இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துவருகின்ற மக்களுக்கு ஆதரவளித்து வருகின்ற மூன்று அமைப்புக்களுக்கு அமெரிக்க அரசாங்கமானது அண்மையில் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதி உதவியை வழங்கியுள்ளது.
இலங்கையர்கள் பலருக்கு அவசரமாக தேவைப்படுகின்ற அடிப்படை உதவிகளை வழங்குவதற்காகவே சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) அமெரிக்க வெளிநாட்டு அனர்த்த உதவி அலுவலகமானது, ஷோவா ரிஃப்யுஜிகெயார் (ZOA), சேவா லங்கா மற்றும் ப்ரக்டிக்கல் அக்ஷன் ((Practical Action) அமைப்புக்களுக்கு நிதியுதவியை வழங்கியது.
ஏறத்தாழ 50,000 இலங்கையர்களுக்கு போதுமான வதிவிட வசதிகளை அமைத்தல், சுத்தமான குடிநீரை வழங்கல், முறையான மலசலகூட வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற அடிப்படைச் சேவைகளை வழங்க இந்த நிதியுதவி துணைபுரியும்.
தேவையான வருமானத்தை உருவாக்கிக் கொள்ளத் தொடங்குவதற்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்களை சந்தைகளுடன் இணைத்துக் கொள்வதற்கான உதவிகளுடன் நிலையான எதிர்காலத்தை நோக்கிய பாதையில் தனிநபர்களை இந்த திட்டங்கள் முன்னகர்த்துகின்றன.
26-வருடகால மோதல்களைத் தொடர்ந்து பெருந்தொகையான உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளானவர்களை துரிதமாக மீளக்குடியமர்த்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பணிகளை அமெரிக்க அரசாங்கம் வரவேற்கின்றது.
இருந்து போதிலும் மெனிக்பாம் முகாமை மூடுவதற்காக அங்கு கடைசியாக இருந்த இடம்பெயர்ந்தவர்களை அவசரமாக மீளக்குடியேற்றியமை குறித்து நாம் தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளோம்.
உரிய வதிவிட வசதி, நீர் மற்றும் மலசலகூட வசதிகள் இன்றியும் வாழ்வாதாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வழியின்றியும் வடக்கிலுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் துர்ப்பாக்கிய நிலைக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த பலர் அவசர அவசரமாக துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீண்ட கால உள்ளக இடப்பெயர்விற்குள்ளானவர்களில் பலர் தமது இல்லங்களுக்கு திரும்பவோ அன்றேல் அடிப்படைச் சேவைகளை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் உள்ளனர்.
மீளக்குடியமர்ந்த மக்கள் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கு தமது உதவிகளினூடாக ஐக்கிய அமெரிக்கா துணைபுரிவதுடன் இலங்கையர்களுக்கு தேவையான சேவைகளையும் பராமரிப்பையும் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு அமெரிக்கத் தூதரகம் எதிர்பார்த்துநிற்கின்றது. என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten