அமெரிக்க வல்லரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல நாடுகளில் மத்தியஸ்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளில், நோர்வே முதன்மை வகிக்கிறது.
பிற நாடுகளின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் இல்லாததினாலும், பல மேற்கத்தைய நாடுகளின் சொல்லைக் கேட்பதினாலும், அபிவிருத்தி அடைந்துவரும் அல்லது அபிவிருத்தி அடையாத நாடுகளுக்கு நன்கொடைகளை வழங்கிவரும் நாடு என்பதினாலும் நோர்வேயை அனைவரும் விரும்புகிறார்கள்.
இதனை நன்கே பாவித்து வருகின்றன சில உலக வல்லரசுகள். இந்த வகையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நேரடி வேண்டுதலின்பேரில் விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் சிங்கள அரச தலைமைக்கும் மத்தியஸ்தம் செய்யும் பணி 2000-ஆம் ஆண்டளவில் நோர்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது.
நோர்வேயும் இதய சுக்தியுடன் இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முன்னராகவும் பின்னராகவும் அமெரிக்கா மற்றும் இந்தியா சென்றுவந்ததுமாகவே நோர்வேயின் பணி அமையப் பெற்றது.
அமெரிக்காவின் திட்டம் என்பது தனது உலகப் பூகோள அரசியல் மற்றும் மேற்கு ஆசிய இராணுவ கள நிலைமைகளுக்கு ஏற்றவாறே அமைந்திருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது அமெரிக்காவின் அதி உயர் பணியாக இருந்தது.
சிறிலங்காவினாலோ அல்லது விடுதலைப் புலிகளினாலோ அமெரிக்காவுக்கு எவ்விதத்திலும் தொந்தரவு இருந்தது இல்லை. இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஒரு புறத்தில் செய்து கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட போரைப் பயங்கரவாதச் செயற்பாடு என்றே உலக நாடுகள் கூறிவந்தன.
இந்நிலையில் விடுதலைப் புலிகளைச் சமாதான வலைக்குள் வீழ்த்துவதன் மூலமாக சிறிலங்காவில் அமைதியைப் பேணுவதே சிறந்தது என்று கருதியது அமெரிக்கா.
ராஜீவ் மரணத்துக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குளறுபடியை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்கிற கோட்பாடு புதுடெல்லிக்கும் இருந்தது. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் இடம்பெற்ற வேளையில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் குறிப்பா, சிறிலங்காவில் தற்காலிக அமைதி வேண்டும் என்பதே இந்தியாவின் எண்ணமாக அப்போது இருந்தது.
இந்தியாவைச் சுற்றி மூன்று பக்கமும் எதிரியை வைத்திருக்க இந்தியா விரும்பவில்லை. ஏற்கனவே கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இந்தியாவுக்கு இருந்தே வந்துள்ளது. இதனை நிறுத்த இந்தியாவினால் முடியாது என்பது இந்தியாவுக்கு நன்கே தெரியும்.
தெற்குப் புறத்தில் இடம்பெறும் சம்பவத்தை இராஜதந்திர ரீதியில் கையாளலாம் என்பது இந்தியாவின் கணிப்பு. இதற்குச் சரியான நாடு நோர்வே என்பதுதான் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கருத்து ஆகும். இதனை நன்கே பாவித்தன இரு நாடுகளும். இப்பணிக்குப் பல மேற்கத்தைய நாடுகள் நேரடிப் பங்காளிகளாக இருந்தன.
மிகவும் இக்கட்டான பணியினை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றன ஸ்கண்டிநேவிய நாடுகள். சிங்களத் தலைமை நோர்வேயின் மத்தியஸ்தத்தைப் புறக்கணித்துப் போரை விடுதலைப் புலிகளின் மீது திணித்தது. மத்தியஸ்தம் நிறுத்தப்பட்டாலும் நோர்வேயின் இராஜதந்திரப் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிறிலங்கா விடயத்தில் நோர்வே
சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற வேளையில் நோர்வேக்கு எதிராகச் செயற்பட்டு வந்தது சிங்களம். கொழும்பில் அமைந்திருக்கும் நோர்வேயின் தூதரகம் முன்பாகப் பல போராட்டங்களை நடத்தின சிங்கள அமைப்புக்கள்.
