மீன், புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ, ஆடையின்றி அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, முடியை வளர்ப்பதலோ, உடலில் துப்புரவற்ற பொருள்களைப் பூசிக் கொள்வதாலோ அவன் தூய்மையுடையவனாகான்" இது புத்தபகவானின் போதனைகளில் ஒன்று.
மிருகபலி......! மிருக பலி.......! மிருக பலி......! கடந்த வாரம் எல்லா ஊடகங்களிலும் சிங்கள அரசியல் வாதிகள் மற்றும் மதத் தலைவர்களிடையேயும் அடிபட்டுத் திரிந்த ஒன்று.
அதாவது, முன்னேஸ்வரம் காளிகோவிலில் இடம்பெறும் சடங்கான மிருக பலியினைப் பற்றிய பேச்சே மத அடிப்படைவாதிகளிடம் பரவலாகக் காணப்பட்டது எனலாம்.
இந்து மதப்படி துர்க்கைக்கு மிருக பலி கொடுத்து திருவிழா செய்வது வழக்கம். மிருகபலி இல்லாமல் நடத்தப்படும் துர்க்கை பூசை வைஷ்ணவி (அ) சாத்துவிக பூஜை எனப்படும். அது வைஷ்ணவர்களால் செய்யப்படுகிறது. விலங்குகளைப் பலி கொடுத்து செய்யப்படும் பூஜையே துர்க்கை பூஜை.
இந்து மதத்தைப் பின்பற்றி தான் மிருகபலி (வேட்டைத் திருவிழா) காலம் காலமாக நடந்துகொண்டு வருகின்றது. ஆனால் கடந்த ஓரிரு வருடங்களாக தான் இவ்வாறு மிருகங்களை பலி கொடுக்கக் கூடாது என அதை அரசியல் பிரச்சினையாக கொண்டு வந்துள்ளனர்.
சாதாரணமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும், கோழி, ஆடு, மான், மரை, முயல் போன்று தான் துர்க்கை கடவுளுக்கும் மிருக பலி கொடுத்து அக்கடவுளின் கோபத்தை தணிப்பதாகக் கருதி அவ்வேட்டைத் திருவிழாவினைச் செய்கின்றோம். பலிகொடுக்கும் மிருகங்களை பின்னர் காய்ச்சிப் படைத்து அதை அன்னதானமாக மக்களுக்கும் வழங்குவதுதான் வேட்டைத் திருவிழா.
அந்தவகையில், முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத் திருவிழாவில் வேட்டைத் திருவிழா என்பது சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் மிருகங்களைப் பலி கொடுப்பது காலம் காலமாக இடம்பெற்று வரும் சடங்கு.
இச்சம்பிரதாயத்தை தடுப்பதற்காக கடந்த வருடம் முதல் பௌத்த மத குருமாரும், இந்துமத அடிப்படை வாதிகளும், முக்கியமாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவும் பெரும் பாடுபட்டு வருகின்றனர்.
புத்தரின் காலடியை தமிழனின் இரத்தம் கழுவிச் சென்றபோதெல்லாம் வராத கவலை, துடிதுடிப்பெல்லாம் கோவிலில் மிருகத்தைப் பலிகொடுக்கப் போகிறார்கள் என்றதும் வருகின்றது இந்த காரூண்யம் கொண்ட காவியுடைதாரிகளுக்கு. ஒவ்வொரு தமிழனின் இரத்தக் கறை படிந்துள்ள இந்நாட்டை, புனித பூமியென பறைசாற்றிக் கொண்டு திரியும் இவர்கள், பலியிடல் பௌத்திற்கு எதிரானது என்று கூறுவது நியாயமானதா?என்பது புரியவில்லை.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வன்முறைகளாலும் சித்திரவதைகளாலும் தமிழ் மக்களை சிங்கள அரசு பலிகடாவாக்கியதை யாரும் எளிதில் மறந்து விடமுடியாது.
விடுதலைப் புலிகள் தொடக்கம் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்கள் என பரந்து விரியத் தொடங்கி போர் என்ற பெயரில் பலிக்கடாவாக்கி அனைவரின் இரத்ததையும் காணத் துடித்தது இவ்வரசாங்கம்.
