தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள்! துண்டாடப்பட்ட தாயகத்தின் இதய பூமி! தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு



தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு வகையில் அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றான்.
அது இறந்தகாலம் தொட்டு நிகழ்காலம் வரையும் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 1983ம் ஆண்டு மற்றும் அதன் பின்னர் தமிழர் அவலங்கள் என்று பார்ப்பது தமிழர் அவலங்களையும் அதன் காரண காரணிகளையும் சரிவரப்பார்க்க முடியாது போய்விடும்.
அந்த வகையிலே தமிழர் அவலங்கள் என்று பார்க்கின்ற போது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரையும் தமிழர் எந்தவகையான சிக்கல்களை, சவால்களை எதிர்நோக்குகின்றார்கள், எதில் வெற்றி கண்டுள்ளார்கள், இன்னும் எதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது என்று பார்ப்பதிலேயே இக்கட்டுரை கவனம் செலுத்துகின்றது.
தமிழர் அவலங்கள் என்ற வகையிலே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்ற அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணங்கள் எனலாம். ஈழத்திலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக தமிழர் வெளியேற்றங்கள், இனக்கலவரங்கள், இராணுவ நெருக்கடிகள், கல்வித்தரப்படுத்தல்கள், போன்றன முக்கிய வரலாற்று அம்சமாக தமிழர் அவலங்களில் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றன.
1972ம் ஆண்டுகளில் இலங்கை அரசியல் மாற்றங்களால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும் 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களும், இராணுவக் கெடுபிடிகளும் தமிழர் அவலங்களில் முக்கியமானதாகும்.
தமிழர் பிரதேசத்தில் குடியேற்றத் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள், தமிழர்களின் இனப்பிரச்சினையும் அதன் பின்னணியும், கல்வி ஒடுக்குமுறை, பயங்கரவாத தடைச்சட்டங்கள், இன்றைய நிலவரம், இனம் மற்றும் அடையாளம் அழிப்பு போன்றவற்றை முக்கியமாக குறிப்பிட்டுள்ளேன். இதனைவிட இக்கட்டுரையில் ஆண்டுகள், வீதங்கள், கணக்கெடுப்புக்கள், ஆட்சிக்கால அரசாங்கங்கள், இடப்பெயர் மாற்றங்கள் போன்ற முக்கியமானவற்றை குறிப்பிட்டுள்ளேன்.
இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் தமிழர் பல்வேறு விதமான தாக்கங்களை பெரும்பான்மையின அரசிடமிருந்து எதிர்நோக்கும் நிலை காணப்பட்டது. சுதந்திரம் கிடைத்து ஒரு வருடத்தின் முன்னரே தமிழர்கள் பல பாதிப்புக்களைச் சந்தித்தனர்.
தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றத்திட்டங்கள்:
1948 பெப்ரவரி 04ல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்ப்பட்டது. சுதந்திர இலங்கையில் முதல்முதலில் கூடிய பாரளுமன்றம், ஒரு லட்சம் தோட்டத்தெழிலாளரை நாடற்றவர்களாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தனர். இதுமட்டுமின்றி தமிழ்ப்பிரதேசங்களில் குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் கொண்டு வந்தது. இக்குடியேற்றங்களால் தென்மேற்கு பகுதியில் சனச்செறிவு கூடிய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் குடியேற்றப்பட்டனர். 1948ன் பின்னர் இரண்டு முக்கியமான குடியேற்றத்திடடம் அமுல்படுத்தப்பட்டது.
1. கல்லோயாத்திட்டம்
2. துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம்
1949ல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவால் ‘கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தித்திட்டம்’ ஆரம்பித்து வைக்கப்பட்டது. பட்டினப்பாளை என்ற பாரம்பரியத் தமிழ்ப்பெயரே "கல்லோயா" என மாற்றப்பட்டது.
இந்தப் பிரதேசத்தில் 44 குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 38 சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் ஆகும். மீதி 6 தமிழ்க் குடியேற்றத் திட்டங்களாகும். இவர்களுக்கு விவசாய நீர்ப்பாசன வசதியற்றவர்களாக இருந்தனர். சிங்களப்பகுதி நீர்ப்பாசன வசதியை நம்பியிருக்க வேண்டிய நிலையில் குடியேற்றப்பட்டனர். இவர்களை 1956, 1958ல் ஏற்பட்ட இனக்கலவரங்களால் விரட்டியடிக்கப்பட்டும், மிஞ்சியோர் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் இப்பிரதேசம் சிங்களமயமாக்கப்பட்டது.
இதனைப்போல வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட இடம் வவுனியாவாகும். வவுனியா வன்னி மாவட்டத்தின் தென்பகுதியிலிருந்து ஒருகிராமமாகும். இங்கு பாவற்குளம் என்ற சிறு கிராமத்தின் குடியேற்றத்திட்டம் முக்கியமானதாகும். 1956ல் 595 சிங்களக் குடும்பங்களும் 463 தமிழ்க் குடும்பங்களும் அமர்த்தப்பட்டன. இதன் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களால் தமிழ்க்குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டு இப்பிரதேசம் சிங்களமயமாக்கப்பட்டது.
கிழக்கில் 1956ல் அம்பாறை என்ற தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இது 1961ல் விரிவாக்கப்பட்டு பின்னர் அம்பாறை மாவட்டம் என மாற்றம் செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் முழுப்பரப்பளவு 4318 சதுரகிலோமீற்றர்கள். 1981இல் இருந்த சனத்தொகை பின்வருமாறு:
தமிழ் பேசும் முஸ்லிம்கள் 46.8%
சிங்களவர்கள் 30%
தமிழர்கள் 22.8%
இம்மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களால் 1994ல் மேற்கொள்ளப்பட்ட குடிசனக் கணக்கெடுப்பின் போது இந்த மாவட்டம் சிங்களப் பெரும்பான்மையினத்தைக் கொண்டு காணப்பட்டது என கணக்கெடுக்கப்பட்டது. இப்போது இப்பிரதேசம் தமிழ் மாவட்டம் என்ற அடையாளத்தை இழந்துவிட்டது. இப்பிரதேசத்தின் அடையாள இழப்பிற்கு முக்கிய காரணியாக மகாஓயா, பத்தியத் தலாவை, தெஹியக்கிண்டிய பகுதிகள் இணைக்கப்பட்டதாகும். இவை தமிழர் அல்லாத பிரதேசமாகும்.
