வீதி அபிவிருத்திகள் தொடர்பில் அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்
வீதி அமைப்பு திட்டங்கள், சர்வதேச சந்தையில் சீனி மற்றும் பருப்பு விலைகளை போன்று சராசரிகளை பார்த்து மேற்கொள்ள முடியாதவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களை புதிய அரசாங்கம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தமது தொழில்களை இழந்துள்ளனர். இதனால் புதுவருட கொண்டாட்டங்களில் அவர்கள் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். வெறுமனே கடந்த காலத்தை பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வீணடிப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமையன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் கபீர் ஹாசிம் முன்னாள் ஜனாதிபதியின் நிர்வாகம் குறித்து பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
அதில் 2010ஆம் ஆண்டு லுனுகம்வெஹர- கதிர்காமம், இரண்டு ஒழுங்கை பெருந்தெருக்கள் நிர்மாணிப்பின் போது சராசரியாக 75 மில்லியன் ரூபாய்களுக்கு பதிலாக 259 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார். யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதிக்கு 318 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எனினும் 470 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன இது தொடர்பான பல வீதிகளுக்கான ஒதுக்கீடுகளையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten