தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 mei 2018

உலக வல்லரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்;; முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-6)

Image
இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".
உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.
இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 15-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..
முள்ளிவாய்க்காலின் ஒருபகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியதுடன், இரட்டை வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தரப்புக்கும் கடும் சமர், தரைவழியாக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது இராணுவம்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர் , பலர் படுகாயங்களுடன் ஆங்காங்கே துடிதுடித்துக் கொண்டு கிடக்கின்றனர், முடிந்த அளவிற்கு விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மக்களுக்கு சிகிச்சையளித்து வந்த நிலையில், இந்த சிகிச்சையும் சூழ் நிலை கருதி நிறுத்தப்பட்டது. உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் மண்ணுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர் தமிழ் மக்கள்..
எங்கும் மரண ஓலம், தங்களை நியாயவாதிகளாக காட்டிக்கொள்ளும் உலக வல்லரசுகள் வெட்கம் கெட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் உறவுகள் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர், ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமால் இராணுவத்தின் அடக்கு முறைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர், ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்கள் முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாம்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர், சிங்களவரும், முஸ்லிம்களும் பாலச்சோறு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.
மக்களின் அவலங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின், புலிகளின் குரல் வானொலி இன்றுடன் நிறுத்தப்படுகின்றது.
எஞ்சிய மக்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கூட இல்லை.
இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..
நேற்றைய தொடர்ச்சி..
முழங்காவில் பகுதியை கைப்பற்றிய நிலையில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகின்றது ஸ்ரீலங்கா அரசபடை, நாங்கள் வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில் கொட்டகை அமைத்து வசித்துக் கொண்டிருக்கிறோம், மடுவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் எங்களுக்கு இது ஆறாவது இடம்.
இந்நிலையில் முழங்காவில் பகுதியிலிருந்து முன்னேறி வந்த இராணுவம் கடுமையான யுத்தத்தின் பின்னர் முருகண்டிப் பகுதிக்குள் ஊடுருவியது , அப்போது விடுதலைப்புலிகளால் கிளிநொச்சியில் உள்ள நீர்த்தாங்கி வெடி வைத்து தகர்த்தப்பட்டது, இந்த சம்பவத்தின் சில நாட்களின் பின்தான் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் முறிகண்டி ஊடாக கிளிநொச்சிக்குள் ஊடுருவினர்.
நாங்கள் அடுத்த இடத்தை நோக்கி அவசரவசரமாக கையில் கிடைத்த உடமைகளுடன் தருமபுரத்திற்கு செல்கின்றோம் அங்கு எந்த வசதியும் இல்லாமல் வீதியில் உணவு சமைத்து, அங்கேயே உறங்கியபடி எங்களின் அவலநிலை தொடர்கின்றது, அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான நகரமான கிளிநொச்சியை முழுமையாக கைப்பற்றியது ஸ்ரீலங்கா அரசபடை கிளிநொச்சியை விடுதலைப்புலிகள் கைப்பற்ற விடமாட்டார்கள் என அனைவரும் நம்பியிருந்தனர், இதே நேரத்தில் மகிந்த தரப்பு இந்த வெற்றியை கொண்டாடியதுடன், இன்னும் தீவிரமாக யுத்தத்தை மேற்கொண்டது, இந்தியா உட்பட்ட பல உலகநாடுகளை அந்த சமயத்தில் கூட விடுதலைப்புலிகள் நம்பிக்கொண்டிருந்தனர்.
மறுபுறம் மக்கள் வீடுகளின்றி, உணவின்றி வீதிகளிலே வாழ்ந்து வருகின்றனர், அவ்வப்போது எறிகணைகளில் சிக்கி நாளாந்தம் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர், மருத்துவ வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போர் இன்னும் உக்கிரமடைகிறது இராணுவம் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றனர் தருமபுரத்திலும் வசிக்க முடியாத நிலை எறிகணைகள் இந்தப் பகுதிகளிலும் விழுந்து கொண்டிருக்கின்றன அடுத்த இடமான சுதந்திரபுரத்தை நோக்கி கையில் கிடைத்த பொருட்களைக் கொன்டு மிருகங்களைப் போல் தெருத்தெருவாக திரிந்துகொண்டிருக்கிறோம், நாங்கள் மாபெரும் அழிவை சந்திக்க போகின்றோம் என எங்களுக்கு அப்போது தெரியாது,
இந்த சமயத்தில் சுதந்திரபுரத்தையும் இராணுவம் அண்மித்தது, எறிகணைத் தாக்குதல்கள், கடுமையான மழையின் மத்தியிலும் உணவின்றி, தூக்கமின்றி நாங்கள் தேவி புரத்துக்குச் சென்றோம், அதன் பின் இரணைப்பாலை பகுதிக்குச் சென்று விட்டோம், இந்த தருணத்தில் இருட்டுமடு, சுதந்திரபுரப் பகுதியை இராணுவம் தீடிரென கைப்பற்றியது, அப்போது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும் பல மக்கள் உயிரிழந்ததுடன், உயிருடன் இருந்த மக்களையும் இராணுவம் தன்வசப்படுத்தியது..
இனப்படுகொலை தொடரும்..

Geen opmerkingen:

Een reactie posten