இவற்றைவிட தமிழர் பிரதேசங்கள் “புனித பிரதேசம்” என்ற பெயரினால் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டது. இதனைவிட பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு தமிழர் வாழ்விடங்களாக பின்வரும் பிரதேசங்கள் காணப்பட்டன.
பெரிய நீலாவணை, கல்முனை, காரைதீவு, நிந்தாவூர், திரைக்கேணி, சம்பாந்துறை, அக்கறைப்பற்று, பொத்துவில், பாண்டிருப்பு போன்ற பிரதேசங்கள் காணப்பட்டன.
தமிழர் அவலங்கள் என்றவகையில் முக்கியமானதாக காணப்படுவது: குடியேற்றங்களும், கலவரங்கள் மூலம் துரத்தப்பட்டமையும், கொலை செய்யப்பட்டமையுமாகும். இதனைவிட முக்கியமாக காணப்பட்டது பெயர் மாற்றமாகும். இந்த வகையிலே தமிழ்ப்பிரதேசங்கள் பல சிங்களப்பெயர்கள் இடப்பட்டனவாகும். இவ்வாறு காணப்படும் பிரதேசங்களாவன பின்வருமாறு.
1. பார்வதி கிராமம் - பதவியா
2. முதலிக்குளம் - மொறவேவா
3. பட்டினப்பாளை - கல்லோயா
4. பெரியகுளம் - நமல்வத்த
5. புதுவைக்குளம் - சங்கரபுர
6. அம்பாள் ஏரி - அம்பாறை
7. மணல் ஆறு - வெலி ஓயா
8. பெரிய விளான்குளம் - மகாதிவுல்ஓயா
9. பனக்கட்டிமுறிப்பு - பென்னிககெற்யாவ
1977ல் வவுனியா மாவட்ட எல்லைப்பிரதேசப் பகுதியில் இரண்டு குடியேற்றங்கள் அமர்த்தப்பட்டன. இவ்வாறு அமர்த்தப்பட்டவர்களில் சிங்களவர்களான முன்னைநாள் குற்றவாளிகள் குடியமர்த்தப்பட்டனர்.
1987ல் இலங்கையின் வடகிழக்கில் உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில் துரித மாகவலி அபிவிருத்தித்திட்டம் முக்கியமானதாகும். இதற்கு உலக வங்கியிடமிருந்து பணம் வாங்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.
1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் வடமாகாணம் கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும் எனக்கூறியது. இவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வரமுன்னர் 1988ல் மணல் ஆறுப்பிரதேசம் அபிவிருத்திக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்களமக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
1988 ஏப்ரல் 14ல் விடுத்த அரசாங்க அறிக்கையின்படி முல்லைத்தீவுப் பகுதியில் இருந்த மணல்ஆறு என்றவிடம் வெலிஓயா எனப்பெயர் மாற்றப்பட்டது. இது இலங்கையின் 26வது மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இக்காலத்தில் காணி அமைச்சராக காமினி திஸாநாயக்கா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் அவசர அவசரமாக 3364 சிங்களக்குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனவாகும். இது 1988லும் 1989லும் நடைபெற்றதாகும். இங்கு குடியேறியவர்களின் விகிதாசாரப்படி விபரம் பின்வருமாறு:
சிங்களவர்கள் 85%
முஸ்லீம்கள் 6%
தமிழர்கள் 5%
இதனைப்போன்றே தண்ணிமுறிப்புப் பகுதியில் இருந்து 3000 குடும்பங்களை பலவந்தமாக வெளியேற்றினார்கள். அவ்வாறு வெளியேற மறுத்த 29 குடிமக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் 25 000க்கும் மேலான சிங்களக் குடிமக்கள் குடியமர்த்தப்பட்டனர். தண்ணிமுறிப்பு என்ற தமிழ்ப்பெயர் ஐனகபுர என மாற்றப்பட்டது. இக்குடியேற்றத்திற்குப் பொறுப்பாக இருந்த படைத்தளபதி ஐனக பெரேரா என்பவரின் பெயரினாலேயே இது மாற்றப்பட்டது.
1987 நவம்பர் மாதம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது சட்டதிருத்தம் முடிக்குரிய காணிகளை மாகாண அரசுகளின் பொறுப்பில் விட, மகாவலி அபிவிருத்தித்திட்டம் மட்டும் மத்திய அரசிடமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையினால் இதுவோர் அரசால் பொறுப்பேற்கப்பட்ட ஒரு குடியேற்றத்திட்டமாகும்.
1990 June மாதம் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட போர்க்காலத்தில் தமிழர் நிலங்கள் இராணுவமுகாம் அமைப்பதற்கும், பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலும் அப்பகுதியை அண்டியிருந்த மக்கள் அகற்றப்பட்டனர். இவ்வாறு அகற்றப்பட்ட இடங்களாக பலாலி, லிங்கநகர் போன்றனவாகும்.
