தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 mei 2018

கதறல் சத்தம் எழுந்து பார்த்தல் ஆறுபேர் பலி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-7)

Image
இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் "முள்ளிவாய்க்கால்".
உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.
இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 16-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..
முள்ளிவாய்க்காலின் ஒருபகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியதுடன், இரட்டை வாய்க்காலில் பெரும் பகுதியையும் கைப்பற்றியது ஸ்ரீலங்கா அரச படை விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தரப்புக்கும் கடும் சமர், தரைவழியாக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது இராணுவம்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி இறந்துகொண்டிருக்கின்றனர் , பலர் படுகாயங்களுடன் ஆங்காங்கே துடிதுடித்துக் கொண்டு கிடக்கின்றனர், முடிந்த அளவிற்கு உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் மண்ணுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர் தமிழ் மக்கள்..
தங்களை நியாயவாதிகளாக காட்டிக்கொள்ளும் உலக வல்லரசுகள் ஜ.நா முற்றத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் உறவுகள் என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர், ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமால் இராணுவத்தின் அடக்கு முறைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர், ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களைப்போல் முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாம்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர், சிங்களவரும், முஸ்லிம்களும் பாலச்சோறு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். எங்கும் வெடிச்சத்தம், புகை மண்டலம், சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.
மக்களின் அவலங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின், புலிகளின் குரல் வானொலி முற்றாக முடங்கியது.
இந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..
நேற்றைய தொடர்ச்சி..
இருட்டுமடு, சுதந்திரபுரத்தை ஸ்ரீலங்கா இராணுவம் இலகுவாக கைப்பற்றிய நிலையில் தேவிபுரத்தை நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது, நாங்கள் அங்கும் வசிக்க முடியாத நிலை பலர் கண்முன்னே எறிகணை விழுந்து இறந்தும், துடிதுடித்த நிலையிலும் கிடக்கிறார்கள், எங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை, தாக்குதல்கள் அதிகரித்துள்ளது, நின்றால் நாங்களும் இறக்க வேண்டிய நிலை சோகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மாத்தளன் பகுதிக்குச் சென்றோம்.
அங்கு கடற்கரைப் பகுதியில் சிறிய கொட்டகை அமைத்து இருக்கின்றோம், அங்கு எந்தவொரு அடிப்படை சுகாதார வசதியும் இல்லை, குடிநீர் வசதியில்லை, கடலில்தான் குளியல், உணவின்றி தவித்தோம் அப்போது மதிய நேரத்தில் மட்டும் விடுதலைப்புலிகளால் கஞ்சி வழங்கப்படும் அதுதான் அன்றைய உணவு.
இப்படியாக சில நாட்கள் கடந்துகொண்டிருக்கின்ற நிலையில் கடுமையான யுத்தத்தின் பின் தேவிபுரத்தை கைப்பற்றி நந்திக்கடலில் அரணை அமைத்தது ஸ்ரீலங்கா அரச படை, நாங்கள் இனி எங்கேயும் செல்லமுயாது, குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டோம், எங்கு சென்றாலும் எறிகணைகள் விழும் நடப்பது நடக்கட்டுமென மாத்தளன் பகுதிக்குள்ளே மணல் தரையிலும் கஸ்ரப்பட்டு பதுங்கு குழிகளை அமைத்து இருப்பை தக்கவைத்துக் கொள்கின்றோம்.
இராணுவம் நந்திக்கடலை கடந்து முன்னேற முடியாத சூழ்நிலையால், சரமாரியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது, விடுதலைப்புலிகளும் பதில் தாக்குதல்கள் நடத்துகின்றார்கள், அப்போது இராணுவத்தின் எறிகணைகள் எமது பகுதிக்குள் விழுகின்றது பலர் எங்கள் கண்முன்னே இறந்தார்கள், இதில் எனக்கு மறக்க முடியாத துயரம் என்றால், ஒருநாள் நாங்கள் பதுங்கு குழிக்குள் குரண்டிய படி உறங்கிக் கொண்டிருந்தோம், அதிகாலை ஜந்து மணியளவில் எறிகணை ஒன்று எமக்கு பக்கத்தில் (இருபது மீற்றர் தூரம்) விழுந்தது, உடனே கதறல் சத்தம் எழுந்து பார்த்தல் குழந்தைகள் உட்பட ஆறுபேர் கொண்ட ஒரு குடும்பம் பதுங்குகுழிக்குள் இருந்த நிலையில், பதுங்குகுழிக்குள்ளே எறிகணை விழுந்ததில் உடல் சிதறி அனைவரும் பலியாகியிருந்தனர், இப்படியான பல சம்பவங்கள் அப்பகுதியில் நடந்தன பலர் முள்ளிவாய்க்காலுக்கு முன் மாத்தளன் பகுதியிலேயே இறந்தனர்.
நடக்கும் துயரங்களை பார்த்துகொண்டு, நாங்கள் எப்போது இறக்கப்போகிறோம் என்ற கேள்விகளுடன் சில நாட்கள் கடந்துகொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் அதிகாலை மாத்தளன் பகுதிக்குள் ஊடுருவியது இராணுவம், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உட்பட்ட சில பெறுமதியான உடமைகளையும் விட்டுட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி ஓடுகின்றோம், நாங்கள் முள்ளிவாய்க்கால் சென்ற சில மணித்தியாலயங்களிலே மாத்தளன் பகுதியை கைப்பற்றியது இராணுவம்..
இனப்படுகொலை தொடரும்..

Geen opmerkingen:

Een reactie posten