ஈழத்து உறவுகளை தன் வயிற்றில் அடைக்கலம் கொடுத்த தாய்லாந்தின் கடற்சூரியன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரை சேர்த்தது. பல இன்னல்களின் மத்தியில் பயணம் செய்து கரையிறங்கியவர்களை வினாக்கள் பல தொடுத்து கனேடிய எல்லை பாதுகாப்பு துறையினர் (CBSL) துருவித்துருவி ஆராய்ந்தனர்.
உண்மை சொன்னால் தப்பி விடலாம் என்று சிலரும், உண்மைகளை தமக்கு சாதகமான பொய்களாக்கிய பலருமாக பல்வேறுபட்ட வாக்கு மூலங்கள் பதிவளிக்கப்பட்டன. எத்தனையோ ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டும் அவர்களை கைது செய்ய முடியாமல் இன்றும் கனேடிய காவல் துறையினர் அலசிக் கொண்டு அலைகின்றனர். காரணம் குற்றம் செய்தவன் தங்கி இருந்து வருகவே என்னை பிடித்துச்செல்கவே என்று பிரச்சினைக்குரிய நாட்டில் குந்தி இருக்கவா போகின்றான் ? அப்படி குந்தி இருப்பவன் தான் குற்றவாளி என்று நான்கு வருடமாய் ஒருவனை பிடித்து தடுத்து வைத்து பைத்தியமாக்கும் கனேடிய காவல் துறை என்ற குரங்கின் கையில் அகப்பட்ட மாலையா அகப்பட்டவன்?
தப்பி ஓடிய பிரதான குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி பணம் பறித்து நிர்க்கதியாக்கி கொண்டே இருக்கின்றார்கள். ஏன் இன்னும் அவர்களை கைது செய்ய துப்பில்லாமல் மதுரனின் மேல் மப்பில் அலைகின்றார்கள்?
கடந்த வருடமும் தாய்லாந்தின் கரையோரப்பகுதியான பத்தையாவில்(Pattaya) கப்பலுக்கு என்று தங்கியிருந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஈழத்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்கள்? அதன் சூத்திரதாரி யார்? ஏன் இன்னும் கைது செய்யவில்லை? இங்கு யார் காட்டிக்கொடுக்கின்றார்களோ அவர்களே இந்த ஏற்பாட்டினையும் நடாத்திக்கொண்டு இரு வேடமிடுகின்றார்கள். தமது தப்புக்களை மூடி மறைக்க ஒருவனின் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தி அதில் குளிர் காயும் மனிதர்களையும் அவர்களின் வேடத்தினையும் கண்டு கொள்ள தெரியாத சிறுபிள்ளைத்தனமான அறிவு கொண்டவர்கள் தான் கனேடிய காவல் துறையினரா?
தாய்லாந்தில் உள்ளவர்களை மட்டுமன்றி கடற்சூரியனில் சென்றவர்களும் காட்டிக்கொடுப்புக்களால் இன்னமும் பாதிக்கப்பட்டு வாடி வதங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து அகதி அந்தஸ்தும் இல்லாமல் வழக்கும் ஏற்கப்படாமல் இருப்பவர்கள் அநேகர். அதில் சென்ற பல போராளிகள் மற்றவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் இன்னமும் அவர்களின் வழக்கே ஏற்கப்படாமல் இருக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்துடன் போராளி என நிரூபிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்ட "அருமைத்துரை தர்மரத்தினம்" என்கின்ற வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் வருகின்ற பெப்ரவரி பதினோராம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கின்றார். இவரை நீதிமன்றம் நாடுகடத்த உத்தரவிட்ட நிலையில் இலங்கையில் அவர் எதிர்நோக்க விருக்கும் அபாயத்தினை எண்ணி அச்சத்தில் கனேடியச் சிறையில் தவிக்கும் அவரது நாடு கடத்தலை தடுக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எதுவும் பலன் அற்று இறுதிக்கட்ட நிலையில் தவிக்கும் அந்த போராளி செய்த குற்றம் என்ன? ஈழத்துக்காகப்போராடிய ஒரு உத்தம கடற்புலிப்போராளியின் இறுதிக்கட்ட வாழ்வின் போராட்டத்தில் உலகத்தில் இன்னும் தமிழ் அமைப்புக்கள் என்றும் நாடுகள் கடந்த அரசுகள் என்றும் வெறுமனே பெயருக்கு இயங்குகின்ற அமைப்புக்களின் பங்களிப்பு என்ன? கனடாவில் தமிழருக்கான பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று வரும் ராதிகா சிற்சபை ஈசன் இந்த நாடு கடத்தலை தடுத்து நிறுத்த முயற்சி எடுத்துண்டா?
