தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 20 !!


உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது, பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது’ என்ற மகாத்மா காந்தியின் சொற்களே ஹட்டனின் ஒரு வீதியில் பொறிக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அழைத்து வரப்பட்ட கூலிகளான மலையகத் தமிழர்கள், ஆங்கிலேயன் சென்ற பிறகும் உழைக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் எப்படி இலங்கையின் மலையகத்துக்கு வந்தனர்? இலங்கையின் விடுதலைக்கு முந்தைய காலத்தில், தமிழகத் தமிழர்கள் மட்டும் அங்கு இருக்கவில்லை, மலையாளிகளும் அங்கு இருந்தனர்.
இவர்களின் பெரும்பாலானோர் அன்று வைத்திருந்தது தேநீர் கடைகள்தான். இலங்கையின் விடுதலைப் போராட்டக் காலத்தில் மலையாளிகளும் தாக்கப்​பட்டனர்; கொல்லப்பட்டனர். இலங்கையின் விடுதலைப் போராட்டம் என்பதே உரிமைகள் பெறும் போராட்டமாக இல்லை, உரிமையின் பெயரால் 'புத்த மதத்தைப் பரப்பும்’ போராட்டமாகத்தான் இருந்தது.
1815 முதல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள், ராமேஸ்வரம் வழியாக மன்னாரை அடைந்து, பின் ஹட்டன் போன்ற மலையகத்தின் பிற பகுதிகளை அடைவார்கள். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, மலையகத் தமிழர்​களை அடிமைப்படுத்தும் விதம் ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களர்களிடமும் தோட்ட முதலாளிகளிடமும் மாறியது.
நுவரெலியா நோக்கிச் செல்லும்போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவரைச் சந்தித்தேன். அவர், ''நான் பிறந்து வளந்தது எல்லாம் இங்கதான். எங்களுக்கு நடந்துவரும் கொடுமைய, நான் பிறந்ததில் இருந்து பார்த்து வர்றன். அந்தக் கொடுமைகள் இன்றும் நிற்கல. எங்கள ஏமாற்றிக்கிட்டே இருக்காங்கள். எங்களுக்கு கிடைக்கும் தலைவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்காங்கள்.
எங்கள் ஊரு அரசியல்வாதி ஒருவரைப் பார்த்து, 'என்ன சார் ஊர் பக்கமே வரதில்ல?’னு கேட்டேன். அதுக்கு அவர், 'இங்க வேல அதிகமா இருக்கு’னு சொன்னார். அவர், தேர்தல் நேரத்துல எங்கள் ஊரே கதின்னு கிடந்தவர்.
மத்த அரசியல்வாதி மாதிரி இல்லாம, நிலமைய மாத்திக்காட்டறன்னு வாக்குறுதி கொடுத்தாரு. அத நம்பி ஓட்டுப்போட்ட எங்கள இப்ப பாக்கக்கூட நேரமில்லன்னு சொல்றாரு. கொடுத்த போன் நம்பர மாத்திட்டாரு'' என்று வேதனையில் வெம்பினார்.
இவரைப்போல் மலையகம் அன்றும் இன்றும் சந்தித்த பிரச்னைகளின் நிலையை, கண்டுகொள்ளப்படாத மலையக மக்​களின் வாழ்வைப் பற்றி, மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், பல விஷயங்களைக் குறிப்பிட்டார். அவர், ''1948-ம் ஆண்டுக்குப் பிறகு (இலங்கை சுதந்திரம் பெற்ற பின்) திட்டமிட்ட ரீதியாக மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
சிங்கள அரசின் கொடுங்கோல் அடக்குமுறைகள், முதன் முதலில் மலையகத் தமிழர்களை நோக்கித்தான் பாய்ந்தது, அவர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்துதான் வடகிழக்கு மக்கள் மீதான தாக்குதலை நடத்தியது சிங்கள அரசு.
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை இந்தியாவோ உலகமோ தட்டிக் கேட்கவில்லை. 1948 முதல் 1983 வரை நடந்த இன வன்முறைகளில் இவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் தனி நாடு எதுவும் கேட்காதவர்களாக இருந்தாலும், தமிழர்கள் என்ற ரீதியில் இவர்களும் தாக்கப்பட்டனர். அந்த இன வன்முறைகளில் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கை நோக்கி நகர்ந்தனர்.
1977-ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த​போது, மிக மோசமான வன்முறைகள் நடந்தன. அதில் பெரும் அளவிலான மலையக மக்கள் இடம்பெயர்ந்தனர். அப்போது ஜனாதி​பதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 'மலைய​கத்தில் உள்ள தமிழர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்புவது... அல்லது இலங்கை​யின் வடகிழக்குக்கு நகர்த்துவது நல்லது’ என்று சொன்னார்.
இலங்கை மலையகங்களில் உள்ள தமிழர்கள் பெரும்​பான்மையாகப் பெருகிவிடக் கூடாது என்ற குரூரத்துடன் ஆட்சி புரிந்துள்ளனர்.
அப்படி வடகிழக்குக்குச் சென்றவர்கள் சிரமப்பட்டாலும், உழைப்பை உறிஞ்சும் மலையகத் தோட்டப்புறச் சூழலில் இருந்து அவர்கள் விடுதலை பெற்றிருந்தனர். தேயிலைத் தோட்டத்திலும் ரப்பர் தோட்டத்திலும் கூலித் தொழிலாளர்களாக வேலைசெய்தவர்கள், வடகிழக்குக்குச் சென்று விவசாய நிலத்தில் வேலைசெய்தனர்.
அப்படி இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுள் பலர், வடகிழக்கில் செயல்பட்டு வந்த விடுதலை இயக்கங்​களிலும் இணைந்திருந்தனர். இந்த வேளையில் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தப்படி, மொத்தம் இருந்த 9,75,000 பேரில் 6 லட்சம் பேரை இந்தியாவுக்குத் திரும்ப அழைப்பது என்றும், மீதம் இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அப்போது குடியுரிமை வழங்கப்பட்டது.
அதன்பிறகு, வடகிழக்கில் போர் நடக்கையில் கொல்லப்படும் சிங்கள ராணுவத்தினரின் உடல் தென்னிலங்கைக்கு போகும்போது எல்லாம், தென்னிலங்கையில் வாழும் குறைந்தளவிலான தமிழர்கள் தாக்கப்படுவார்கள்.
இராணுவத்துக்கு எதிரான போராட்டமோ, தாக்குதலோ வடகிழக்கில் நடந்தால், இன்றும் மலையகத்தின் தோட்டப்புறத் தொழில்களில் சிக்கியுள்ள தமிழர்கள் தாக்கப்​படுவார்கள்; விசாரணைக்கு இழுத்துச் செல்லப்​படுவார்கள்; சந்தேக வழக்கில் பிடித்துச் செல்லப்​பட்டு கொல்லப்படுவார்கள்.
போர் சமயத்தில் தமிழர்கள் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. போரில் மலையகத்தில் இருந்து இடம்​பெயர்ந்த தமிழர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதையே யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.
போரின்போது மட்டுமல்ல... வதை முகாம்களில் தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த காலத்திலும், ஈழத் தமிழர்களுக்கு இணையாக மலையகத் தமிழர்களும் பாதிக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்.
மலையகத் தமிழர்களுக்கு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களோடு உள்ள தொடர்பு மிகவும் சொற்பமே. போருக்கு முன்னர் இரணைமடு போன்ற பகுதிகளில் அவர்கள் மீன் பிடியிலும், வடகிழக்கில் இன்னும் பிற தொழில்களையும் செய்துவந்தனர்.
முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மலையகத் தமிழர்கள், முன்பு இடம்பெயர்ந்து வாழ்ந்த பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்களை ராணுவம் திரும்பவும் மலையகத்தின் தோட்டங்களுக்கே போகச் சொல்கிறது.
வடகிழக்குக்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் முகாம்களில் இருந்தபோது, தென்னிலங்கையில் இருந்த அவர்களின் உறவினர்களே வந்து பார்க்க மாட்டார்கள். 'வந்தால், ராணுவத்திடம் சிக்கிக்கொள்வோமோ’ என்ற பயத்தால் அவர்கள் முகாம்களில் இருந்த உறவினர்களோடு தொடர்பையே துண்டித்துக்கொண்டனர்.
இந்தியா முன்வைத்த 13-வது பிரிவிலும் தோட்டத் தொழிலாளர்களை எந்த வகையிலும் உள்ளடக்கவில்லை. இந்தியாவைச் சேர்ந்த இவர்களையே கைவிட்டுவிட்டு, வடகிழக்கில் உள்ள மக்களை இந்தியா காப்பாற்றப்போகிறதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இவரின் குறிப்புகளைப் போலவே போரின் முடிவுக்கு பிறகு, இன்று நடந்துகொண்டு இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் விதம் மிகவும் மோசமானது. இப்போது தமிழர்களை, பொதுவாக தமிழர்கள் என்று பதிவது இல்லை. 'கொழும்புச் செட்டி, வணிகத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர்’ என்று பிரித்துப் பிரித்துப் பதிவு செய்கின்றனர்.
இதன் வழியே தமிழர்களுக்கு இடையே பெரும் முரண்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நினைக்கிறது. இலங்கை எங்கும் தமிழர்களை சிறுசிறு குழுக்களாகப் பிரிப்பதன் மூலமாகவும் சிங்களர்களைப் பரவலாக்குவதன் மூலமாகவும் தமிழர்களை சிறுபான்மை இனமாக்கி, அந்த சிறுபான்மைப் பிரிவுக்குள்ளே மேலும் தமிழர்களை சிறுபான்மை ஆக்கும் வேலை நடக்கிறது.
இதன் மூலம் உண்மையில் பல கலப்புகளையும் நிலைகளையும்கொண்ட சிங்கள இனம், பெரும்பான்மை இனம்போல காட்டப்படும் என்பது இப்போதே துல்லியமாகத் தெரிந்தது.
மாவீரர் தினத்தை அனுசரித்த யாழ்ப்பாண மாணவர்களை ராணுவமும் போலீஸும் தாக்கியதற்காக ஓர் அமைதிப் போராட்டம். 'பேச்சுரிமையையும் வாழ்வுரிமையையும் கொடு’ என்ற அந்தப் போராட்டத்தின் நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் நோக்கி நகர்கிறேன்.
ஊடறுத்துப்பாயும்..
ஜூனியர் விகடன்

http://www.tamilwin.net/show-RUmryDSXNYhty.html

Geen opmerkingen:

Een reactie posten