நோர்வேயின் தூதரகத்தை மூடும்படி கூடக் கேட்டது சிங்களம். இவைகளுக்கு மத்தியில் பல இராஜதந்திரச் செயற்பாடுகள் மூலமாகத் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டது நோர்வே.
சிங்களத்துக்கு ஆதரவான பேச்சுக்களைக் கூறி சிங்களத்தைச் சமாதானப்படுத்தும் வேலைகளைக்கூடச் செய்தது நோர்வே. இது போதாதென்று விடுதலைப்புலிகளின் மீதுகூடப் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களைக் கூறியது நோர்வே. தமிழ் மக்கள் தாங்கள் பரந்த மனப்பாங்கானவர்கள் என்பதனைத் தமது செயற்பாடுகள் மூலமாக நிரூபித்தார்கள்.
மக்களின் அழிவைத் தடுக்க உலக நாடுகள் பல பிரயத்தனங்களை எடுத்தன என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இருப்பினும் இந்தியாவின் வேண்டுதலுக்கு ஏற்பவே அமெரிக்கா இறுதிப் போர் இடம்பெற்ற வேளையில் செயற்பட்டது.
இரு நாடுகளும் அதீத திட்டத்துடன் செயற்பட்டன. நோர்வே வெறும் பகடைக் காயாகவே பாவிக்கப்பட்டது. மக்களின் துன்பங்களைப் பார்த்துக் கண்கலங்கினர் பல ஸ்கண்டிநேவிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள்.
நோர்வே அரச சார்பில் இடம்பெற்ற சமாதானத் தூதுவர்கள்கூட தமிழ் மக்களின் அவலங்களைப் பார்த்து மனங்கலங்கியிருந்தனர் என்பதை இக்கட்டுரையாளருக்கு நேரடியாகவே கூறினர் நோர்வேயின் சமாதானத் தூதுவர்கள். இப்படிப்பட்ட நிலையில் இருந்த நோர்வேயின் தூதுவர்கள் தற்போது வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருப்பது வியப்பாக இருந்தாலும் இதுவும் ஒருவகையிலான இராஜதந்திர நகர்வு என்றே கூற வேண்டும்.
ஏற்கனவே மத்தியஸ்தம் தோல்வியில் முடிந்ததினால் சற்று விலகியிருந்த நோர்வே பின்னர் பல்வேறுபட்ட இராஜதந்திர வேலைகளைச் செய்துகொண்டே வந்துள்ளது. நியூயோர்க், பரிஸ், லண்டன், நியூடெல்லி எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்று கருத்துப்ப ரிமாறுதல்களைச் செய்து கொண்டே வந்தனர் நோர்வேயின் முக்கிய அரசியல் பிரமுகர்கள்.
சிறிலங்கா விடயத்தில் சர்வதேச ஈடுபாடு அதிகரித்துள்ளது என்பதனையே இச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சமாதானத்தை ஆரம்பிக்கும் வேளையில் இருந்த நிலை இன்று இல்லை. குறிப்பாக தமிழீழத்துக்கு ஆதரவான நிலைப்பாடு தற்போது தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய நடுவண் அரசில் இரண்டாவது முக்கிய இடத்தில் இருக்கும் கட்சியாக கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. சுய நிர்ணய உரிமையே ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்பது தி.மு.கவின் கொள்கையாகத் தற்போது இருக்கிறது.