அர்ப்பணிப்பும் சுயநலம் இன்றிய ஒரு தனிமனிதன் ஒருவன் தன் குடும்பத்தினையும் காவு கொடுத்து ஒரு இனத்துக்காகவே மடிகின்றான் என்றால் அவனே தலைவன். அவனின் காலத்தின் பின் தம்மை தலைவர் என்று தமக்கு தாமே முடி சூடுபவர்கள் எவரும் தலைவர்கள் ஆகிவிட முடியாது. ஒரு போராளியினை காப்பாற்ற முடியாதவர்களால் ஒரு இனத்தை காப்பாற்ற முடியுமா?
மேற்படி அருமைத்துரை தர்மரத்தினம் என்ற போராளியின் நாடுகடத்தலை தவிர்ப்பதற்காக ஏற்கனவே கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் படுகொலையான கப்பல் அமைப்பாளர் ஒருவரது மரண ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தும், அதனை நீதிபதியின் கண்களில் இருந்து மறைத்துக்கொண்ட கனடா எல்லைப்பாதுகாப்பு துறையினரின்(CBSL) நோக்கம் என்ன? நிச்சயம் அது கொலைக்கள நாட்டில் படுகொலை செய்யத்தீட்டுகின்ற சதித்திட்டமே.
தனிப்பட்ட ஒரு நபர் அதாவது முன்னொரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடி தற்போது அகதியாக புகலிடம் புகுந்த ஒரு உயிருக்கு அடைக்கலம் கொடுக்க முடியாத அளவுக்கு கனடாவின் சட்டம் உள்ளதா? அன்றி கனடாவின் மனித உரிமைகள் இதற்கு இடமளிக்காதா?
அவர் நாடு கடத்தப்பட்டு அவரின் உயிருக்கு அங்கு உத்தரவாதம் அற்றுப்போனால் கனடா அரசு அவரின் உயிரை அவரது குடும்பத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்க முடியுமா?
இவற்றுக்கு பின்னால் கனேடிய இலங்கை சதி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கடற்சூரியனில் பயணம் செய்து இத்தொடரின் ஆரம்ப தொடரில் குறிப்பிட்ட பல காட்டிக்கொடுப்புக்களை நிகழ்த்திய அந்த பிரதான கப்பல் ஏற்பாட்டாளர் கனடாவில் பலரை காட்டிக்கொடுத்து தான் தப்பிக்க முயன்றும் கனேடிய அரசு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. உண்மை நேர்மை என்று ஒழுகாத ஒரு மனிதர் தண்டனைக்கு அடங்க ஒத்துக்கொள்ள மாட்டார் . எனவே அவர் சுய விருப்பில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
அவர் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல. ஆனால் விடுதலைப்புலிகளுக்காக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டு பண மோசடிகள் புரிந்தவர். இருந்தாலும் அவருக்கு எதிராக தாய்லாந்து மற்றும் கனடாவில் ஆயுதக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது இலங்கை மட்டும் அவரை செங்கம்பளம் விரித்து வரவேற்குமா? இலங்கையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழமையான " சித்திரவதை வெகுமதிகள் "அங்கு அவருக்கு நிறையவே வழங்கப்பட்டன. இருந்தாலும் இலங்கையில் பணம் பாதாளம் மட்டுமல்ல அண்டம் வரை பாயும் என்பதால் அவர் சிறிது காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து , கடந்த ஆண்டு அவர் ஒரு விபத்தில் பலியானதாக செய்தி பரப்பப்பட்டது. இந்த விபத்தின் பின்னணியில் நிச்சயமாக இராணுவம் இருப்பதாக அவரின் குடும்பத்தார் சந்தேகிக்கும் அதே வேளை அவரது தலையில் பலமான இரும்புக்கம்பி கொண்டு தாக்கப்பட்டதாலேயே அவருக்கு இறப்பு ஏற்பட்டதாகவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும் இந்த விபத்தின் பின்னணியில் இலங்கை இராணுவம் இருக்குமேயானால் அது நிச்சயம் கனேடிய எல்லை பாதுகாப்பு துறையின் கூட்டுச்சதி என்று உறுதியாக நம்ப முடியும். காரணம் இலங்கை இராணுவத்திற்கு அவரை தனிப்பட்ட ரீதியில் கொல்ல வேண்டிய தேவை இல்லை. அவரை விட அதிக கடத்தல்களில் ஈடுபட்டவர்களே அரசோடு சேர்ந்து இயங்கும் போது, அவரைக்கொல்ல வேண்டிய தேவை மிக மிக அரிது. பணத்தினைப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்தவர்களே அவரைத் தேடிப்பிடித்து கொலை செய்வதிலும் பார்க்க பணத்தினை இன்னும் கறக்கவே எண்ணுவார்கள்.
அத்துடன் கனேடிய அரசு சாதரணமான ஒரு வாக்கு மூல குற்றச்சாட்டுக்கே நான்கு வருடமாக மதுரனை இந்த நாட்டில் உலவ அனுமதிக்காமல் தடுத்து தமது கண்காணிப்பில் வைத்திருக்கும் போது கப்பலோடு நேரடியாக தொடர்பு பட்டு பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட தற்போது அமரரான அந்த கப்பல் ஏற்பாட்டாளரை தமது கண்காணிப்பில் இருந்து எவ்வாறு நீக்கிக் கொள்ளும்? இலங்கை அனுப்பி அங்கு சாகடிக்கவே அது திட்டம் தீட்டி அங்கு அவரை அனுப்பி இருக்கின்றது. அவர் ஒரு காட்டிக்கொடுப்பாளர் பலருக்கு அநியாயம் செய்த ஒருவர் என்றாலும் கனேடிய சதியில் கொலையுண்டவர் என்னும் போது சற்று மனம் வேதனைப்படவே செய்கின்றது. அவருக்கு ஒரு பெண்குழந்தையும் மனைவியும் கனடாவில் இன்னும் அகதி அந்தஸ்து கோரலுக்கான வழக்கு ஏற்கப்படாமல் இருக்கின்றார்கள் .
காட்டிக்கொடுப்புக்களும், பணத்தால் கொள்வனவு செய்யப்படும் வாழ்வும் நெடு நாட்கள் நீடிக்கப்போவதில்லை. கனேடிய அரசிடம் இருந்தும் இலங்கையிடமும் இருந்தும் தப்பி பணம் கொடுத்து சுதந்திரம் பெற்றுக்கொண்டவர் , காலத்திடம் விலை பேச தன்னகத்தே நீதி நேர்மையினைக்கொண்டிருக்கவில்லை என்பது அவரது படுகொலையில் இருந்து நாம் அறிய வேண்டிய அப்பட்டமான உண்மையாகும்.
தற்போது சிறையில் வாடும் எல்லோருக்கும் காலம் பகைத்துக்கொள்ளலாம். பணம் தங்காமல் இருக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமான நீதி நேர்மை உண்மைகளை தம் அகத்தே மலை போல் குவித்து வைத்திருக்கும் போது என்றோ ஒரு நாள் காலம் அவற்றை விலை பேசி அவர்களுக்கு சுதந்திரம் என்னும் நிலையான அமிர்தம் என்னும் கனியினைக் கொடுக்கும். கனேடிய தாய்லாந்து ,இலங்கை அரசுகள் தீட்டும் சதிகள் காலத்தால் தோற்கடிக்கப்படும். அன்று காட்டிக்கொடுப்புக்கள் அர்த்தமற்றுப் போகும் போது காட்டிக்கொடுத்தவர்கள் நிச்சயமாகக் காலத்தால் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை வளமாக , நலமாக வாழட்டும்.
அப்பேற்பட்ட தேசிய தலைவரையும், ஈழப் போராட்டத்தையுமே கொச்சைப்படுத்தவும் காட்டிக்கொடுக்கவும் பலர் துணிந்து அதில் வெற்றியும் கண்டார்கள். அந்த மாபெரும் இயக்கம் இவற்றுக்கு பலியாகி மெளனித்து உறங்கும் போது அவர்களின் கால் விரலுக்கு சமனான தனி நபர்கள் இவற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியுமா?
தொடரும்...........
அரசி நிலவன் - தாய்லாந்திலிருந்து...
http://news.lankasri.com/show-RUmsyCTaMdfq4.html
Geen opmerkingen:
Een reactie posten