முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-3)
இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".
உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.
இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 12-ம் திகதி போரின் உச்சகட்ட தினமான இன்று நடந்தது இதுதான்..
உண்டியல் சந்திப் பகுதியை இராணுவம் அண்மித்துள்ளது, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் உட்பட்ட பகுதிகளே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும், வான் வழியாகவும் ஸ்ரீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் ஈவு இரக்கமின்றி தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாளுக்குநாள் இறந்தும், துடி துடித்த நிலையிலும், மருத்துவ வசதிகள் ஏதும் இல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறார், எங்கும் மரண ஓலம், தொடர்ந்து சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.
யாரும் யாருக்கும் சென்று உதவ முடியாத நிலை. பதுங்கு குழிகளுக்குள் இருந்து மேலே ஏறினால் மரணம் என்கின்ற சூழல். செய்வதறியாது நிற்கின்றனர் தமிழ் மக்கள்.
இந்நிலையில் இன்றைய தினமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கேணல் சூசை அவர்கள் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான புலிகளின் குரல் வானொலியூடாக மக்களின் அவலநிலையை குறிப்பிட்டு உலக நாடுகள் போரை நிறுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துக்கொண்டே இருக்கிறார்.
மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.
இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..
நேற்றைய தொடர்சி..
உலுக்கிய அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை - பள்ளமடுவிலிருந்து மடு நோக்கி பொது மக்களுடனும், மாணவர்களுடனும் பயணித்த தனியார் பேருந்து கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது என்ற அதிர்சி செய்தியை அறிந்தேன். ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து நின்றேன் அந்த பேருந்தில் பயணித்த என்னுடன் படித்த சக மாணவர்கள், எனக்கு படிப்பித்த ஆசிரியர், எனது ஊர்மக்கள், பச்சிளங் குழந்தைகள் என மொத்தம் 18 பேர் அகால மரணமடைந்ததுடன் 10-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இச் சம்பவம் கிளிநொச்சியில் செஞ்சோலையில் நடந்த மாணவர்கள் மீதான வான் தாக்குதலை அடுத்து உலகத்தை உலுக்கிய பாரிய இனப்படுகொலை இதுதான். ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் ஆறுதலுக்கு கூட யாருமில்லை ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலம், இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மடு தேவாலயத்தில் வைத்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பெரும்திரளான மக்களின் கண்ணீருடன் ஸ்ரீலங்கா இராணுவத்தின் சரமாரியான எறிகணைத் தாக்குதலன் மத்தியில் மடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச் சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் இன்றளவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்துக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாலம்பிட்டி - நெட்டாங்கட்டைப் பகுதியில் துக்க வீட்டிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பனையைச் சேர்ந்த தம்பதிகள் கிளைமோர் தாக்குதலில் பலியானதுடன், தட்சனாமருதமடு அந்தோனியார் தேவாலயத்தின் மீது எறிகணை விழுந்ததில் பல மக்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து தட்சனாமருதமடுவில் அப்போது இடம்பெயர்ந்து வசித்து வந்திருந்த மக்களுடன் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களால் அப்போதைய யுத்த நிலவரங்கள் தொடர்பில் தெளிவு படுத்தியதுடன், இப்பிரதேசத்தை விட்டு பின்வாங்குமாறு அறிவுறுத்தப் பட்டதுடன் பொருட்களை ஏற்றி செல்வதற்காக வாகனங்களையும் ஏற்பாடு செய்துதந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாங்கள் பெரியமடுபகுதிக்குச் சென்று அங்கு வீடு அமைத்து அத்துடன் வீட்டிற்குள்ளே பதுங்குகுழி அமைத்து மீண்டும் புதிய மக்கள், புதிய பாடசாலையென காட்டு யானைகளுக்கு மத்தியிலும் வாழ்க்கை தொடர்கிறது. அங்கு சில காலம் எறிகணைச் சத்தங்கள் இல்லாமல் இருந்தோம் ஆனால் மடுப்பகுதியில் கடுமையான யுத்தம் தொடர்ந்து மாதக்கணக்கில் நடை பெற்று வருகிறது.
அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் இடம்பெற்றது..
இனப்படுகொலை தொடரும்..
ந.ஜெயகாந்தன்.
முன்னய பாகம்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கியசாட்சியின் அனுபவப்பகிர்வு (பாகம்-1) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; ஒரு முக்கியசாட்சியின் அனுபவப்பகிர்வு (பாகம்-2)
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Jeyakanthan அவர்களால் வழங்கப்பட்டு 12 May 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Jeyakanthan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.
http://www.ibctamil.com/articles/80/100435?ref=ls_d_ibc
http://www.ibctamil.com/articles/80/100435?ref=ls_d_ibc
Geen opmerkingen:
Een reactie posten