ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கு எதிராக பிரேரணையை முன்வைத்திருக்கும் அமெரிக்கா, அதனை பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்திலுள்ள ஒரு சில நாடுகளையும் தமது பக்கம் வளைத்துப்போடும் இராஜதந்திர முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடிப் போக்கு சிறிலங்காவுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் அதேவேளை, கொழும்புக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்திருந்த சில நாடுகளுக்கு பெரும் திரிசங்கு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆசிய நாடுகள் என்ற வகையில் இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கசகஸ்தான், குவைத், மலேஷியா, மாலைதீவு, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், கட்டார், கொரியக் குடியரசு, தாய்லாந்து, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் என்பன அங்கம் வகிக்கின்றன.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரிசையில் எஸ்தோனியா,செக் குடியரசு, மொண்டேநேக்ரோ, போலந்து, மோல்டோவா குடியரசு, ரொமேனியா ஆகியன அங்கம் வகிக்கின்றன.
ஆபிரிக்க நாடுகளில் பெனின், அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினோ பாஸோ, கொங்கோ, ஐவரிகோஸ்ட், எத்தியோபியா, கபோன், கென்யா, லிபியா, மொரிடானியா, சியரா லியோன், உகண்டா ஆகியன அங்கம் வகிக்கின்றன. இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகள் வரிசையில் ஆர்ஜன்ரீனா, பிரேசில், சிலி, கொஸ்டரிக்கா, ஈக்வடோர், கௌதமாலா, பெரு, வெனிசியூலா ஆகியவை இடம்பெறுகின்றன.
மேற்கு ஐரோப்பிய மற்றும் இதர நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ஒஸ்ரியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின்,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
இவற்றில் சுமார் 40 வரையான நாடுகள் அமெரிக்காவின் பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக கருதப்படும் சுமார் ஆறு அல்லது ஏழு நாடுகளுடன் இது விடயத்தில் நாளை திங்கள் முதல் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளை தங்களது பக்கம் வளைத்து போட அமெரிக்கா இறுதி நேரத்தில் எடுக்கும் இந்த முயற்சி இராஜதந்திர வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten