தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 oktober 2012

இலங்கைப் போர் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்தது! ராஜபக்ச அரசு சொன்னதை நம்பினோம்! நிருபமா ராவ் செவ்வி !!


நிருபமா ராவ்... அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு அனுப்பும் 'நட்புத் தோழி’. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிவரும் நிருபமா ராவுக்கு உலகின் ஆற்றல்மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம் உண்டு.
தமிழர் பிரச்சினைகளில் நம்முடைய வெளியுறவுத் துறை அக்கறை காட்டுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பெங்களூரு வந்திருந்த‌ நிருபமா ராவ் விகடன் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வி
 செவ்வியின் முக்கிய சில பகுதிகள் வருமாறு:
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவி செய்து, தற்போது இந்தியாவுக்குத் தெற்கேயும் சீனா வலுவாகக் காலூன்றி இருப்பது நமக்குப் பெரிய ஆபத்தாயிற்றே?
பதில்:   இந்தியாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாதுகாப்புத் துறையும் வெளியுறவு அமைச்சகமும் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இலங்கையின் வட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு முதன்முதலாகச் சென்று வந்த வெளியுறவுச் செயலர் என்ற முறையில் சொல்கிறேன்.
அங்கே சீனாவின் ஆதிக்கம் இல்லை. சாலை போடுவதில் தொடங்கி வீடு கட்டித் தருவது வரை 500 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை இந்தியாவே செய்துகொண்டிருக்கிறது.
கேள்வி:  வெளியுறவுத் துறைச் செயலராக இலங்கை சென்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். ஆனால், இன்னமும் மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கைக் கடற்படை நிறுத்தவில்லையே?
பதில்:  தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. 2009-10 காலகட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளியுற வுத் துறைச் செயலர் சி.ஆர்.ஜெயசிங்கே உள்ளிட்டோருடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இந்தியக் கடல் எல்லையில் இருந்து சர்வதேசக் கடல் எல்லை மிகவும் அருகில் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் அமைந்திருப்பதே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அதற்காகச் சட்டப்படி வழக்குகளைப் பதியலாம்.
எக்காரணம் கொண்டும் தாக்கக் கூடாது  என்று இந்திய அரசின் சார்பாகவும் 'இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடிப்பு வலை, விசைப் படகுகள் ஆகியவை இலங்கையின் வட பகுதியில் நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் பெரும்பாலான தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது என்பதோடு இலங்கையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும் இருக் கிறது’ என்ற இலங்கை அரசின் வாதத்தை முன்வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், ஒரு முடிவுக்கு வராமலேயே அந்தப் பேச்சுவார்த்தை பாதியில் நின்று விட்டது.
தமிழக மீனவர்களின் சிக்கல்களையும் இல‌ங்கை மீனவர்களின் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டு இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவ அமைப்புகளுடன் பேசி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வடிவமைத்துக் கையெழுத்திட்டால்தான் தீர்வு காண முடியும். இப்போது போர் முடிந்து இலங்கையில் அமைதி நிலவுவதால், அதற்கான சாத்தியங்கள் அதிகம்.
கேள்வி: 2009 இலங்கைப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என ஐ.நா. சபையே சொல்கிறது. போர் நடந்தபோது அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும், போரில் இலங்கைக்கு இந்திய‌ அரசு உதவி செய்ததும் தார்மீக ரீதியில் சரிதானா?
பதில்:  (கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பேசத் துவங்குகிறார்)  முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை என்பது இந்தியாவின் நட்பு நாடு. அதனால், அவர்களுக்கு இந்தியா சில உதவிகள் செய்ததாக அறிகிறேன். அண்டை நாடு என்ற முறையில் இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை கூற முடியுமே தவிர, ஆணையிட முடியாது.
விடுதலைப் புலிகள் உடனான போரில் அப்பாவிப் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்’ என இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வேண்டுகோள் வைத்தனர்.
நானும் பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனனும் பல முறை அலரி மாளிகையில் இலங்கை அதிபரை இது தொடர்பாகச் சந்தித்துப் பேசினோம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்’ என ஒட்டுமொத்த ராஜபக்ச அமைச்சரவையே சொன்னது. அதனை இந்தியாவும் நம்பியது.
கேள்வி:  அப்படியென்றால், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான க‌ர்ப்பிணித் தாய்மார்களையும் பச்சிளங் குழந்தைகளையும்கூட விடுதலைப் புலிகள் என நம்பச் சொல்கிறீர்களா?
பதில்:  (முகம் மாறுகிறது)  நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என நினைக்கிறேன். தமிழர் என்ற உணர்வின் காரணமாகக் கேட்கிறீர்கள். இலங்கைப் போர் முற்றிலும் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்த ஒன்று. எனக்கு விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டது. பை... பை...!'' (என்றபடி எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்)
கேள்வி:  ஒரு பத்திரிகையாளனாக அல்ல... ஒரு மனிதனாகக் கேட்கிறேன். வெளியுறவுத் துறைச் செயலராக இல்லாமல் ஒரு பெண்ணாக நீங்கள் பதில் சொல்லலாமே மேடம்?
பதில்:  மரணம்... எல்லாவித‌ சமாதானத்துக்கும் சமாளிப்புக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்த உலகம் உணர வேண்டும். போரின்போது அப்பாவிகள் பாதிக்கப்படும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்!
- சொல்லிக்கொண்டே காரில் ஏறிச் சென்றுவிட்டார் நிருபமா ராவ்.

Geen opmerkingen:

Een reactie posten