dinsdag 19 maart 2013

சர்வதேச சமுதாயத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை!- நியுலன்ட் தெரிவிப்பு


சர்வதேச சமுதாயத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இதுவரை இலங்கையில் நடைபெற்றுள்ள முன்னேற்றங்கள் போதுமானவை அல்ல. இவ்வாறு  அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலன்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலண்ட் நேற்று வாஷிங்டனில் கூறியதாவது:-
இலங்கையின் போருக்கு பிந்தைய முன்னேற்றப் பணிகளில் நிலவி வரும் பின்னடைவைப் பற்றி கவலை கொண்டுள்ள நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்துள்ளது.
எங்களது செயல்பாடு இலங்கைக்கு ஆச்சரியத்தை தராது. ஏனெனில், எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகவும், வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் நாங்கள் ஏற்கனவே இலங்கைக்கு தெரிவித்துவிட்டோம்.
இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, எங்கள் தீர்மானத்தின் மீது நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் முன்வைத்துள்ள தீர்மானத்திற்கு பலத்த ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
சென்ற ஆண்டு இலங்கையின் வெளியுறவு துறை மந்திரி அமெரிக்கா வந்திருந்த போது, இலங்கையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாவிட்டால் நாங்கள் ஒருபடி மேலே செல்ல வேண்டியிருக்கும் என அப்போதைய வெளியுறவு துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இலங்கை மந்திரியிடம் தெளிவுப்படுத்தியிருந்தார். தற்போது நாங்கள் அதையே தான் செய்துள்ளோம்.
சர்வதேச சமுதாயத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அவை நிறைவேற்றப்படாததால், இதுவரை இலங்கையில் நடைபெற்றுள்ள முன்னேற்றங்கள் போதுமானவை அல்ல என்பதை ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா தீர்மானமாக முன்வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten