு கட்டிக் கொண்டிருக்கின்றது.
ரயில் தண்டவாளங்கள் யாழ்ப்பாணம் பகுதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டும் இதற்காக 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தடைபட்டால் பரவாயில்லை என்று பொருளாதாரத் தடை கேட்பவர்கள் நினைக்கிறார்களா? இலங்கை அரசு சீனா போன்ற நாடுகளிடமிருந்து உதவி பெற முடியும். ஆனால் இலங்கை வாழ் தமிழர்களுக்கு இந்தியாவால் மட்டும்தான் உதவி செய்யமுடியும் என்று தெரிந்தும், ஏன் இவர்கள் அரசியலுக்காக பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை இந்தியா மட்டும் செய்ய முடியாது என்பதை அறிந்தவர்கள்தான் இவர்கள். ஒரு சுயமான நாட்டினுடைய உள் நாட்டு பிரச்சனையில் சில தீர்மானங்கள் ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு சபையினால் அங்கீகரிக்கப் படவேண்டும். இலங்கை தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டி பல்வேறு உதவிகளை செய்து வருகிற காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களையும், பிரதமரையும் இழிவுபடுத்துவதையும், கொடுமையாக சித்தரிப்பதையும் நாகரீகமான சமூகத்தினாரால் ஏற்றுக் கொள்ள முடியாது.
8 லட்சம் இந்திய வம்சாவழி தமிழர்கள் சிங்களர்களின் மத்தியில் பெருமளவில் வாழ்கிறார்கள் என்பதையும், இந்திய – இலங்கை உறவு துண்டிக்கப்பட்டால் இலங்கைவாழ் தமிழர்களை ஏன் என்று கேட்பதற்கு வேறு நாடு இல்லை என்பதையும் நண்பர்கள் உணர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய செயல்கள் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற அன்பான வேண்டு கோள் இது.
ஆகவே மாணவ நண்பர்கள் உண்மை நிலையை அறிந்திட வேண்டும். போராட்டத்தை கைவிட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முன்பு போலவே இந்தியா ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன். அது நடக்கும் என்று உறுதியோடு இருக்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடும் அதுதான். காங்கிரஸிற்கு எதிராக எவ்வளவு முயற்சி செய்து வாளையும், வேலையும் கூர் தீட்டினாலும், உண்மை ஒரு நாள் வெல்லும். இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான உரிமைகளை இந்திய அரசு பெற்றெடுத்து தருகிறபொழுது இலங்கைத் தமிழர்கள் எங்களை வாழ்த்துவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten