மக்கள் தமக்காக தாம் போராடாத வரை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் மறுபடியும் புதிய அடக்குமுறையாளர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றது. எகிப்திலும் துனிசியாவிலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் எழுச்சியும் கிளர்ச்சியும், ஆட்சி மாற்றத்தை உருவாக்கியதே ஒழிய அந்த மக்களை விடுவிக்கவில்லை. மீண்டும் அதே அரசு இயந்திரம் தான், அதற்கு தலைமைதாங்கிய சில பொம்மைகள் தான் மாறியது.
இதுபோல் லிபியாவில் அமையவில்லை. மாறாக வன்முறை, சிவில் யுத்தம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஊடாக, ஒரு இரத்தக் களரியை அது எதிர்கொண்டுள்ளது. பல ஆயிரம் லிபியா மக்களின் உயிரை பலிகொள்ளும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாக மாறியுள்ளது.
லிபியாவில் கடாபி குடும்பம் நடத்தும் சர்வாதிகாரம், நாட்டை கொள்ளையிட்டும், மக்களை ஒடுக்கியும் தான் ஆண்டது. கொள்ளையிட்ட பணத்தை மேற்கத்தைய நாடுகளில் முதலிட்டும், லிபியா எண்ணை வயல்களை மேற்கத்தைய பன்னாட்டு எண்ணைக் கம்பனிகளிடம் தாரை வார்த்தபடி தான், தொடர்ந்து தானும் லிபியா கொள்ளையிட்டது. மக்களைச் சுரண்டியும், ஓடுக்கியும் மேற்கு சேவை செய்த அதேநேரம், தன்னை தக்கவைக்க அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தன்னை கட்டிக் கொள்ள முனைந்தது.
இரத்தம் சிந்தாப் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த கடாபி, தன்னை அரபுலகின் மீட்சியாளனாக காட்டிக்கொள்ள முனைந்தார். எண்ணை வயல்களை தேசியமயமாக்கி, ஏகாதிபத்திய மூலதன நலனின் கையை வைத்தார். இப்படி மேற்கு மூலதனத்துடன் தொடங்கிய முரண்பாடு, அரபுலகின் பேட்டை ரவுடியான இஸ்ரேலுடனான முரண்பாடு, லிபியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகள் கூர்மையாகியது. கடாபி தன்னை அரபுலகின் மீட்பாளராக காட்ட, மேற்குடன் முட்டி மோதிய சில நடவடிக்கைகளை காட்டி ஏகாதிபத்தியம் தன் சதி வலையை இறுக்கியது. இதன் மூலம் பொருளாதார தடை முதல், அமெரிக்கா கடாபியைக் கொல்ல விமானம் மூலம் குண்டு வீசியது வரை, பல தொடர் நிகழ்வுகள் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த காலத்தில் ஏகாதிபத்தியம் அரங்கேற்றியது.
இதன் பின்னணியில் கடாபிக்கும் ஏகாதிபத்தியக்கும் இடையில் நடந்த பேரங்களைத் தொடர்ந்து, கடாபி ஏகாதிபத்திய நலனுக்கு ஏற்ற நல்ல பிள்ளையானார். கடாபியால் விமானமொன்றுக்கு குண்டு வைத்ததாக கூறிய நிகழ்வுக்கு பல நூறு கோடி டொலரை லிபியா வழங்கியும், தன் எண்ணை வயல்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்ததன் மூலம், ஏகாதிபதிய கொள்ளைக்கு ஏற்ற நல்ல லிபியாவாக மாறியது.
இதைத் தொடர்ந்து அரபுலகுக்கு ஏற்ற இஸ்லாமிய மக்களுக்கு ஏற்ற லிபியா என்ற கடந்தகால விம்ப அரசியல் மூலம், தொடர்ந்து தன்னை தக்கவைக்க கடாபியால் முடியவில்லை. அடக்குமுறை மூலம் மட்டும்தான் ஆளுகின்ற நிலை உருவானது. மேற்கு மூலதனம் லிபிய எண்ணையை நேரடியாக சுரண்டியதால், முன்பு இந்த மக்களுக்கு கிடைத்த எலும்புகளையும் கூட மக்கள் இழந்தனர். கடாபி குடும்பம் தன் பங்குக்கு கொள்ளையிட்ட சொத்தை மேற்கில் குவிக்கத் தொடங்கியதால், மேற்கு கொள்ளையிட்டது போக எஞ்சிய எலும்புகளையும் மக்கள் இழந்தனர். இதனால் அதிருப்த்தியும், எதிர்ப்பும் அதிகரித்தது. இதனால் அடக்குமுறையும் ஓடுக்குமுறையும், மக்களை தனக்குள் முடக்கி தன்னெழுச்சியான கிளர்ச்சிக்குள் வைத்திருந்தது.
