தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 december 2010

இப்படியும் சிலர், இவர்கள் மட்டுந்தான் சிந்தனையாளராம்!! மற்ற தமிழர் எல்லாம் மந்தைகளாம்!!

ஊடகவியலாளர் இசைப்பிரியாவை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்தது ரவிப்பிரிய 
[ வியாழக்கிழமை, 02 டிசெம்பர் 2010, 10:33.51 AM GMT +05:30 ]

இந்த வருட மாவீரர் வாரம் தரும் செய்தி என்ன? : அனலை நிதிஸ் ச. குமாரன்
[ திங்கட்கிழமை, 06 டிசெம்பர் 2010, 02:22.36 AM GMT +05:30 ]
இந்த வருடம் கடைப்பிடிக்கப்பட்ட மாவீரர் வாரம் பல செய்திகளை உலகத்தமிழருக்கும் சிங்கள இனவெறி அரசிற்கும் தந்துள்ளது. புலிகளை அழித்துவிட்டதாகவும், தமிழர்களை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாகவும் கொக்கரிப்பதனால் தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு முடிவு வரப்போவதில்லை.

தமிழர்களின் அரசியல் பிரச்சினையை தீர்க்காமால் கபட நாடகம் ஆடி தமிழர்களின் மனங்களை வெல்லலாம் என்பது பகல் கனவே. சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு அதிகாரங்களையளித்து அவர்தம் பூமியில் சுமூகமான வாழ்வு வாழ அனுமதியாதுவரை சிறிலங்காவில் அமைதி திரும்பப்போவதில்லை.
புலிகள் ஆயுத பலத்துடன் இருந்தவேளை புலிகள்தான் சமாதானத்திற்கான கதவை மூடி வைத்திருந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறிய சிங்கள அரசுகள், கடந்த வருடத்தில் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னர் புலிகளை வென்று அதன் தலைவரை கொன்று நந்திக்கடலில் கரைத்துவிட்டதாக சொல்லி தம்மையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வேலையில் இறங்கியது மகிந்த ராஜபக்சாவின் அரசு. வன்னி நிலப்பரப்பை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த வேளையில் தமிழ் மக்களும் புலிகளும் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டேதான் இருந்தார்கள்.
ரணிலுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் எந்தவொரு இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த இடங்களை கைப்பற்றவில்லை. நோர்வே அரசின் தலைமையில் இடம்பெற்ற ஒப்பந்தத்தை எந்தளவுக்கு புலிகள் மதித்து நடந்தார்கள் என்பதை இது காட்டுகின்றது. சிங்கள இராணுவம் வலிந்த தாக்குதலை கிழக்கில் மேற்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த நிலங்களை கைப்பற்றும் வேளையில் புலிகள் பலமுறை மௌனம் காத்தார்கள். சிங்கள ஆக்கிரமிப்பின்கீழ் இருந்த சம்பூரை கைப்பற்றி வெற்றிமீது வெற்றிபெற்று படையை நகர்த்தும் வேளையில் உலகநாடுகளின் தயவை நாடியது சிறிலங்கா அரசு. உலகநாடுகளின் வேண்டுதலுக்கு இணங்க தாம் கைப்பற்றிய இடங்களிலிருந்து பின்வாங்கியது புலிப்படை. அன்று நினைத்திருந்தால் சிங்கள இராணுவத்திற்கும் கடற்படைக்கும் புலிகள் பாரிய இழப்பை உண்டுபண்ணியிருக்கலாம். புலிகள் அதைச் செய்யவில்லை காரணம் பிரபாகரனால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறமாட்டோம் என்கிற கோட்பாட்டில் இருந்தார்கள் புலிப்படையினர்.
அடிமேல் அடிகொடுத்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றும் வலிந்த தாக்குதலை இராணுவம் மேற்கொள்ளும்போது தற்காப்பு போர்முறையையே மேற்கொண்டு உலகநாடுகளின் வேண்டுதலுக்கு மதிப்பளித்து இறுதியில் ஆயுதங்களை மௌனித்தார்கள் புலிப்படையினர். எதிரியின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் ஆற்றல் படைத்தவரே பிரபாகரன் என்பது அவரின் பரம எதிரிக்கும் தெரியும். தமிழீழ மக்களின் சுமூக வாழ்வு மற்றும் அவர்களின் விடுதலையே புலிகளின் பல வருட போராட்டத்திற்கான காரணம். வெறும் கண்துடைப்புக்காக வெளிநாடுகளை ஏமாற்றி பணம் பெறுவதற்காக நரித்தந்திர வேலையை மகிந்தா அரசு மேற்கொள்கிறது. பல உலகநாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு உதவிகளையும் செய்கிறது. பாவப்பட்ட தமிழினம் இன்றும் சொல்லொனாத் துயரையே அனுபவிக்கிறது.
