donderdag 14 maart 2013

மாந்தீவுதான் மட்டு.சிறைச்சாலைக்கு பொருத்தமான இடம்!- விநாயகமூர்த்தி முரளிதரன் !!


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள சிறைச்சாலையை அங்கிருந்து அகற்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு சிறைச்சாலையை அது தற்போது அமைந்திருக்கும் இடத்திலிருந்து அகற்றி அந்த இடத்தை மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை விஸ்தரிப்பதற்காக வழங்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது விடமயாகப் தான் சிறைச்சாலைகள் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளோம். இதனை இங்கிருந்து அகற்றி மாந்தீவுக்குக் கொண்டு போவது பற்றி ஏற்கனவே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
மாந்தீவுதான் சிறைச்சாலைக்குப் பொருத்தமான இடம். மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு வேறு காணிகள் இல்லை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் ஒரேயொரு அரச காணி மட்டக்களப்பு சிறைச்சாலை அமைந்துள்ள வளாகம்தான்.
எனவே அதனை இடம் மாற்றினால் மட்டக்களப்பு வைத்தியசாலை விரிவாக்கம் பெறும். அதேவேளை சிறைச்சாலை இல்லாத நகரமாகவும் மட்டக்களப்பு நகரம் இருக்கும் என்றார்.
இதேவேளை இவ்வருட இறுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் சிகிச்சைப் பிரிவு இயங்க ஆரம்பித்து விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten