தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 augustus 2012

ஜெயலலிதா – புலிகள் உறவு: ஓர் சிறப்புப் பார்வை!!


தந்திரிகளின் மறுமுகம் - 8

ரஜீவ் காந்தியின் கொலைக்கான பழியை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மீது சுமத்தி இவ்வாரம் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கே.பி அவர்கள் வழங்கிய செவ்வி இந்திய – சிங்கள ஊடகங்களை ஆக்கிரமித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு தமிழீழ தேசியத் தலைவரை ஆட்கொண்ட பிராமணிய எதிர்ப்புத் திராவிட இயக்கக் கொள்கையே காரணம் என்றும், வாய்ப்புக் கிடைத்திருந்தால் செல்வி ஜெயலலிதாவைக் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்திருப்பார்கள் என்றும் தனது செவ்வியில் கே.பி தெரிவித்திருந்தார்.

மே 18இற்குப் பின்னர் இந்திய-சிங்கள அரசுகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் செயற்படும் ஒருவர் என்ற வகையில் கே.பி வெளியிட்ட கருத்துக்களின் நதிமூலத்தையும், ரிசிமூலத்தையும் நாம் புரிந்து கொள்வது என்பது கடினமான விடயம் அல்லவே. தான் கூறிய கருத்துக்களை தனது மனச்சாட்சிகூட நிராகரித்துவிடும் என்பது கே.பியிற்கு நன்கு தெரியும்.

இந்திய-சிங்கள அரசுகள் அரங்கேற்றும் பொம்மலாட்டத்தில் ஒரு மிகச்சிறந்த கைப்பாவையாக கே.பி நடந்து கொள்கின்றார் எனக்கூறின் அது மிகையில்லை. சிலவேளை கே.பியின் நடிப்புத் திறனுக்காக அவருக்கு சிறப்பு ஒஸ்கார் விருது வழங்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தியோ அல்லது மகிந்த ராஜபக்சவோ நாளை அமெரிக்காவிற்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பினால்கூட நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.

ரஜீவ் காந்தியின் கொலை என்பது கடந்த இருபது ஆண்டுகளாக அடிக்கடி ஊடகங்களில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தும் விடயமாகவே இருந்து வருகின்றது. 1990களில் தமிழகத்தில் வீசிய அரசியல் சுழற்புயலில் சிக்கிச் சிதைந்து போன ஒரு விடயமே ரஜீவ் காந்தியின் கொலை வழக்காகும்.

இதுபற்றி 2002ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் கருத்துக்கூறிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ரஜீவ் காந்தியின் கொலை என்பது ஒரு துன்பியல் சம்பவம் என்றும், கடந்த கால கசப்புணர்களுக்கு அப்பால் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதற்கு தமது விடுதலை இயக்கம் விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவ்விடத்தில் மீண்டும் மீண்டும் ரஜீவ் காந்தியின் கொலை பற்றி இந்திய செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய பொழுது சீற்றமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், பழையவற்றைத் தோண்டித் தோண்டிக் கிளற வேண்டாம் என்று அச்செய்தியாளரிடம் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் ரஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தை புதைகுழியில் இருந்து மீண்டும் மீண்டும் கிளறியெடுக்கும் நடவடிக்கைகளில் சில இந்திய ஊடகங்கள் ஈடுபடுவதும், அதனால் ஏற்படும் பரபரப்பை அரசியலாக்குவதும் இந்திய-சிங்கள புலனாய்வு நிறுவனங்களின் கடந்த இருபது ஆண்டுகால அணுகுமுறையாகவே உள்ளது. இவ்வாறான மிகுந்த சர்ச்சைக்குரிய இந்த விடயத்தைப் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுத்து ஆராய்வது எமது நோக்கமல்ல.

அதேநேரத்தில் செல்வி ஜெயலிலதாவை கொலை செய்யும் எண்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்தது என்ற தொனிப்பொருளுடன் கே.பி வெளியிட்ட கருத்துக்களின் நயவஞ்சகத் தன்மையை முளையோடு கிள்ளியெறியக்கூடிய சில ஆதாரங்களை இப்பத்தியில் வெளியிடுவதற்கு நாம் முடிவு செய்துள்ளோம்.


இத்தொடர் முதன் முதலாக வெளிவந்த பொழுது, கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் மட்டுமன்றி, செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுடனும் பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தகவல் பரிமாற்றங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தமை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். இதற்கு ஆதாரமாக வன்னிப் போரின் இறுதி மாதங்களில் கலைஞர் கருணாநிதிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் நாம் வெளியிட்டிருந்தோம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைஞர் கருணாநிதியையோ அன்றி செல்வி ஜெயலலிதாவையோ தமது எதிரிகளாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் கருதியதில்லை. தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில் இவர்கள் இருவருடனும் நல்லுறவைக் கட்டியெழுப்பும் முனைப்புக்களில், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தார்கள்.


ரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூறாவளியை தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திப் புலிப்பூச்சாண்டி காட்டித் தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டவர்கள் பலர். தமிழீழ விடுதலைப் புலிகளால் தமக்குக் கொலை அச்சுறுத்தல் நிலவுவதாக இவர்கள் கிளப்பிய புலிப்பூச்சாண்டிகள் எல்லாம் வெறும் கற்பனைகள் என்பதைக் கடந்த இருபது ஆண்டுகளாக தமிழக அரசியலை நன்கு அவதானித்து வருபவர்களுக்குத் தெரியும். இதில் கலைஞர் கருணாநிதியும் சரி, செல்வி ஜெயலலிதாவும் சரி விதிவிலக்கு அல்ல.

தமிழீழ தேசியத் தலைவரைக் கைதுசெய்வதற்கான தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் செல்வி ஜெயலலிதா என்றால், வைகோ அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு கொலை அச்சுறுத்தல் நிலவுவதாகப் புரளி கிளப்பியவர் கலைஞர் கருணாநிதி.

ஆனால் இவ்வாறான புரளிகளையெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளோ அன்றி தமிழீழ மக்களோ ஒரு பொருட்டாகக் கருதியதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழக மக்களின் தொப்புள்கொடி உறவுக்கு முன்னால் இவ்வாறான புரளிகளெல்லாம் வெறும் செல்லாக்காசுகள் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த வகையில் செல்வி ஜெயலலிதாவுடன் நல்லுறவுப் பேணுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்த விருப்பை வெளிப்படுத்தக்கூடிய கடிதங்களை இப்பத்தியில் நாம் வெளியிடுகின்றோம்.

இதில் முதலாவது கடிதம் வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் எழுதப்பட்டிருந்தது. முழுத்தமிழகமும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக அணிதிரண்டு நின்ற அவ்வேளையில் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்துக் கருத்து வெளியிட்ட செல்வி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் உடனடிப் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றையும் நிகழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 13.03.2009 அன்று தமிழீழ தேசியத் தலைவரின் செய்தியை உள்ளடக்கிய கடிதம் ஒன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால் செல்வி ஜெயலலிதாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் நெருக்கமான அவரது பின்கதவுத் தொடர்பாளர் ஒருவர் ஊடாக, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தின் முழுவடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது (காலத்தின் தேவை கருதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், செல்வி ஜெயலலிதாவிற்கும் இடையில் பின்கதவுத் தொடர்பாளராக விளங்கியவரின் பெயரை வெளியிடுவதை நாம் தவிர்த்துள்ளோம்):

“13.03.2009

கடந்த காலத்தில் எமது போராட்ட வரலாற்றில் எமக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் தமிழக முன்னாள் முதல்வர், எமது மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் எமக்காக பெரும் பெரும் உதவிகளை செய்து அந்த நெருக்கடிகளில் இருந்து நாம் மீண்டெழுவதற்கு பெரிய அளவில் உதவினார். 

அதேபோல் தற்போது எமது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாரிய மனித அவலத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு அ.தி.மு.க தலைவியான மதிப்பிற்குரிய ஜெயலலிதா அக்கா அவர்கள் எமக்காக உண்ணாவிரதம் இருந்து அரசியல் ரீதியாக எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து பி.பி.சி தமிழோசைக்கு ஒரு செவ்வியையும் வழங்கியிருந்தார். இது எமக்கும், எமது மக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்கி உள்ளது. 

இதற்காக மதிப்பிற்குரிய அக்கா அவர்களிற்கு நன்றியை தெரிவிக்குமாறு எமது தலைவர் அவர்கள் என்னிடம் கூறினார். தயவு செய்து இச்செய்தியினை அக்கா அவர்களிடம் அறிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பா.நடேசன்
பொறுப்பாளர்
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.”

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அனுப்பிய செய்திக்கு பின்னரான நாட்களில் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய சிறீ சிறீ ரவிசங்கர் அவர்கள், வவுனியா வதைமுகாம்களில் வன்னி மக்கள் எதிர்நோக்கும் அவலம் பற்றி செல்வி ஜெயலலிதாவிற்கு எடுத்து விளக்கியதோடு, இது தொடர்பான நிழற்படங்களையும், ஒளிப்படங்களையும் கையளித்திருந்தார். அக்காலப் பகுதியில் சிறீ சிறீ ரவிசங்கர் அவர்களுடன் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் அவர்களும் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிவந்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடிபிடித்திருந்த சூழலில் டில்லியையும், கொழும்பையும் அதிரவைத்த அதிரடியான கருத்து ஒன்றை செல்வி ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டிருந்தார். 25.04.2009 அன்று தமிழகம் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே இக்கருத்தை செல்வி ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். அதாவது தனி ஈழமே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு என்றும், தனது சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய அரசாங்கம் புதுடில்லியில் அமையும் பட்சத்தில் இந்தியப் படைகளை அனுப்பித் தமிழீழத்தை தான் நிச்சயம் நிறுவிக் கொடுப்பார் என்றும் தனது தேர்தல் பரப்புரையில் செல்வி ஜெயலலிதா சூளுரைத்திருந்தார்.

இதனையடுத்து மறுநாள் 26.04.2009 அன்று தமிழீழ தேசியத் தலைவரின் செய்தியை உள்ளடக்கிய கடிதம் ஒன்று, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் செல்வி ஜெயலலிதாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில், கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்ட அக்கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது:

“நடுவப் பணியகம்
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்
2009.04.26

செல்வி.ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர்,
அ.இ.அ.தி.மு.க
தமிழ்நாடு.

நேற்று சேலத்தில் இடம்பெற்ற அ.இ.அ.தி.முகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தோம். எமது தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள் எல்லோரும் அதைப்பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார்கள். ஏழு கோடி தமிழக மக்களின் குரலாக அம்மாவின் குரல் ஒலித்ததைக் கண்டு எல்லா கவலைகளையும் துன்பங்களையும் மறந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக அம்மா அவர்களுக்கு தலைவர் அவர்கள் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் உடனடியாக தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அத்துடன் எங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

-நன்றி-
“புலிகளின்தாகம் தமிழீழத்தாயகம்”

(பா.நடேசன்)
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.”


தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் செய்தியைத் தாங்கி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் செல்வி ஜெயலலிதாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இவ்விரு கடிதங்களையும் உற்றுநோக்குபவர்களுக்கு ஒரு உண்மை மிகவும் தெளிவாகப் புரிந்திருக்கும். அதாவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செல்வி ஜெயலலிதாவை தமது எதிரியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் பார்த்ததுமில்லை, அவரைக் கொலை செய்வதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திட்டம் தீட்டியதுமில்லை என்பதே அந்த உண்மையாகும்.

இந்த உண்மை கே.பியிற்கும் நன்கு தெரியும், அவரை இயக்கும் எசமான்களுக்கும் நன்றாகத் தெரியும், ஏன் புலிப்பூச்சாண்டி கிளப்பும் எல்லோருக்கும் புரியும்.

(தொடரும்) 

நன்றி: ஈழமுரசு (27.05.2011)

http://tamilthesiyam.blogspot.fr/2011/05/blog-post_27.html

Geen opmerkingen:

Een reactie posten