இதில் இருந்து மீள அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தொடர்ந்து காட்டிக்கொண்டு தன் ஆட்சியை தக்கவைக்கும் புதிய உத்தி, மேற்குடனான முரண்பாடுகளை உருவாக்கி வந்தது. மேற்கு மூலதனம் சுரண்டுவதில் ஒரு பகுதியை, இந்த சர்வாதிகாரர்களால் அபகரிக்கப்படுவதை மேற்கு மூலதனம் விரும்பவில்லை. அனைத்தையும் தான் அனுபவிக்க விரும்பியது. மக்களுடனான கடாபியின் முரண்பாடு, கூர்மையாகி வந்தது. இதனால் கடாபியின் தலைமையில் தொடர்ந்து மேற்கு மூலதனம் அமைதியாக லிபியாவில் சுரண்டமுடியாது என்று கண்ட நிலையில்தான், கடாபியை மாற்றிவிட ஏகாதிபத்தியம் இன்று தலையிடுகின்றது.
பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் முன்முயற்சியும் அதன் பாத்திரமும்
பிரஞ்சு அரசும், ஜனாதிபதியும் உள்நாட்டில் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடியில் இருந்து மீளவும், மக்களை திசை திருப்பவும் இந்த ஆக்கிரமிப்புக்கு குரல் கொடுத்து அதற்கு தலைமை தாங்குகின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய பிரஞ்சு ஜனாதிபதி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாக மாட்டார் என்ற கணிப்பீடுகளில் இருந்து மீளவும், இந்த ஆக்கிரமிப்பு தமக்கு உதவும் என்று கருதுகின்றனர். இந்த அரசு, ஊழலில் சிக்கியுள்ளதுடன், துனிசியா மக்களின் கிளர்ச்சியை ஒடுக்க இந்த அரசுடன் இருந்த வெளிவிவகார அமைச்சர் முற்பட்டது அம்பலமாகியது. துனிசியா சர்வாதிகாரர்களின் செலவில் உல்லாசமாக இருந்தது உட்பட, இந்த சர்வாதிகாரியை இறுதிவரை பாதுகாக்க முனைந்தது அம்பலமானது. இதையடுத்து ராஜினாமா செய்ய மறுத்த நிலையில், எதிர்ப்புகள் அதிகரிக்க புதிய மந்திரி சபையை மாற்றினர்.
இப்படி அரசியல் பித்தலாட்டம் மூலம் தெரிவான இன்றைய புதிய வெளிவிவகார அமைச்சர் அலன்யூப்பே. இவர் மக்கள் பணத்தை கையாடியதற்காக குற்றவாளியாக கண்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். இப்படி குற்றவாளிகள் தான், லிபியா மீதான ஆக்கிரமிப்பு குற்றத்தை தங்கள் சொந்த உள்நாட்டு அரசியல் வங்குரோத்தை ஈடுகட்ட தொடங்கியுள்ளனர்.
மக்களை பாதுகாக்க என்று கூறிக்கொண்டு, அமெரிக்காவுடன் சேர்ந்து நடத்துகின்ற ஒரு ஆக்கிரமிப்பாகும்; இது. இலங்கையில் 50000 மக்கள் கொல்லப்பட்ட போது, இந்தியாவின் நலனுடன் சேர்ந்து நின்ற இந்தக் கொலைகார ஏகாதிபத்திய உலகம்தான், லிபியாவில் மக்களைச் சொல்லி ஆட்டம் போடத்தொடங்கியுள்ளது. இது போல் ஈராக்கில் தலையிட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம், சதாமுக்கு பிந்தைய தங்கள் ஆக்கிரமிப்பு ஆட்சியில் பல இலட்சம் மக்களை கொன்று குவித்ததுடன், அதை இன்று வரை தொடருகின்றது.
இங்கு மக்களைப் பாதுகாத்தல் என்பது, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு விரிக்கும் கம்பளம் தான். உலகளவில் மக்களைக் கொன்று குவித்த, குவிக்கின்ற ஆட்சியாளர்களின் பாதுகாவலராக திகழும் இந்த ஏகாதிபத்தியங்கள் தான், தாங்கள் ஆக்கிரமித்த மண்ணில் பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்தவர்கள். இப்படி கடந்த காலம் முதல் இன்று வரையான காலனிய மற்றும் ஏகாதிபத்திய வரலாறு எங்கும், பல இலட்சம் மக்களை கொன்று குவித்தவர்கள், குவித்து வருபவர்கள் மக்கள் வே~ம் போடுகின்றனர்.
லிபிய மக்களைப் பாதுகாக்க என்று கூறி, பல ஆயிரம் லிபிய மக்களைக் கொன்று தான், ஏகாதிபத்திய விருப்பங்கள் லிபியாவின் "சுதந்திரமாக" பிரகடனம் செய்யப்படும். இதுதான் ஏகாதிபத்திய வரலாறு. ஏகாதிபத்திய தேர்வுகள் லிபிய மக்களின் தேர்வல்ல, ஏகாதிபத்தியங்கள் பாதுகாக்கும் மூலதனத்தின் சொந்தத் தெரிவாகும். இது லிபிய மக்களின் அடிமைத்தனங்கள் மேலான "சுதந்திரம்". இதைத் தாண்டியதல்ல மூலதனத்தின் உலக ஒழுங்குக்கு உட்பட்ட "ஜனநாயகம்".
பி.இரயாகரன்
20.03.2011
Geen opmerkingen:
Een reactie posten