தமிழர்களின் நிலம் பல வழியிலும் அபகரிக்கப்பட்டதை விடவும் மோசமான நிலை 1995 அக்டோபரில் யாழ்ப்பாணத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய போது ஏற்பட்டது. சிங்களப்படைகளின் அட்டூழியங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அங்கிருந்த மக்களில் வயது முதிர்ந்தோர், நோயாளிகள், என்றிருந்த ஒரு சிலரைத்தவிர அனைத்து யாழ்மக்களும் ஒரே நாளில் இடம்பெயர்ந்து சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வன்னிப்பிரதேசத்தை வந்தடைந்தனர். இவர்கள் வன்னிப்பிரதேசத்தில் காடுகளிலும், மரநிழலிலும், மழையிலும், வெயிலிலும், உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும் அவலப்பட்டநிலை காணப்பட்டது.
சட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள்:
இலங்கை தமிழர், சிங்களவர் என்ற இரு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும். 1948ல் இலங்கையடைந்த சுதந்திரம் சிறுபான்மைத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது எனலாம். பாரளுமன்றத்தில் 2:3 பெரும்பான்மைப் பலம் இருந்ததால் அரசியல் சட்டத்தையே தமது வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கும் அதிகாரம் பெரும்பான்மையினருக்கு இருந்தது.
சுதந்திரத்திற்கு பின் பதவிக்கு வந்த டி.எஸ். சேனநாயக்காவின் அரசாங்கம் முதலில் எடுத்த நடவடிக்கையே தமிழர்களினது வாக்குப்பலத்தை பலவீனப்படுத்தியமையாகும்.
1949ல் முதல்முதலில் கொண்டுவரப்பட்ட “இலங்கைக் குடியுரிமைச் சட்டம்” ஒரே இரவிலேயே மலையகத் தமிழர்கள் ஒரு இலட்சம் பேரை நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். இவர்கள் தங்களது வாக்குரிமையையும் குடியுரிமையையும் இழந்தனர். மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமையினால் அந்தத் தொகுதிக்கு 30,000 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2500 ஆகக் குறைந்தது.
இப்படி நாவலப்பட்டித் தேர்தற்தொகுதியில் 28,000 ஆக இருந்துவந்த வாக்காளர்கள் சட்ட அமுலாக்கத்தின் பின்னர் 2000 ஆகக் குறைந்தது. இப்படிப்பட்ட வாக்காளர் குறைப்பினால் 1952ல் நடந்த தேர்தலில் 1948ல் இருப்பதைவிட 7 பாராளுமன்ற ஆசனங்கள் குறைவாக தமிழர்கள் பெற்றனர். அத்தோடு புதிய சட்ட மூலத்தினால் மேலும் 14 தொகுதிகளில் தமிழர்கள் தமது பலத்தையும் இழந்தனர்.
எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் 1949ல் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியாக “தமிழரசுக்கட்சி” யை ஆரம்பித்தார். இவ்வாரம்ப காலத்தில் இவர் கருத்துக் கூறுகையில் “தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பேணப்பட்டு அவர்கள் சமத்துவமான பிரஜைகளாக மதிக்கப்படக் கூடிய தன்னாட்சி முறையே தமிழர்களுக்கு ஏற்றது.” என்றார்.
1956ல் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவின் தலைமையில் இருந்த அரசாங்கம் “சிங்களம் மட்டும் அரசகருமமொழி” என்ற சட்டத்தை நிறைவேற்றியது. தொடர்ந்த குடியேற்றத்திட்டங்கள் என்ற பெயராலும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிக்கப்பட்டு சிங்களப்பிரதேசமாக ஆக்கப்பட்டது.
இவ்வாறான பின்னனியின் மத்தியில் பலவகையான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு கைவிடப்பட்டன. அவ்வாறு கைசாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் முக்கியமானவையாக 1958 யூலை 26ல் பிரதமராகவிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவராகவிருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் இடையிலான பண்டா – செல்வா ஒப்பந்தம்.
இதனைப்போலவே 1983 – 1984 ஆம் ஆண்டுகளில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவென சகல கட்சிகளையும் உள்ளடக்கிய மகாநாடுகள் நடத்தப்பட்டன. இவை எந்த முடிவையும் எடுக்காமலேயே முடிவடைந்தன.
அடுத்து 1985 யூலையில் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் இலங்கை அரசாங்கப்பிரதிநிதிகளும் வடஇந்தியாவில் பூட்டானின் தலைநகர் திம்புவில் கூடிய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் ஆவன:
1. தமிழர்கள் ஒரு தேசிய இனமென அங்கீகரிக்கப்பட வேண்டும்
2. தமிழர்கள் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3. தமிழர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்
4. எல்லாத்தமிழர்களினதும் குடியுரிமையும் அடிப்படையும் உரிமைகளும் பேணப்படவேண்டும்.
இவ்வாலோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையாக வவுனியாவில் 200 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையால் இவ்வாலோசனை கைவிடப்பட்டது.
1987 யூலை 26ல் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் செய்து கொண்ட ராஜீவ் - ஜே.ஆர். உடன்படிக்கை பல அழிவுகளுக்குப் பின்னர் மார்ச்சு 1990ல் இந்தியா திரும்பியது. இக்காலகட்டத்தில் தமிழீழப்பகுதிகளுக்கு வந்ந அமைதிப்படை தனது நோக்கத்திலிருந்து விலத்தி பல அழிவுகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
1989 செப்டம்பர் 13ல் பிரேமதாசா அரசினால் சர்வகட்சிகளின் மாகநாடு ஒன்று ஆரம்பிக்கப்ட்டது. இதில் விடுதலைப் புலிகள் தவிர்ந்த 21 அரசியல் கட்சியைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது பலவருடங்களாக இழுத்தடிக்கப்பட நிலையில் எந்தமுடிவும் அற்ற நிலையில் முடிவடைந்தது.