விடுதலைப் புலிகள் தொடக்கம் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்கள் என பரந்து விரியத் தொடங்கி போர் என்ற பெயரில் பலிக்கடாவாக்கி அனைவரின் இரத்ததையும் காணத் துடித்தது இவ்வரசாங்கம்.
யார் யாரெல்லாம் துப்பாக்கியின் கண்களில் சந்தேகமாகத் தெரிகின்றார்களோ, அவர்களெல்லாம் துப்பாக்கிச் சன்னம் தடவிச் சென்றது என்பது தான் உண்மை.
தற்போது மிருக பலியினை தடுப்பதற்காக போராடிக் கொண்டிருப்பவர்கள், வடகிழக்கில் விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்காக அப்பாவிப் பொதுமக்களை பலியெடுத்த அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்தாதது ஏன்?
மிருகவதையை தடுக்க வேண்டும் தான், ஆனால் இலங்கையிலுள்ள தமிழன் மிருகத்தை விட கேவலமானவனாக சிங்கள கடும் போக்கு அரசியல்வாதிகளினால் நடத்தப்படுகிறான். மிருகத்திடம் காட்டும் கரிசனை ஒரு துளிகூட தமிழனிடம் காட்டியிருந்தால் கடந்த முப்பது வருடத்திற்கு மேலாக பல சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்டிருப்பார்களா அல்லது இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருப்பார்களா?
முன்னேஸ்வரம் காளிகோவிலில் இடம்பெறவிருந்த மிருகபலியினைத் தடுக்குமாறு, பௌத்த சங்கங்களின் சம்மேளனமும், மிருக உரிமை ஆர்வலர்களும் கடந்த மாதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போர்க்கொடி பிடித்திருந்தனர்.
இதே மாதிரி 2009ஆம் ஆண்டு அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாக பலியிடப்படுகையில், போர்கொடிபிடித்திருந்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர் பறி போயிருக்குமா?
அன்று முள்ளிவாய்க்காலில் முதியவர்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரம் மக்களைக் கொன்று குவிக்கும்போது தெரியாத வலி, தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ள கடவுளுக்களிக்கும் மிருகபலியின்போது வலிக்கிறதா?
மிருகபலி என்ற பெயரில் மீண்டும் நாட்டை இரத்தத்தால் நனைவிடப்போவதில்லை என்று கூறும் இவர்கள், தமிழர்களின் இரத்தம் ஆறாக ஓடும் போது அது அவர்கள் கண்ணில் ஏன் படவில்லை? உயிரினங்களை வதைக்கக் கூடாது என்று ஜீவகாருண்ய ரீதியில் பேசினால், மனித உயிர்க் கொலையையும் தடுக்கவேண்டும், கண்டிக்கவேண்டும், நிறுத்தவேண்டும்.
சிங்கள பௌத்த சிந்தனைகளை அரசியல்வாதிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து, ஆட்சி நடத்தும் போதெல்லாம் தமிழன் ஒடுக்கப்படுகிறான். இது தான் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. தங்களது தேசியவாத கொள்கைகளால் சிங்கள பௌத்தத்தின் சிந்தனைகள் திணிக்கப்படுகிறது. அதனை எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
அரசியலுள் அமுங்கிப் போன இச்சிந்தனைகளைக் கொண்டு திணிக்கும் போது அதுவே இனங்களுக்கிடையே முரண்பாட்டினைத் தோற்றுவிக்கின்றது. தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிருகபலி சர்ச்சையும் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தால் திணிக்கப்படுகின்ற ஒன்று. சிங்கள பௌத்தம் தமது அடையாளத்தை பாதுகாக்க சிறுபான்மை இனங்களைப் பலியாக்க யுத்தத்தைக் கையிலெடுக்கின்றது. இதுவே இலங்கையின் அரசியல் யதார்த்தம் எனலாம்.
புவிலக்சி
Geen opmerkingen:
Een reactie posten