புலிகள் ஆயுத பலமுடன் தனியரசையே நடாத்திக்கொண்டு இருந்தவேளை தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை இருக்கிறதுதான் என்று சொன்ன சிங்கள அரசியல்வாதிகள் இன்று தமிழர்களுக்கென்று குறிப்பிடப்படும் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் சொந்தமில்லை என கூறுவதுடன் சிங்களவர்களை குடியமர்த்தும் வேலையில் இறங்கி வேகமாக செயற்படுத்துகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் பலமுறை இதைத் தடுப்பதற்கு பிரயத்தனங்களை எடுத்தும் தோல்வியிலையே முடிந்துள்ளது. தமிழர்களின் பிரச்சினையை சிங்கள தேசம் ஒருபோதும் சமாதான வழியில் தீர்க்காது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
புலிகளின் அறிக்கையின் முக்கியத்துவம்
சிங்கள அரசின் கபடத்தனமான நடவடிக்கைகள் மீது துளியளவேனும் நம்பிக்கையில்லையெனத் தெரிந்தும் சமாதானக்கதவை ஏன் புலிகள் திறந்து மூன்றாம் நாடொன்றின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள் என விளக்கமாக தெரிவித்துள்ளது புலிகளின் இந்த வருட அறிக்கை. பிரபாகரனின் மாவீரர் உரை எவ்வாறு அறிக்கைவாயிலாக வருமோ அதைப்போலவே இந்த வருடமும் புலிகளிடத்திலிருந்து வந்திருக்கிறது அறிக்கை. இவ்வறிக்கையின்படி புலிகள் சிங்கள அரசுகளை நம்பி பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. வெளிநாடுகளின் நிர்ப்பந்தத்தினாலும் தமிழீழ விடுதலையை பெறும் நோக்கிலையே விடுதலைப்புலிகள் இப்படியான ஒரு இக்கட்டான நிலையை எடுக்க வேண்டிவந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது புலிகளின் அறிக்கை.
தமதறிக்கையில் புலிகள் தெரிவித்துள்ளதாவது: “சிங்களப் பேரினவாத அரசு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு அவற்றை மூர்க்கத்தனமாக எதிர்த்தும் வருகின்றது. கூடவே மனித உரிமை அமைப்புக்களினது வேண்டுகோளையும் கரிசனைகளையும் உதாசீனப்படுத்துகிறது. சுயாதீனமான விசாரணையொன்று நடைபெறுவதை எப்பாடுபட்டாவது தடுத்து விடுவதில் சிறிலங்கா அரசு குறியாகவே இருக்கின்றது. இவ்வாறு ஒருபக்கம் சுயாதீனமான பன்னாட்டு விசாரணை முயற்சிகளை நிராகரித்துக் கொண்டு கண்துடைப்புக்காக தானே ஒரு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இப்படியான விசாரணைக்குழுக்கள் தொடர்பில் தமிழர்களுக்கு மிக நீண்டகால அனுபவமுண்டு. அவ்வகையிலேயே சிறிலங்கா அரசு அமைத்திருக்கும் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு” என்ற நாடகமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா அரசின் இந்தச் சூழ்ச்சியில் உலகநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் வீழ்ந்து விடாமலிருக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் வேண்டுகோளாகும்."
“எமது விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் போர்நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளோம். சமாதானப் பேச்சுக்களில் பங்கெடுத்துள்ளோம். இக்காலகட்டத்தில் எதிரி மேற்கொள்ளும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொண்டும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுக்களுக்குச் சென்றுள்ளோம். அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் உலகநாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எப்போதும் நாம் மதிப்பளித்தே வந்துள்ளோம். அவ்வகையில் 2002-ஆம் ஆண்டு நோர்வே தலைமையிலான சமாதான ஏற்பாட்டாளர்களின் துணையோடு சிறிலங்கா அரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொண்டோம். சிங்களப் பேரினவாத அரசாங்கங்களோடு தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்திய பல உடன்படிக்கைகள் காலத்துக்குக் காலம் சிங்கள அரசாங்கங்களால் தூக்கி வீசப்பட்டன. தமிழர்களாகிய நாம் எப்போதுமே எந்த உடன்படிக்கையிலிருந்தும் நாமாக விலகிக் கொண்டதில்லை. அதேபோலவே 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்தும் இறுதிவரை வெளியேறாமலே இருந்தோம். ஆனால் மகிந்த இராஜபக்ச அரசு அவ்வுடன்படிக்கையைக் கிழித்தெறிந்து நோர்வேயின் நடுநிலைமையையும் அசட்டை செய்து தமிழர் தாயகமெங்கும் பெரும்போரை நடாத்தி மாபெரும் மானுட அழிவைத் தமிழர்மேல் கட்டவிழ்த்து விட்டது. தமிழர் தேசத்தில் தமிழர்களை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்பவர்களைப் போலவே இப்போது நடாத்தி வருகின்றது. மகிந்த இராஜபக்ச அரசானது நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நடுநிலைத் தன்மையைக் கேலிக்குரியதாக்கி இருக்கின்றது."
தமிழர்களை எமாற்றுமுகமாகவேதான் சிறிலங்கா பல செயல்களை செய்துகொண்டுவந்துள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூலமாக புலிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். கடந்த வருடத்தில் இடம்பெற்ற மனித பேரவலத்திற்கு பின்னர் உலகநாடுகள் தமிழர்களின் போராட்டத்தைப் பற்றிய உண்மை நிலையை அறிய முனைந்திருக்கிறது என்றால் மிகையாகாது. மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் வந்துவிடக்கூடாது என்றால் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு நிரந்திர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமென்பதே பல மேற்கத்தைய நாடுகளின் கருத்து. இவ் நாடுகளின் வேண்டுதலை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் புலிகள் மீண்டும் ஆயுதங்களை எடுப்பார்கள் என்பதே பல நாடுகளின் கருத்து.
மேற்கத்தைய நாடுகளின் வேண்டுதலை நிறைவேற்றாமல் சிங்கள அரசுகள் தமிழர்களை ஏமாற்றியது போன்று வெளிநாடுகளையும் ஏமாற்ற முனைந்தால் தக்க பாடங்களை இந்நாடுகளே மறைமுகமாக கற்பிக்க வேண்டிவரும். இதை நன்கே புரிந்துகொண்ட புலிகள் நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதான காலப்பகுதியில் அவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்ற நிலையை பல உலகநாடுகளுக்கு பல முறை புலிகள் உணர்த்தியுள்ளார்கள். முன்னர் பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கபட்ட பல அமைப்புக்கள் இன்று விடுதலை இயக்கங்களாக உலகநாடுகளினால் அங்கீகரிக்கபட்டுள்ளனர். தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா கூட பயங்கரவாதியாகவே அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இவரை இன்று சமாதானத்தின் தூதுவர் என்றும் போராட்ட வீரர் என்றும் உலகமே போற்றுகின்றது.
புலிகள் தமதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: “இலங்கைத்தீவில் தமது இறைமையைப் பேணியபடி தம்மைத்தாமே ஆட்சி செய்துகொண்டிருந்த தமிழினம் படிப்படியாக மேற்குலக நாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் இறுதியில் இலங்கைத்தீவைக் கைவிட்டுச் சென்றபோது தமிழரின் அரசியல் உரிமைகளைச் சிங்களப் பெரும்பான்மையினத்திடம் நிரந்தரமாகக் கையளித்துச் சென்றார்கள். பிரித்தானியரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமிழினத்தின் மீதான கொடுமைகள் சிங்களப் பெரும்பான்மையினத்தால் இனவெறியோடு மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கெதிராக தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்கள் பலனற்றுப்போன நிலையிலும் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த நிலையிலும்தான் எமது மக்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தெரிவு செய்தார்கள். உலகநாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தை வழிமுறையாகக் கொண்டு விடுதலைபெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமை எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர். ஆயினும் பல நாடுகள் தமது சொந்த பிராந்திய அரசியல் – பொருளாதார நலன்களுக்காக எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் தொடர்பில் பாராமுகமாக இருந்தமை கவலைக்குரியது. சில வல்லரசுகள் இன்னும் ஒருபடி மேற்சென்று எமது போராட்டத்தை நசுக்கவும் அடியோடு அழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் துணைபுரிந்து கொண்டிருப்பது நியாயமற்றது."
மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நீண்டகாலமாக பெரும்பான்மையினத்தின் அனைத்துவித அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு தமது விடுதலைக்காக வீறுடன் போராடிக்கொண்டிருந்த ஓரினத்தை ஒட்டுமொத்தமாகச் சிதைக்கவென நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையில் சிலநாடுகள் அணிதிரண்டு உதவியளித்தபோது மனித உரிமைகளைப்பற்றி பெரிதாகப் பேசிக்கொண்டிருந்த நாடுகளும்கூட கண்டுகொள்ளாமல் இருந்தமை தமிழ்மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகவே உள்ளது. உலக வரலாறு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும் சரி அதன்பின்னரும் சரி உலகம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்கவில்லையென்பது தமிழ்மக்களை வேதனையின் விளிம்பில் கொண்டுபோய் விட்டுள்ளது. போரில் வெற்றிபெற்றதாக மமதையோடு அறிவித்த சிங்களப் பேரினவாத அரசு அதன்பின்னர் நடந்துகொண்ட நடந்துகொள்ளும் முறையும் மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது.”
“தமிழினத்தின் ஆன்மாவையே சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எமது மக்கள் தமது உயிரினும் மேலாக மதித்துப் பூசித்துவந்த மாவீரர் துயிலுமில்லங்களை முற்றாக அழித்து அவை இருந்த இடமே தெரியாத வண்ணம் மாற்றியமைத்துள்ளது. தமிழர் பகுதிகளில் எஞ்சியுள்ள பண்டைய வரலாற்றுச் சின்னங்களையும் தேடித்தேடி அழித்தும் வருகின்றது. தமிழர் தாயகத்தில் புதிது புதிதாக முளைத்துவரும் புத்தர் சிலைகளும் விகாரைகளும் எமது தேசிய அடையாளத்தைச் சிதைக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் மறைமுக நடவடிக்கையே. இவை தனியே மத அடையாளங்கள் என்பதையும் தாண்டி எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நோக்கோடு ஆண்டாண்டு காலமாக சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த சதித்திட்டங்களே. எமது விடுதலை இயக்கம் தாயகத்தில் பலம்பெற்றிருந்தபோது முடக்கப்பட்டிருந்த இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு தற்போது தீவிரமாக எமது தாயகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது."
இராஜதந்திரத்தினூடாகவே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடைய முடியுமென்பதே புலிகளின் நிலைப்பாடு என்பதை இவ்வறிக்கையினூடாக தெட்டத்தெளிவாக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வுஇ அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா அரசு நிகழ்த்திக்கொண்டிருப்பது நில ஆக்கிரமிப்பே தவிர தமிழ் மக்களுக்கான நிம்மதியான வாழ்வாதாரமன்று. ஆங்காங்கே சிங்களக் குடியிருப்புக்களும் படைக்குடியிருப்புக்களும் நிறுவப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியல்ல. அபிவிருத்தியென்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பை ஒருபுறம் நிகழ்த்திக்கொண்டு தமிழரின் இனப்பரம்பலைச் சிதைத்து இலங்கைத்தீவை முழுமையான ஒரு சிங்கள–பௌத்த நாடாக்கும் கைங்கரியத்தைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது சிங்களப் பேரினவாத அரசு என்பதை நினைவுபடுத்தி இவ்வறிக்கை வாயிலாக புலிகள் தெரிவித்துள்ளார்கள்.