1993 இல் பிரேமதாசா இறப்பிற்குப்பின் வந்த விஜயதுங்க தமிழர் பிரச்சினை என்பது வெறுமனே ஒரு பயங்கரவாதப் பிரச்சினை என்றும் இராணுவரீதியில் புலிகளை வென்றுவிட்டால் தமிழர் பிரச்சனை முடிந்துவிடும் என்று செயற்பட்டார்.
இதன்பின்னர் 1994ல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதாக் கூறிக்கொண்டு வந்த சந்திரிக்கா அரசானது கடிதம் மூலமான பரிமாற்றத்தை ஏற்படுத்தியது. இது 02.09.1994 க்கும் 18.04.1995 க்கும் இடையிலான 6 மாதக் காலத்தில் ஏற்பட்டதாகும். ஆக மொத்தத்தில் 70 கடிதங்கள் பரிமாற்றப்படடன. இத்துடன் நாலு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. ஆனால் எதுவுமே பலன் அழிக்கவில்லை.
டிசம்பர் 2002ல் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரச பதவிக்கு வந்தது. நாட்டின் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் 2002 ஏப்ரலில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்ப்படட்டன. இதுவும் எந்தவித பலனும் அளிக்கவில்லை.
இருசுற்றுப் பேச்சுவார்த்தை - (2005ம் ஆண்டு டிசம்பர் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசுடன் 2006ல் இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்றது. இலங்கை அரசு வாக்குறுதிகள் நிறைவேற்றாத நிலையில் பேச்சுவார்த்தை முறிவுற்றது.
பொதுக்கட்டமைப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை - (15.07.2005 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே ஏற்பட்ட பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கு இலங்கை அரசின் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்தது.
வடக்கு கிழக்கு மாகாணம் பிரிப்பு - ( 2007ல் மகிந்த அரசினால் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது.
பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 ல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது.
மகிந்த அரசின் போர்ப் பிரகடனம் - (2008 ஜனவரி 03ம் திகதி மகிந்த அரசு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக முறிக்கப்பட்டது. மகிந்த அரசு இனவாதத்தை வெளிப்படுத்தி போரைப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தின் மீது முழு அளவிலான போரை முன்னெடுத்தது.
தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு:
தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் அவலங்கள் என்ற வகையிலே பல கசப்பான அனுபவங்களும், ஏமாற்றங்களும், பாரிய இழப்புக்களும், இனவொடுக்குமுறை போர் போன்றனவே முக்கியமானவையாகும். அவற்றில் முக்கியமானவையாக கல்வி ஒடுக்குமுறை முக்கியமானதாகும்.
1960 வரை இலங்கையில் இருந்த பாடசாலைகள் பெரும்பாலும் இந்து, பௌத்த, கிறிஸ்தவ அமைப்புக்களின் மேற்பார்வையிலே இயங்கிவந்தது. 1960, 1961 இல் பெரும்பான்மையான பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டனவாகும்.
இதனைத் தொடர்ந்து பாடப்புத்தகங்கள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர் நியமனம், பாடசாலை நூலக நியமனம் போன்ற பலவிடயங்களில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணியாக சிங்கள மொழி அரசகரும மொழியாக அமைந்ததேயாகும்.
இதனைவிட பாடப்புத்தகங்களில் சிங்கள பௌத்த தேசியவாதத்தை வலுயுறுத்தியும் எழுதப்பட்டன. இதற்கு எடுத்துக்காட்டாக 1983 ஐனவரி 1ல் சனாதிபதியினால் கையளிக்கப்பட்ட பாடப்புத்தகத்தல் 1948ல் இலங்கை பெற்ற சுகந்திரம் சிங்களவர்களாலேயே பெறப்பட்டது என்றும் அது சிங்களவரால் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களில் அரசின் அங்கீகாரத்துடன் செயற்படுவது நாட்டின் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்துவதுடன் இனவாதத்தையும் காட்டிநிற்கின்ற விடயமாகும்.
1970ல் சிறிமாவோ அரசாங்கத்தினால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவுசெய்யும் முறை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல். 1971ல் அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தின்படி மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யும் தமிழ் மாணவர்;களுக்கு குறைந்தபட்சம் 400 க்கு 250 புள்ளிகள் தேவையென்றும், சிங்கள மாணவர்களுக்கு 229 என்றும் சட்டப்படுத்தப்பட்டது. இரு தரப்பும் ஆங்கிலத்தில் தோற்றினாலும் இவ்விதியே பின்பற்றப்படும் எனப்பட்டது.
1972ல் மாவட்டங்களுக்கான ஒதுக்கீட்டுமுறை கொண்டுவரப்பட்டது. அடுத்து 1977ல் பிரதான பிரச்சினையாக பல்கலைக்கழக அனுமதி அமைந்தது. இவ்வாறன பிரச்சனைகளும், புறக்கணிப்புக்களும், தமிழ் மக்கள் கல்விக்கு இடையூறு விளைவிக்கும் கடும்போக்கு 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகத்திற்கு வைத்த தீயில் இருந்து வெளிப்படுத்தப்பட்டது. இதனை அரசின் காணி அபிவிருத்தி, மாகவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்காவின் தலைமையிலான குண்டர்கள் செய்துமுடித்தனர்.
யாழ் மக்களின் பண்பாட்டு கருவூலமாக விளங்கிய இந்த நூலகம், சுமார் 98 ஆயிரம் புத்தகத் தொகுதிகளையும் அரிதான கையெழுத்துப் பிரதிகளையும், பண்டைய ஏட்டுச் சுவடிகளையும் கொண்டிருந்தன. இதில் முக்கியமாக கருதப்படவேண்டியவர்கள் வண. பிதா தனிநாயகம் அடிகளார், வண. பிதா. லோங் அடிகளார், வண. பிதா. தாவீது அடிகளார் (டேவிட்) முதலியோர் ஆவர். இவர்களில் தாவீது அடிகளார் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலகம் 1934ல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
பயங்கரவாதத் தடைச்சட்டமும் தமிழர்கள் அவலங்களும்:
1979ல் முதல் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் பெயரால் சந்தேகத்தில் கைதாகும் ஒருவரை 18 மாதங்கள் எந்தவித விசாரணையுமின்றி தடுத்துவைக்கப்படவும், அவரைப்பார்ப்பதற்கு அனுமதியும் மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சட்டமானது 1982ல் நிரந்தரமாக்கப்பட்டது. இதனால் கைதானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே, மற்றும் தமிழ் இளைஞர்களே ஆவர். ஏராளமான தமிழ் இளைஞர்கள் எந்தவிதக் காரணமின்றியே சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினார்கள்.
