தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 januari 2014

Ƹ̴Ӂ̴Ʒ உறவுகளுடன் சில நிமிடங்கள்...


இன்று (20.01.2014) காலை யாழ்.பல்கலைக்கழகத்தின் 03ஆம் வருட கலைப்பிரிவு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
இவரது தற்கொலைக்கு சில மணித்துளிகளுக்கு முன்னரான முகநூல் பதிவுகளில் அவரது தற்கொலை முடிவு தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவரது தற்கொலை எண்ணமானது சில மாதங்களுக்கு முன்னரே உருவாகியுள்ளதையும் தெளிவாகவே உணர முடிகிறது. அவரது முகநூல் (facebook) பதிவுகளிலேயே இதனை உணரமுடியும் போது அவரது நெருக்கமான தோழிகளுக்கும் பெற்றோருக்கும் அதை உணரமுடியாமல் போனது வேதனையானவொன்று. அவரது இறுதிப்பதிவாக ஒரேயொரு முற்றுப்புள்ளி (.) மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் மிகவும் தெளிவான சிந்தனையுடன் தெரிவுசெய்யப்பட்டு...
1.அம்முகுட்டி வித்யா (23 photos)
2.அம்முகுட்டி வித்யா அலங்காரம் (20 photos)
3.நாங்கள் தோழிகள் (5 photos)
என்ற தலைப்புகளுடன் புகைப்படங்கள் எவரும் பார்க்கக்கூடிய அமைப்பில் (Public Setting) தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தனது முகப்பு படத்தினையும் (Profile Picture) மாற்றியுள்ளார். அவரது இறுதி முடிவுக்கான திட்டமிட்ட செயலாகவே அனைத்தையும் நேர்த்தியாக செய்துள்ளார்.

மிக தெளிவான தற்கொலை எண்ணத்தினை வெளிப்படுத்தும் இப்பதிவுகளை ஒருவராவது சரியாக அவதானித்திருப்பின் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும். அதிலும் இறுதிப்பதிவான முற்றுப்புள்ளிக்கு (.) 21 நண்பர்கள் விருப்பு (Like) தெரிவுத்துள்ள நிலையிலும் அதன் அர்த்தத்தினை அறிய முயலாதது வேதனை. (ஒருவேளை எதை பதிவேற்றினாலும் விருப்பு (Like) போடும் கூட்டமாகவும் இருக்கலாம்.)

உளவியலாளர்களது கருத்துப்படி, பெரும்பாலும் தற்கொலை எண்ணம் என்பது உள்மனதில் தோன்றி சிறிது காலத்தின் பின்னரே அது செயல் வடிவம் பெறுவதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஓர் எண்ணம் மனதில் உருவாகிய நாளிலிருந்தே அந்நபரின் நடத்தை கோலங்களில் ஏதோ ஒரு வகையில் அது வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். அந்நபருடன் நெருக்கமான நண்பர்களாலும் குடும்பத்தினராலும் இதனை உணர முடியும். அவ்வாறான மாற்றத்தினை அவதானிப்பின் தாமதமின்றி உளவளத்துணையாளர்களை நாடி உதவியை பெற்றுக்கொண்டால் ஓர் உயிரின் இழப்பையும் அதன் பின்னரான வேதனைகளையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

பிரச்சினைகள் என்பது எல்லோருக்குமே பொதுவான ஒன்று. இதையேதான் எமது முன்னோர்கள் அழகாக ஒரு பொன்மொழியாக கூறியுள்ளனர்...
“வீட்டுக்கு வீடு வாசல்படி”
பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது முடியாதவொன்றல்ல. தீர்வு இல்லாத பிரச்சினைகளோ குழப்பங்களோ எதுவுமில்லை. ஆனால் அந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு அதற்கான தீர்வினை காண்பதில்தான் பலர் தவறிழைக்கின்றனர். அதன் விளைவாகவே “உயிரை விடுதல்” என்ற மிகத்தவறான ஒரு முடிவினை எடுக்கின்றனர்.
அதிலும் இன்றைய இளம் சமூகம் இவ்வாறான அவசர முடிவினை எடுக்கின்ற வீதம் அதிகரித்தேயுள்ளது. இதன் சாட்சிகள்தான் நாளிதள்களில் அடிக்கடி இடம்பெறும் தற்கொலை செய்திகளும் வைத்தியசாலைகளில் பதியப்படும் தற்கொலை முயற்சிக்கான சிகிச்சை புள்ளி விபரங்களும்.

உங்களால் எந்த பிரச்சினைக்காவது தீர்வினை காண முடியாத நிலை ஏற்பட்டு, அதனால் நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது உளவளத்துணையினை நாடுவது சிறப்பானதும் அவசியமானதுமாகும். மேலைத்தேய நாடுகளில் உளவளத்துணை என்பது சாதாரண ஒன்றாக மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் எமது பகுதிகளில் உளவளத்துணையினை “மனநோய்க்கான சிகிச்சை” என்ற ஒரு தவறான கண்ணோட்டத்தில் நோக்கப்படுவதால் அதன் முக்கியத்துவமும் பயன்பாடும் சமூகத்திற்கு எட்டப்படாமல் போய்விடுகின்றது.

எப்போதுமே அவதானிப்பு அவசியமானதொன்று. எந்தவொரு சிறிய விடயத்திலும் அதிகளவான அவதானிப்பினை கொண்டிருப்பவர்களே சமூகத்தில் சாதனையாளர்களாக தோற்றம் பெறுகின்றனர். உங்கள் உறவுகளிடையே ஏற்படும் அசாதாரண மாற்றங்களை உடனடியாகவே அந்நபரின் பெற்றோருக்கோ, நண்பர்களுக்கோ விரைவாக தெரியப்படுத்தி ஆபத்திலிருந்து மீட்டிடுங்கள்.
உங்களது அவதானிப்பு ஓர் உயிரையே காப்பாற்றக்கூடும்...

“குறைகள் இல்லாத மனிதன் இல்லை,
அதை குறைக்கத்தெரியாதவன் மனிதனேயில்லை”
-புத்தர்.

அமர்நாத் க.க

Geen opmerkingen:

Een reactie posten