புலிகளின் இந்த வருட அறிக்கை முன்னைவிட அதி மதிநுட்பத்துடன் வரையப்பட்ட அறிக்கை என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பிடப்பட்ட நிலப்பரப்பில் தனி அரசையே நடத்தி வந்த புலிகளை கலைத்து ஒரு கூண்டில் வாழ்ந்த குருவிகளை எப்படி கலைத்துவிடும் செயல்போன்றேதான் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீதும் செய்தது. தமிழர்கள் பட்ட துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. ஈழ விடுதலையின் ஆரம்பக்கட்ட ஆயுத போர் காலத்தில் கரந்தடி முறையிலான பாணியில் யுத்தம் செய்து பாரிய இழப்புக்களை எதிரிக்கு கொடுத்தே எதிரியானவனை கலங்கடித்தார்கள் தமிழ்ப் போராளிகள். மீண்டும் அப்படியானதொரு நிலையை சிங்கள அரசு தமிழர்கள் மீது திணிக்கக்கூடாது என்பதையே புலிகளின் இந்த வருட மாவீரர் அறிக்கை மூலமாக உணரமுடிகிறது. ஆகவே இந்த வருட புலிகளின் அறிக்கை அதியுயர் முக்கியத்துவத்தை பெறுகிறது.
யுத்தத்தை திணிக்காமல் தீர்வு காண்பதே சாமத்தியம்
புலிகள் அழிந்துவிட்டார்கள் என்ற மமதையில் காலத்தை வீணடித்து தமிழர்களை ஓரம்கட்டலாம் என்ற நிலை சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களில் இருக்கிறது. இதனை அகற்றி தமிழர்கள் கோரும் சுயநிர்ணய உரிமையை சமாதான வழியில் வழங்கி ஒன்றுபட்ட நாட்டில் இரு தேசங்கள் என்ற நோக்குடன் கையாள்வதே சாலச்சிறந்தது. அதைவிடுத்து வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதைபோல் இருக்காமல் மீண்டும் போர் மூளாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்.
இறுதிப்புலி இருக்கும்வரை தமிழீழப் போராட்டம் தொடரும் என்ற கருத்தை உள்வாங்கி சிங்கள அரசு செயற்படுமேயானால் சிறிலங்கா மீண்டுமொரு யுத்தத்தை தடுக்கலாம். முன்னர் எப்போதும் இல்லாதவாறு கோபத்துடன் இருக்கிறார்கள் தமிழ் மக்கள். இவர்களின் கோபத்தை அடக்கி அவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை உண்டுபண்ணவேண்டுமென்றால் அவர்கள் வேண்டி நிற்கும் கோரிக்கையை நிவர்த்திசெய்வதே ஒரே வழி. தலைவரை சூரியக் கதிரொளியாலேயே சாகடிக்க முடியாது என்று உறுதிப்பட தெரிவித்திருந்தார்கள் புலிகள் என்பதை ஞாபகத்தில் வைத்து சிங்கள அரசு செயற்பட வேண்டும். ஈழப் போர் எவ்வாறான பின்னடைவைச் சந்தித்தாலும் மீண்டும் புத்தெளிச்சிபெற்று புதிய யுக்திகளுடன் களம் காண்பதுவே புலிகளின் வரலாறு என்பதை ஈழப்போரின் வரலாற்றை படித்தவர்களுக்கு தெரியும்.
இவ்வருட மாவீரர் தின அறிக்கையிலும் புலிகள் தமது நிலைப்பாட்டை உறுதிப்பட தெரிவித்துள்ளதாவது: “தமிழீழ விடுதலைப் போராட்டம் இப்போது பல சவால்கள் நிறைந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் காலத்துக்கேற்ப உலக ஒழுங்குகளுக்கு அமைய மாற்றங்களைச் செய்து அவற்றை எமக்குச் சாதகமாக்கி தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். தங்கள் பூர்வீக நிலத்தில் இறைமையோடு வாழ்ந்த ஒரு தேசிய இனம் அழிக்கப்படும்போது தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ளப் போராடுவது பயங்கரவாதம் ஆகாது. எங்களின் விடுதலைப் பயணத்தில் உலகநாடுகள் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் எமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டதை வேதனையோடு பார்க்கின்றோம். சிங்களப் பேரினவாத அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக எமது மக்களது அரசியல் முன்னெடுப்புக்களை நாம் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு உலகநாடுகள் எம்மைப் புரிந்துகொண்டு நீதியான நியாயமான முறையில் வழிவிட வேண்டுமென்று அன்போடு வேண்டி நிற்கின்றோம்.”