இவ்வாறான காலகட்ட தமிழர்களின் அவலங்களில் 1983ம் ஆண்டு முக்கிய இடம் பிடிக்கின்றது. 1983ல் பாதுகாப்பு படையின் அனுசரணையுடன் அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இனப்படுகொலை விடுதலை வேண்டி நின்ற மக்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கையாக அமைந்தது.
1958, 1965, 1971, 1977, 1981 என கட்டவிழ்தது விடப்பட்ட இனக்கலவரங்கள் பலவும் தமிழர்கள் தமக்கெனவோர் நாடு வேண்டி போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது எனலாம். 1983 இனப்படுகொலை கலவரத்தின் போது நேரிற்கண்ட சாட்சியங்களாக வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள், அவர்கள் எடுத்த புகைப்படங்கள் முதலியவன ஆவணப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.
இவ்வாறான அவலங்களுக்கு மத்தியிலும் தாம் உயிர்வாழ முடியாது என அஞ்சி தமிழ் மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டனர். இவ்வாறான இடப்பெயர்வுகள் மக்களை வெளிநாடுகளுக்கு இட்டுச்சென்றது. இவ்வாறு பெரும்பாலான இலங்கை தமிழர்கள் அரசியல் புகலிடம் கோரி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
இவ்வாறு மக்கள் இடப்பெயர்வினை மேற்கொண்டமை சிங்கள இனத்திற்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் பலத்தைக் குறைக்கவும், மட்டுப்படுத்தவும், சிங்கள அரசு வெளிநாடுகளில் தமது தூதரங்கள் கொண்டு, பரப்புரைகள் மூலமும் செயற்பட்டுவருகின்றது.
அவலங்கள் என்ற வகையிலே ஆவணப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாக அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் ஆகும். அந்த வகையில் சுதந்திரப்போராளிகளை பயங்கரவாதிகள் என அடையாளம் காட்டி உலக நாடுகளின் அனுதாபத்தையும் கவனத்தையும் பெரும்பான்மை ஆதிக்கவாசிகள் ஈர்த்து விடுகின்றனர். எவ்வகையிலும் இழப்பு என்பது சிறுபான்மை இனத்தினருக்கேயாகும்.
ஈழத்தமிழர் அவலங்கள் என்பது பொதுவாக உரிமைக்காகப் போராடிய மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டமையே ஆகும். இனப்படுகொலை என்பது இருவகைப்படும். ஒன்று திட்டமிட்ட முறையில் படிப்படியாக ஒரு இனத்தின் அத்திவாரத்தை ஆட்டமிழக்கச் செய்து அந்த இனத்தை ஒடுக்கி அழித்தல். இது அவர்களின் மொழி, வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், அவர்கள் பாரம்பரிய நலங்களின் புவியியல் அமைப்பு முதலியவற்றைச் சிதைத்தல். அடுத்து வெளிப்படையான கொலை மூலம் அழித்தல். ஈழத்தமிழர்கள் இவ்விரண்டு வகையான அவலங்களைச் சந்திக்கின்றார்கள். இதனைவிட பொருளாதாரத்தடை போன்றவற்றையும் அரசு மேற்கொள்கின்றது.
1998 நவம்பர் 21க்கும் 27க்கும் இடையில் பாசிலோனா என்ற இடத்தில் சர்வதேச அரசியல் வல்லுனர்களின் மகாநாடு ஒன்று நடைபெறுகின்றது. இந்த மாகாநாட்டில் “சர்வதேசங்களிலும், மனித உரிமைகள் உட்பட்ட இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எல்லாவித சட்டங்களும் உலகளாவியரீதியில் பாராபட்சமற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” எனப்பேசப்பட்டது.
இன்று ஈழப்போராட்டமானது உலகெங்கும் உள்ள தமிழர்களின் போராட்டமாகப் பரிமாணித்துள்ளது. “உலகெங்கும் 71 நாடுகளில் வாழும் 70 கோடிக்கும் மேற்ப்பட்ட தமிழர்களின் கவனம் இவ்விடயத்திலேயே ஈர்க்கப்பட்டுள்ளது.” 1956ல் ஏற்படுத்தப்பட்ட தனிச்சிங்களச் சட்டமே 1972ல் ஆரம்பித்த தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கான அடித்தளத்தை இட்டது எனலாம்.
ஒப்பந்தங்கள் பலவாறு இருந்தாலும் தமிழர்களது உரிமைகளை முற்றாக நிராகரித்ததொன்றாகவே இருக்கின்றது. கடந்த 30 வருடங்களின் பின்னர் கூட இந்த நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பபடவில்லை.
1987 ல் இலங்கையில் அமைதியும் சமாதானத்தையும் நாட்டவென தீவிர முயற்சிகளின் பின் மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்தியா உடன்படிக்கையை தமிழரசுக்கட்சியின் பின்னாள் வடிவமான தமிழர் கூட்டணி ஏற்றுக்கொண்டு முன்னைய தமிழ் அரசியல் வாதிகள் செய்த அதே தவறைத் தொடர்ந்து. 1997இல் இலங்கை - இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் கூட பொதுஐன ஐக்கிய முன்னணி முன்வைத்த தீர்வுப்பொதி சிங்கள அரசியல் வாதிகளின் சிங்களத் தேசியம் பற்றிய மனநிலையையே பிரதிபலித்தது.
கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு பார்க்கும் போது சிங்களத்தலைமை எதுவாக இருந்தாலும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை, அதிகாரப்பகிர்வு, அரசமொழி, குடியேற்றங்கள் என்பனவற்றில் ஓரே விதமான கொள்கையையே கடைப்பிடிப்பதானது என்பது திண்மம்.
இலங்கையில் ஈழத்தமிழர்களின் ஆதிக்கததையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள், அவர்களை 1970 – களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நாலாந்தர குடிமக்கள் போல தமிழர்களை ஒதுக்கினார்கள்.
சொந்த மண்ணில் எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாத நிலை உருவானதால் ஈழத் தமிழர்கள் கொதி;த்து எழுந்தனர். மகாத்மா காந்தி போல சிலர் அறவழிப் போராட்த்தை கைக்கொண்டனர். சிலர் சுபாஸ் சந்திரபோஸ் மாதிரி ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள். தொடக்க காலத்தில் நிறைய ஆயுதக்குழுக்கள் தோன்றின. ஆனால் தெளிவான நோக்கம் இல்லாததால் அவை வந்த வேகத்தில் மறைந்தன.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அல்லலுறும் தமிழ் இனத்தின் பிரச்சினை என்பது வெறும் பெரும்பான்மை சிறுபான்மைப் பிரச்சினை ஒன்றல்ல. அதற்கும் மேலாக இரு இனங்களுக்கான தேசியப்பிரச்சினை என்பதுதான் உண்மையாகும்.
ஈழத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகக் குடிகளாக காணப்பட்டபோதும் ஏனைய மாகாணங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் உரியதாக ஆரம்பகால சிங்கள அரசியல்வாதிகள் தம் பண்டைய சிங்கள மன்னர்களுடன் தொடர்புபடுத்தி தமதாக்கிக் கொண்டனர்.
வடகிழக்கில் சிங்கள விவசாயிகள் அவர்தம் சொந்தக் கிராமங்களில் இருந்து மிகத்தொலைவாக உலர்வலயத்தில் உள்ள தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் குடியமர்த்துவதற்கு அரச ஆதரவுடனான விவசாய குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1930 களில் தொடங்கி உலர்வலயத்தில் உள்ள முடிக்குரிய காணிகள் இனம் காணப்பட்டு அவை பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த சிங்கள விவசாய குடியேற்ற வாசிகளின் நலனுக்காக அபிவிருத்தி செய்யப்பட்டன.
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அரசாங்க அணுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன அபிவிருத்தித்திட்டத்துடன் கூடிய காணிப்பங்கீட்டுத்திட்டங்கள் தமிழர்கள் தம் தாயக ஆட்சிப்பிரதேச கொள்கையை முன்வைக்கத்தள்ளியது.
தமிழ் மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனத்திட்டங்கள் அபிவிருத்தி செய்தும் பெருந் தொகையான சிங்கள குடியேற்றங்கள் நிறுவியும் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தமிழர்களின் இன விகிதாசார முதல்நிலையை குழப்பிவிடுவதுமே திட்டமாக அமைந்தது.
1948ன் பின்னர் இத்திட்டம் விரைவாக்கப்பட்டதன் விளைவாக தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் முரண்பாட்டையும் பாரிய பிளவையும் ஏற்படுத்தி இறுதியில் ஈழக்கோரிக்கையிலும் பிரிந்து சென்று தனியரசு தோற்றுவிப்பதிலும் முடிவுற்றது.
கிழக்கு மாகாணங்களில் சில முக்கிய சிங்களகுடியேற்றங்கள்…:-
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்
1950 களில் உருவாக்கப்பட்ட கந்தளாய் மற்றும் கல்லோயா ஆகிய குடியேற்றங்களில் குடியேறிய சிங்கள மக்களின் எண்ணிக்கை அந்தந்த மாவட்ட தமிழ் விவசாயிகளின் எண்ணிக்கையை மிஞ்சியதாகக் காணப்பட்டது.
இது அம் மாவட்டங்களில் இன விகுதாசாரத்தை மாற்றும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டிருந்தன. 1931-1953 வரை 16,532 பேருக்கிடையில் பிரித்து வழங்கப்பட்ட 47,931 ஹெக்டயர் காணியில் 17.4 சதவீதமே தமிழர்களுக்கு கிடைத்தது.
1949ல் இங்கினியாகலையில் கல்லோயாத்திட்டம் சேனாநாயக்க சமுத்திரத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது. 1,20,000 எக்கரைக் கொண்ட கல்லோயாத்திட்டத்தில் 150 குடும்பங்களைக்கொண்ட 40 குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
இதில் 6 குடியேற்றங்களே தமிழருக்கு வழங்கப்பட்டது. இதில் சுமார் 20,000க்கம் மேற்பட்ட சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். 1956 யூன் 06ல் தமிழர்கள் இனக்கலவரத்தால் அங்கிருந்து விரட்டப்பட்டதுடன் அவ் 6 குடியேற்றத்திட்டங்களும் சிங்களவர் தம்வசமாக்கி தற்போது அது முற்றுமுழுதாயும் சிங்களக் குடியேற்றங்களாகவே காணப்படுகின்றது.
1960ல் முற்ற முழுதாயும் சிங்களக்குடியேற்றத்திட்டமாக அம்பாறையில் முற்றிலம் புதிய தேர்தல் தொகுதியான திகாமடுல்ல உருவாக்கப்பட்டது.
அம்பாறையில் 16 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் 8ல் சிங்களவர் பெரும்பாண்மையினராக குடியேற்றப்பட்டனர். அதில் அம்பாறைநகரம், தமண, நாமல்ஓயா, உகண, தெகியத்தகண்டிய, லகுகல, மகாஓயா, பதியத்தலாவ, ஆகிய உதவி அரசாங்கப்பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை அம்பாறை நிலப்பகுதியின் 4,318 சதுரமுஅல் 3,391 சதுரமுஅ பரப்பளவைக் கொண்டதுடன் அம்பாறை மாவட்டத்தின் 78வீத சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட பிரதேச சமூகமாக மாறிவிட்டது.
திருகோணமலை மாவட்ட குடியேற்றத் திட்டங்கள்
திருகோணமலை மாவட்டத்தில் அல்லை குடியேற்றத் திட்டத்தின் கீழ் 65வீத சிங்களவரும் 35வீத முஸ்லீம்களும் கந்தளாய் குடியேற்றத்திட்டத்தின் கீழ் 77வீத சிங்களவர்களும் 23வீத தமிழர்களும் குடியமர்த்தப்பட்டனர்.
பின் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அங்கிருந்து பலவந்தமாக துரத்தியடிக்கப்பட்டு முற்றிலும் சிங்கள குடியேற்றமாக மாற்றப்பட்டுள்ளது. முதலிக்குளம் மொறவேவ என மாற்றப்பட்டு 100மூ சிங்களகுடியேற்றமாக காணப்படுகின்றது.
இன்று இப்பாதையூடாக பயணம் செய்யும் போது இடிபாடுகளுடன் சிதைந்த தமிழ்க்கோவில் ஒன்றும் முதலிக்குளம் என கல்லில் பொறிக்கப்பட்ட இடப்பெயர்ப்பலகையும் மட்டுமே பழையவரலாற்றைக் கூறும் சாட்சியங்களாகின்றன.
1972ல் நொச்சிக்குளம் என்னும் தமிழ்ப்பிரதேசம் நொச்சியாகம என மறுபெயரிடப்பட்டு கப்பல்துறையிலும் பாலம்பட்டாற்றிலும் வாழ்ந்த தமிழரிடம் இருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட 50,000 ஏக்கர் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து குச்சவெளி, புல்மோட்டை, கும்பிறுப்பிட்டி, திரியாய், தென்னமரவாடி ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். 1981ல் திருகோணமலையில் உள்ள 11 உதவி அரசாங்கப் பிரிவுகளில் 7பிரிவுகள் சிங்களவரை அதிதமாகக் கொண்டமைந்துள்ளது.
அவற்றில் திருகோணமலைப்பட்டினமும் சூழலும், தம்பலகாமம், சிறிபுர, கோமரங்கடவை (கோமரங்கடவல), முதலிக்குளம்(மொரவேவ) கந்தளாய், சேருவல ஆகியனவாகும். இதில் சேருவல தேர்தல் தொகுதி திருகோணமலை மொத்த நிலப்பரப்பில் 3/5 கொண்டது குறிப்பிடத்தக்கது.
1984 டிசம்பர் புல்மோட்டை கமத்தொழில் சங்கத்துக்கு அடுத்த அமைந்துள்ள தென்னமரவாடிக் கிராமத்தை தாக்கி தமிழருக்கு சொந்தமான 165 வீடுகளையும் 7 கடைகளையும் சூறையாடியபின் எரித்தனர்.
1960-1970 களில் திருகோணமலை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அபயபுர, மிகிந்தபுர, பஸ்திரபுர, சிறிமாபுர என்பன தமிழர்களைத் துரத்தி விட்டு உருவாக்கப்பட்ட சிங்களக் கிராமங்களாகும்.
1984ல் சீனன்குடாவிலும் கவதிக்குடாவிலும் வாழ்ந்த தமிழ்மக்கள் ஆயுதப்படைகளால் அடியோடு துரத்தப்பட்டு சிங்களவர் ஆக்கிரமித்துள்ளனர்.
1996ல் திருகோணமலை நகரின் அருகாமையில் உள்ள லிங்கநகரில் இராணுவ முகாம் அமைப்பதற்கு 47 தமிழ்க்குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.
தொடர்ந்து 1998 ஒக்டோபரில் 132 தமிழ்க்குடும்பங்கள் அதே இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட காரணங்காட்டி இடம்பெயர வைக்கப்பட்டது.
வடக்கு மாகாணங்களில் சில முக்கிய சிங்களக் குடியேற்றங்கள்
வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்ட பதவியா குடியேற்ற திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கை இரு கூறுகளாய் பிரிப்பதன் மூலம் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேசம் ஒன்று உருவாகியது.
அம்பலாங்கொடயில் இருந்து வந்த சிங்களவரைக் கொண்டமைந்த குடியேற்றமாகையால் அம்பலாங்கொடகல எனப் பெயரிடப்பட்ட சிங்களக் குடியேற்றக்ககிராமம் உருவாக்கப்பட்டது.
1956ல் பாவற்குளம் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டு 595 தமிழ்க்குடும்பங்களும் 453 சிங்களக்குடும்பங்களைக் கொண்ட குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியான இனக்கலவரத்தால் தற்போது முற்றுமுழுதான சிங்களக் குடியேற்றங்களை மட்டும் கொண்டு காணப்படுகின்றது.
2009ல் இராணுவ உதவியுடன் பூவரசங்குளம் செட்டிகுள வீதியில் சிங்களக் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டு சப்பமல்புர எனப்பெயரிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம்
1988 ஏப்ரல் 16ல் விசேட வர்த்தகமானி அறிவித்தலின்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசம் வெலிஓயா என மறுபெயரிடப்பட்டதுடன் இலங்கையின் 26வது மாவட்டமாக பிரகடணப்படுத்தப்பட்டது.
