தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 augustus 2012

இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய் !!



இறுதிப்போரில்  இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார்.
இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் சந்தித்தேன். 
அவரின் நேர்காணலில் முக்கியமான சில பகுதிகளை இங்கு தருகிறோம்:
கேள்வி. அரச பயங்கரவாதம், சுதந்திரம் குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால், இலங்கையின் பின்னின்று ஒரு போரை இந்திய அரசு நடத்தியபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?''
பதில். இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்!
இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.''
கேள்வி: இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?
பதில்: நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம். இப்படித்தான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனது.
கேள்வி: உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்..?
பதில்: அப்பா ஒரு குடிநோயாளி. என்னுடைய 20 வயதில்தான் அவரைப் பார்த்தேன். அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்குக் கிடையாது. ஆனால், நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. அப்பாவைவிட்டுப் பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் ஒரு சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், 'உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
கேள்வி: இப்போது நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா?
பதில்: ஆமாம். நான் செயல்படும் முறைக்கு அளவற்ற சுதந்திரம் தேவை. அது திருமண வாழ்க்கையில் கிடைக்காது என்பதை என்னுடைய மண வாழ்க்கைகளின் மூலமும் தெரிந்துகொண்டேன். எனக்குக் குழந்தைகள் கிடையாது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதும் இல்லை. என் முதல் கணவருக்கு இரு குழந்தைகள் உண்டு. அவரைவிடவும் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். நான் நேசித்தவர்களை இன்னமும் நான் நேசிக்கிறேன். ஆனால், ஒரு சுதந்திரப் பெண்ணால் இன்னொருவர் விதிமுறைக்குக் கீழ் வாழ முடியாது. சமயத்தில் 10 நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் எழுதுவேன். குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு இது எல்லாம் சரிப்படாது!
கேள்வி:  இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?
பதில்: இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து. அப்படிப் பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் சக்திபோலத்தான் செயல்படுகிறது.
மக்கள் போராட்டத்தை அடக்க இராணுவத்தை அனுப்புவது ஆகட்டும், மற்ற நாடுகளிலும் பிரிவினையை உருவாக்குவது ஆகட்டும். தேசியம் என்பது தவறு அல்ல. ஆனால், அதில் நியாயம் இருக்க வேண்டும்.
வரைபடத்தில் என்னுடைய நாட்டின் அளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. ஆனால், நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்.
கேள்வி:  இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?
பதில்: அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்.
கேள்வி:  மோடி - ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
பதில்: எவ்வளவு மோசமான நாடு இது... (சிரிக்கிறார்). இருவருமே பெரும் சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டுவருவார்.'' 

Geen opmerkingen:

Een reactie posten