தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 augustus 2012

தமிழீழ இராச்சியத்தில் அமெரிக்கரும் - சிங்களரும்: சிங்கள ஊடகங்கள் கொந்தளிப்பு! (படங்கள் இணைப்பு)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான உறுப்பினர்களை அறிவித்துள்ள நிலையில், தமிழீழ இராச்சியத்தில் அமெரிக்கரும் - சிங்களரும் என தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் கொந்தளித்துள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான ராம்சி கிளார்க் மற்றும் சிங்களக் குடிமகனான மனித உரிமைவாதியான கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன உட்டப ஒன்பது பேர், நா.த.அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தென்னிலங்கையின் சிங்கள - ஆங்கில ஊடகங்கள் இச்செய்தியினை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.

சுதந்திர தமிழீழத்திற்கான வேட்கையினை சனாநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அரங்கில் உள்ள நிலையில், மேற்படி இருவரும் நா.த.அரசாங்கத்தின் மேற்சபையில் பங்கெடுத்துள்ளமையானது, தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டினை ஏற்றுக் கொண்டதாக கருத வேண்டியுள்ளதென சிங்கள ஊடகங்களின் அச்சத்தின் பின்னால் உள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான ராம்சி கிளார்க், அமெரிக்கச் சட்டத்திலும் அனைத்துலகச் சட்டத்திலும் துறைதோய்ந்த நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலன் என்று பெயரெடுத்தவர்.

கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச் சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர்.

அனைத்துத் தமிழராலும் உற்றதோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.

சிங்களக் குடிமகனான கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன அவர்கள் இலங்கையில் ஒரு மருத்துவப் பேராசிரியராகத் தொழில் புரிந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று பேரினவாத இலங்கை அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக் கொண்டிருப்பவர். இலங்கையின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்தவர்.

சர்வதேச அரங்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுப்பெற்று வருவது சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியாகவுள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள மேற்சபை நியமனங்கள் இன்னுமொரு நெருக்கடியினை ஏற்படுத்தும் என்பதன் வெளிப்பாடாகவே, சிங்கள ஊடகங்களின் கொந்தளிப்பினை கவனிக்க முடியுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


17 Aug 2012

Geen opmerkingen:

Een reactie posten