dinsdag 12 maart 2013

தமிழகம் எங்கும் பற்றி எரிகிறது மாணவர் போராட்டங்கள் !



இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் திடீரென நள்ளிரவில் கைது செய்ததை அடுத்து, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. இலங்கை மீதான சர்வதேச விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம், மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை தமிழர் பிரச்னைக்காக லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தனர். இம்மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்களின் ஆதரவு வலுத்து வந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிகாலையிலேயே மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் முடிவுக்குக் கொண்டு வந்தனர். இருப்பினும் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம் இருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்ஸி சேவியர் கல்லூரி மாணவர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலைகழக மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் லயலோ கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். 

சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் அடையாறில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அடையார் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள், காரைக்குடி அழகப்பா கல்லூரி, ஆனந்தா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், மன்னார்குடி என ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றனர்.

தமிழக அரசு நேற்று அதிகாலை லயோலா கல்லூரி மாணவர்களை கைது செய்த நடவடிக்கை, தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்களை பற்றி எரிய வைத்துள்ளது. இனி எத்தனை நகரங்களில் எத்தனை பேரை கைது செய்ய முடியும் ? தமிழகத்தில் எழுச்சிபெற்றுள்ள மாணவர்களின் தீ , தமிழ் நாடு முழுவதும் பரவும் !



Geen opmerkingen:

Een reactie posten