பலூஜா நகரத்தை சூழ்ந்துகொண்டு அல்-காய்தா ஆதரவு இயக்கத்தினர் மேற்கொண்ட தாக்குதலை சமாளிக்க முடியாமல், ராணுவம் அங்கிருந்து தப்பிச் செல்ல, இப்போது பலூஜா நகரம் தீவிரவாத அமைப்பினரில் கைகளில் வீழ்ந்துள்ளது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து வெறும் 69 கி.மீ. தொலைவில் உள்ள பலூஜா நகரத்தை அல்-காய்தா ஆதரவு இயக்கத்தினர் கைப்பற்றியதில், அதிர்ந்து போயிருக்கிறது ஈராக்கிய அரசு. தாம் கைநழுவ விட்ட பலூஜா நகரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன், நகரத்தை சுற்றி வளைத்திருக்கிறது ஈராக்கிய ராணுவம். நகரில் இருந்து 5 கி.மீ. மேற்கே, இன்று மதியம் யுத்தம் தொடங்கியுள்ளது. அரசு ராணுவம் ஆட்டிலரி மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். தீவிரவாத இயக்கத்தினர் கைகளிலும், ராக்கெட்டுகள் உள்ளன. அவர்களும் திருப்பி தாக்குகின்றனர்.
தாக்குதல் தொடங்கி நான்கு மணி நேரம் ஆகியும், அரசு ராணுவத்தால் ஒரு அடிகூட முன்னேற முடியாத நிலை காணப்படுகிறது. பலூஜா நகரம் முற்று முழுதாக தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அல்-காய்தா ஆதரவு இயக்கம் என பொதுப்படையாக கூறப்பட்டாலும், இந்த இயக்கத்துக்கு தனியாக பெயர் உள்ளது. அப்படியிருந்தும் சர்வதேச மீடியாக்களில் அல்-காய்தா ஆதரவு இயக்கம் என பொதுப்படையாக குறிப்பிடப்படுவதன் காரணம், இயக்கத்தின் பெயர் மிகவும் நீளமானது. அத்-தவ்லா அல்-இஸ்லாமியா ஃபி அல்-ஈராக்கி வா-ஸ்-ஷாம் (الدولة الاسلامية في العراق والشام) என்பதே அந்தப் பெயர். பலூஜா கைப்பற்றப்பட்ட பின் நகரின் முக்கிய பகுதிகளில் இந்த இயக்கத்தினர் ஆயுதங்களுடன் காணப்படுகின்றனர். அரசு ஆதரவாளர்கள் யாராவது உள்ளனரா என்று தேடுதல் நடக்கிறது. ராணுவத்தை சேர்ந்த யாராவது மக்கள் மத்தியில் மறைந்து உள்ளனரா என்பதை கண்டு பிடிக்க திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
ஈராக்கிய ராணுவம் மீண்டும் இந்த நகரங்களை கைப்பற்றுவது சுலபமாக இருக்கப் போவதில்லை என்றே கூறப்படுகிறது. அடுத்த சில தினங்களில் இந்தப் பகுதியில் கடும் யுத்தம் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
Geen opmerkingen:
Een reactie posten