இந்தியாவின் நிரந்தர நட்பு நாடே சுதந்திர தமிழீழம் என்பதை மீண்டும் இவ்வறிக்கையூடாக கூறியுள்ளார்கள் புலிகள். அவ்வறிக்கையில் புலிகள் கூறியுள்ளதாவது: “இந்திய தேசத்தின் மீது ஆழ்ந்த பற்றுதல் காலங்காலமாக தமிழ் மக்களுக்குண்டு. எமது விடுதலைப் போராட்டமும் இதற்கு எந்தவகையிலும் எதிரானதன்று. எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இந்தியாவின் தேசிய நலனோடு பின்னிப் பிணைந்துள்ளன. எமது ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவும் சிங்கள அரசின் படை மேலாதிக்கமும் தமிழர் தேசத்தில் அமைக்கப்படுகின்ற பெரும் சிங்களப் படைத்தளங்களும் அத்தளங்களை அமைக்க உதவி புரியும் நாடுகளின் கபடத்தனமும் இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன. இந்தியாவோடு எம்மக்களுக்கு இருந்த உறவு சிங்கள ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனையில் சிறுகச்சிறுக சிதைவடைந்து போகாமலிருப்பதை இந்தியாவே உறுதிசெய்ய வேண்டும். எமது மக்களின் அவலங்களைப் பார்த்து துடியாய்த் துடித்த தமிழக உறவுகளின் உணர்வும் எமக்கு ஆதரவாக அவர்கள் நடாத்திய போராட்டங்களும் எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டியுள்ளன. கடல் எம்மைப் பிரித்தாலும் மொழியால் உணர்வால் நாம் தனித்தவர்களில்லை என்பதை தமிழ்நாட்டு எழுச்சிப் போராட்டங்கள் எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றன. இப்போராட்டங்களின்போது தம்மையே எரித்து தம்முயிரை ஈகம் செய்த வீரமறவர்களையும் இந்நாளில் நினைவு கூறுகின்றோம்."
தமிழீழ மக்களின் அணையாத தாகமான தமிழீழமென்ற தேசத்தை மீட்க கடசித் தமிழன் இருக்கும் வரை தொடரும். ஒருவனின் உயிரைக் குண்டுகளால் அழிக்கலாம். ஆனால் ஒருவனின் மனதை கருணையுள்ளத்துடன் அணுகியே வெல்லலாம். அதைவிடுத்து தன்னிடத்தில் படையுண்டு என்ற வெறித்தனத்துடனும், உலகநாடுகளின் ஆதரவுண்டு என்ற மமதையிலும் ஓர் இனத்தை அழிக்க முற்படுவதென்பது சின்னப்பிள்ளைத்தனமானது. திடமான சிந்தனையில்லாமலும், சுய நலன்களுக்காகவும் ஓர் இனத்தை அழிப்பதானது மனித குலத்திற்கே ஒவ்வாத செயல்.
யுத்தம் செய்ய என்ன மனநோயாளியா என்று கேட்டார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர் நினைத்திருந்தால் கடந்த வருடம் பல்லாயிரம் சிங்கள மக்களைக் கொன்று தமிழர்கள் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை திசைமாற்றியிருக்க முடியும். ஆனால், புலிகள் அப்படிச் செய்யவில்லை காரணம் தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு எதிரான இனத்தவர்களோ அல்லது மனநோயாளிகளோ இல்லை. தம்மை தாமே ஆழும் உரிமைக்காகவேதான் ஆயுதத்தை ஏந்தி தமது நிலத்தினிலேயே ஆக்கிரமிப்புப்படைக்கெதிராக போராடினார்கள் புலிகள். இதனைப் புரியாத பல உலகநாடுகள் புலிகளை பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களின் நியாயபூர்வமான தாயக விடுதலைக்கான போராட்டத்தை களங்கப்படுத்தினர். இராஜதந்திர போரையே இன்று புலிகள் கையாளுகிறார்கள் என்பதையே புலிகளின் இந்த வருட அறிக்கை காட்டி நிற்கின்றது. புலிகளின் எதிர்கால நடவடிக்கையே தடுக்க வேண்டுமாயின் சிங்கள அரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை அளித்து சமாதான வழியில் தீர்வு காண்பதே சாணக்கியம்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Geen opmerkingen:

Een reactie posten