டெசோ என்கிற அமைப்பை உருவாக்கி இந்தியா பூராகவும் ஈழத்துக்கு ஆதரவான சக்திகளை ஒன்றிணைப்பதுடன், உலக நாடுகளின் ஆதரவையும் ஈழத்துக்கு சார்பாகப் பெறுவதே தமது நோக்கம் என்று கூறுகின்றனர் டெசோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய மத்திய அரசின் பங்கு என்பது முன் எப்போதும் இல்லாதவகையில் இனிவரும் காலங்களில் இருக்கும். நிச்சயமாக சிறிலங்கா விடயத்தில் நோர்வேயின் பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நோர்வே
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவின் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக் காலத்தில் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் சிறிலங்காவுக்கான அமைதித் தூதுவராகச் செயற்பட்டார்.
தமிழர்களுக்கு ஆதரவாக இவர் செயற்பட்டார் என்று தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தது சிங்களம். இவரைக் கொலை செய்யவும் எத்தனித்தது சிங்களம். சிங்களவரையும் பகைக்காமல் தமிழரையும் அரவணைக்கும் தந்திரத்தையே இவர் மேற்கொண்டார்.
ஈழத் தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இனமோதல் வெடிக்கும் என்று சமீபத்தில் சொல்ஹெய்ம் எச்சரித்தார். நோர்வேயின் “ஆஃப்டன்போஸ்டன்” என்கிற முன்னணிப் பத்திரிகைக்குப் பேட்டியளிக்கையில் சொல்ஹெய்ம் கூறியதாவது:
“சிறிலங்காவில்30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்துக்குத் தமிழர் பிரச்சினையே காரணமாக இருந்தது.” “விடுதலைப்புலிகளை இராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்காவில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும்" என்றார் சொல்ஹெய்ம். இக்கூற்றுக்குச் சிங்களத் தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சிங்களவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சில தினங்களுக்கு முன்னர் பி.பி.சியின் தமிழோசை மற்றும் சிங்களச் சேவைகளுக்கு சொல்ஹெய்ம் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், “சிறிலங்காவில் சமாதானம் ஏற்பட முன் முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐ.நாவும் இதன் பின்னணியில் இருந்தது.”
“அன்றைய நிலைமையில் போரின் முடிவு சிறிலங்காவின் அரசுக்கு இராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவைத் தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன் வைத்தோம். அந்தத் திட்டத்தின் முழுமையான இறுதி வடிவம் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் ஒப்புக்கொண்ட பிறகு தான் முடிவு செய்யப்பட்டிருக்கும்."
“ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு சிறிலங்காவின் வடக்குக் கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும் அதில் ஐ.நா. அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பைச் சேர்ந்தவர்களோ இருந்து போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்துப் புகைப்படத்துடன் பதிவு செய்வது என்பதாகும்.”
“அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்ந்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை சிறிலங்கா அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது."
“எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள்.
ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்தின் இறுதி வடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரைத் தடுத்துவிட்டார்.
எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று எங்களுக்குச் செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை" என்றார் சொல்ஹெய்ம்.
“அவர் மேலும் கூறுகையில், “போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராட வேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம், இதைக் காரணமாகக் காட்டி சிறிலங்கா அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.”
“மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, சிறிலங்கா அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தக் கூடாத ‘பாதுகாப்பு வலயம்’ என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்தப் பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன" என்றார் சொல்ஹெய்ம்.
மத்தியஸ்தம் தோற்றுப் போனாலும் நோர்வேயின் இராஜதந்திரப் போர் பல்வேறு பாதைகளில் விரிந்தே செல்கிறது என்பதனையே சொல்ஹெய்மின் கூற்றுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
சொல்ஹெய்மின் கருத்துக்கள் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவர் ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ருத்ரகுமாரனின் அறிக்கை மற்றும் சொல்ஹேய்மின் கூற்றுக்களின் நம்பகத்தன்மைகள் குறித்து மேலதிகமாக அடுத்த வாரம் ஆராயும் வரை பொறுத்திருப்போமாக.
Geen opmerkingen:
Een reactie posten