ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இன் நீண்டகால உறுப்பினருமான தோழர் தங்க மகேந்திரன் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். ஆரம்ப காலத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்ட இவர் தோழர் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், குண்சி ஆகியோருடன் இணைந்து ஆரம்ப கால தமிழீழ விடுதலை இயக்கத்தில்(இவ் அமைப்பு தற்போதைய் ரெலோ அமைப்பு அல்ல) டாக்ரர் தர்மலிங்கம் தலமையில் சிறிது காலம் செயற்பட்டுவந்தார். இதில் முத்துக்குமார்இ சத்தியசீலன் போன்றவர்களும் இணைந்து செயற்பட்டுவந்தனர். இவ் அமைப்பின் செயற்பாடு மிககக் குறுகிய காலத்திற்கு மட்டும் செயற்பாட்டில் இருந்தது. இதன் பின்பு ஈழப்புரட்சி அமைப்பிலிருந்து கொள்கை வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வந்து உருவான பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இல் இணைந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.
வெலிக்கடைச்சிறையில் தனது பல நாட்களைக் கழித்த இவர் மட்டக்களப்பு சிறையுடைப்புடன் சிறையிலிருந்து வெளியெறி ஈபிஆர்எல்எவ் இல் தொடர்ந்தும் தீவிர செயற்பாட்டாளராக தமிழ் நாட்டில் இருந்து செயற்பட்டார். திருமலையை பிறப்பிடமாக கொண்ட இவரின் விடுதலைக்கான பங்களிப்பு மகத்தானது. சத்தியசீலன் போன்றவர்களின் கைதுகளுடன் பலரும் பாதுகாப்பு கருதி புலம் பெயர தங்க மகேந்திரன் போன்ற சிலர் தொடர்ந்தும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்து செயற்பட்டனர் என்பது தங்க மகேந்திரன் போன்ற போராளிகளின் சிறப்பியல்பு ஆகும். இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகமாக உள்ள திருமலையில் இவர் தனது ஆரம்பகால அரசியல் செய்பாடுகளை முன்னெடுத்திருந்தார். இவர் வெலிகடைச்சிறையில் இருந்த காலத்தில் ஒரு முறை இவரை பார்வையிடச் சென்றதும் இத்தருணத்தில் நினைவில் வந்து செல்கின்றது.
Geen opmerkingen:
Een reactie posten