இது மகாவலி துரித அபிவிருத்தித்திட்டத்தினை உள்ளடக்கியது. 42 கிராமங்களில் வாழ்ந்த 13,288 குடும்பங்களின் காணிகள் அதே விசேட வர்த்தகமானி அறிவித்தலின்படி பறிக்கப்பட்டது.
சிங்கள இராணுவத்தால் 48 மணிநேரங்களில் வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
மகாவலி துரித அபிவிருத்தித்திட்டம் எனப் பெயரிடப்பட்டாலும் இதன் உண்மைக்காரணமாக வடக்கு மற்றம் கிழக்கு தொடரான தமிழ்பிரதேசங்களாக ஒரு நிர்வாக அலகாக மாறக்கூடாது என்னும் காரணத்தையே உண்மையான அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட தண்ணீர்முறிப்பு என்னும் தமிழ்க்கிராமம் ஜானக பெரேராவினால் ஜானகபுர என பெயர் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. 11789 சிங்களவருடன் மணலாறு முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது
மணலாறு ஒரு தமிழ்க்கிராமம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பாலமாகவும் இக்கிராமம்; திகழ்கின்றது. சுருக்கமாகக் கூறினால் தமிழீழத்தின் இதயமாக போற்றப்படுகின்றது. மணலாறு கிராமத்தை விட்டுக்கொடுத்து தமிழீழம் அமைக்க முடியாது.
அதன் முக்கியத்துவம் உணர்ந்து சிறிலங்கா அரசாஙகம் இக்கிராமத்திற்கு ‘வெலிஓயா’ என்ற சிங்களப் பெயரைச் சூட்டியது. முள்ளிவாய்க்காலின் பின் மணலாறு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவசர அவசரமாகப் பிரிக்கப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதின் பின் மணலாறு கிராமத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். ஆனால், திடீரென அந்தக் கிராமம் இப்போது முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கிராமம் இப்போது முழுக்க முழுக்க சிங்களக் கிராமமாக மகிந்த அரசினால் மாற்றப்பட்டுள்ளது.
அக்கிராமம் 19 கிராமசேவகர் பிரிவுகளாக விரிவடைந்துள்ளது. மொத்த சனத்தொகை 11789. அனைவரும் சிங்களவர்கள். ஒரு தமிழர்கூட இல்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களுக்கு இல்லாத சகல வசதிகளும் புதிய சிங்களக் கிராமத்துக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
நவீன வீட்டு வசதிகளுடன் சிங்கள மக்கள் மகிந்த அரசினால் குடியேற்றப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு தமிழ்க் குடிப்பரம்பலுடன் இந்தச் சிங்களவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக தீவிர சிங்களக் குடியேற்றம் செய்யப்படும் மகிந்தவின் திட்டத்தின் ஒரு பகுதி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகவே புதிய சிங்களக் கிராமம் பிரித்து வைக்கின்றது. புதிய உதவி அரசாங்க செயலர் பிரிவொன்றும் வெலிஓயா கிராமத்திற்கென்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர் வாழ்ந்த காலத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாக மாத்திரமே அது விளங்கியது.
யாழ். மாவட்டம்
1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதும் சிங்கள மொழி பெயர்ப்பாக ‘யாப்பாபட்டுன’ என அழைத்தனர்.
யாழ். மாவட்டம் தொடர் பூர்வீக தமிழ்ப்பிரதேசமாக விளங்கிய காரணத்தால் சிங்களக்குடியேற்றங்கள் பெருமளவில் நடைபெறவில்லை.
சிங்கள அரசபடைகளின் குடும்பங்கள் இராணுவ நிலைகளுக்கு அருகாமையிலும் உயர்பாதுகாப்புப் பிரதேசங்களிலும் தனிக்குடும்பங்களாக இருக்கினறனர். மேலும் காங்கேசன்துறைமுக வேலைகளுக்காக சில சிங்களக்குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாண நுழைவாயில் நாவற்குழி பாலத்தின் அருகே சில சிங்களக் குடும்பங்களை குடியேற்றியுள்ளனர்.
இவர்கள் தாம் ஆரம்பத்திலேயே இங்கு வாழ்ந்ததாகவும், தம் அடையாள அட்டையில் பிறப்பிடம் யாழ்ப்பாணம் நாவற்குழி என இருப்பதாகவும் தாம் யாழ்ப்பாண புகையிரத சேவையில் ஆரம்பகாலத்தில் இருந்ததாகவும் யுத்தம் காரணமாக இடமபெயர்நை்து தெற்கு பிரதேசங்களில் வசித்ததாகவும் கூறுகின்றனர்.
2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னர் சிங்கள அரசும் அதன் அரக்கப்படையும் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் முழு மூச்சாக ஈடுபடுகிறது.
அதுமட்டும்மில்லாமல் கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல், கொலைகள், சித்திரவதைகள், கப்பம் பறித்தல், பாலியல் வல்லுறவு, கலாச்சார சீர்கேடுகள், கையேந்துநிலையில் தொடர்ந்து திறந்த வெளிச்சிறையில் தமிழர்களை வைத்திருத்தல் என ஒரு பாரிய கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சிங்கள அரசும் அதன் ஏவல்படையும் கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.
இவை அனைத்திற்க்கும் சில தமிழ் துரோகிகளும் உடந்தையாக இருக்கின்றனர். இவ் தமிழின அழிப்பிலிருந்து தமிழினம் தன்னை பாதுகாத்துக்கொண்டு தமிழீழ விடுதலையை புள்ளியாகக்கொண்டு ஒருமித்த கருத்தியலோடு தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் எங்கும் தமிழர்கள் நாம் நகரவேண்டும்.
விட்ட இடத்தில் இருந்து விடுதலைப் பயணத்தை நாம் தொடர்வோம்.
- ஈழத்து நிலவன்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq6C.html

Geen opmerkingen:

Een reactie posten