தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

தமிழக மாணவர்கள் நீதியின் குரலாய் புறப்பட்டு விட்டனர்!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்


ஒரு சமூகத்தினதும் நாகரீகத்தினதும் பெருமை அது எவ்வளவு தூரம் நீதியைப் போற்றுகிறது, நீதிக்காய் போராடுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு ஆரதவாக தமிழக மாணவர்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு சமூகத்தின் மனச்சாட்சிதான் அதன் பண்பாட்டின் அளவை தீர்மானிக்கின்றது. இந்த வகையில் தமிழக மாணவர்கள் தமிழகத்தினதும், இந்தியாவினதும், மனித குலத்தினதும் மனச்சாட்சியால் எழுந்து நிற்கின்றனர்.
அவர்கள் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குரலாய் மட்டுமன்றி, நீதிதேவனின் பிரதிநிதிகளாயும் வீரியத்துடன் எழுந்து நிற்கின்றனர்.
இது ஈழத்தமிழர்களுக்காய் நீதிகோரும் விடயம் மட்டுமல்ல, அவ்வாறு நீதிகோரியதன் பெயரால் தமிழக மக்களதும் இந்திய மக்களதும் நற்பெயரை வரலாற்றில் பதிக்கப் போகின்றார்கள்.
நீதிக்காய் போராடுபவர்களே வரலாற்றை படைக்கிறார்கள். அவர்களே தாம் சார்ந்த மக்களுக்கு கௌரவத்தையும் தேடிக்கொடுக்கிறார்கள்.
இதனால் தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழக மக்களுக்கும் தொன்மை மிகுந்த தமிழ் நாகரீகத்துக்கும் ஒரு கௌரவத்தை தேடிக்கொடுக்கும் என்பதில் ஜயமில்லை. எங்கள் குரல்வளைகள் நசுக்கப்பட்ட நேரத்தில் எங்களை நாங்களே கண்ணாடியில் பார்க்கும் உணர்வைத் தருகிறது.
எங்கள் உள்ளுணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள். நீதிக்காய் போராடுபவன் நீதியினால் தன்னையும் வரலாற்றையும் நிலைநிறுத்துகின்றான்.
தமிழக மாணவர்களின் பாசம் மிகுந்த போர்க்குரல் இன்னல் படும் ஈழத்தமிழர்களின் செவிகளில் தேனாய் இனிக்கிறது.
இவ்வளவு இழப்புக்களின் பின்பும் தாம் தனித்துவிடப்படவில்லை என்ற தெம்பை தமிழக மாணவர்களின் போர்க்குரல் எமக்கு ஏற்படுத்துகின்றது.
கொல்லப்பட்ட அவதியுறும் ஆத்மாக்களுக்கு இந்த போர்க்குரல் ஒரு சாந்தியைக் கொடுக்கும் என்பதில் ஜயமில்லை. இம்மாணவர்கள் இப்போது ஒருதொடர்கதையை உயர்த்தி பிடித்து விட்டனர்.
இனி அது தர்ம சக்கரமாய் மேல்நோக்கி சுழலும், தமிழகத்தை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், தமிழக கட்சிகளும், தமிழகத்தை மையம் கொண்டுள்ள தேசியக் கட்சிகளும் இடதுசாரிக்கட்சிகள் உட்பட பொது அமைப்புகளும் பொதுமக்களும் மாணவர் போராட்டத்தை ஆதரித்து வருவது தமிழகத்தின் தர்மச்சக்கரம் மேல் நோக்கி சுழலத் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten