தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

யாழ். வலி. வடக்கில் படையினருக்கு தேவையான காணிகள் சுவீகரிக்கப்படும்! அமைச்சர் தென்னக்கோன்


வலி.வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டுக்கென தேவையான காணிகள் சுவீகரிக்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நேற்று திங்கட்கிழமை வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காணிகளை சுவீகரிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இக்குழுவில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த 4 பேர் அடங்குவார்கள் என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலேயே யாழ்.மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலய காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காணமுடியவில்லை. காணிகளை விடுவிக்குமாறு கோரி கூட்டமைப்பினர் நீதிமன்றில் தொடர்ந்துள்ள வழக்குகளாலேயே உயர் பாதுகாப்பு வலய காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் உள்ளூர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அமைச்சர் மழுப்பும் போக்கில் பதிலளித்தார்.
வடக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காகவே யாழ்.மாவட்டத்தில் காணி அமைச்சின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள், மீள்குடியேற்றப்படவேண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுடைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் எனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபா பணத்தினை ஒதுக்கியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 2 இலட்சத்து 50 ஆயிரம் காணித் துண்டுகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன.
அவற்றை தீர்ப்பதற்கு காணி அலுவலகம் மிகவும் உதவியாக இருக்கும். காணி சுவீகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் 4 இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
6 ஆயிரத்து 224 காணித்துண்டுகள் தொடர்பான பிரச்சினையே வலி,வடக்கில் உள்ளது.
அவற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணித்துண்டுகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை எனத் தெரியவருகிறது.
எனினும் உண்மையான தகவல்களை தற்போதும் திரட்டி வருகின்றோம் எனவும் காணி அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten