தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் !

போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம்

எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்.
இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன.
மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்டமிட்டு அழித்தார்கள் என்பதை எமது இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டும் என்பது இந்த நினைவு கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த பாதர் சந்திரா அவர்கள்தமிழ்தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டவராக காணப்பட்டார். அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம்பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும் வணபிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தனலம்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமெனலாம்.
1983ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1988ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டம் மக்கள் எழுச்சியுடன் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளையில் சிங்களப் பேரினவாதிகளின் குறி தமிழ்மக்களை அழிப்பதாக அமைந்திருந்தன. இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம் பொருந்திய நியாயம் கேட்கும் நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள் உலகபொதுஅமைப்புக்கள் பிரதிநிதிகளைசந்தித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் அமைப்பாகச் செயல்பட்டதனால் எதிரிகளின் எண்ணங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தன.
பங்குத்தந்தை சந்திரா அவர்கள் எந்த விடுதலை அமைப்பையும் சேர்ந்தவரில்லை தமிழ்மக்களின் சுதந்திர வாழ்வை உண்மையாக நேசித்ததனால் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தார். அக்காலத்தில் பல இயக்கங்கள் செயல்பட்ட போதும் இவருடைய சேவை மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. மக்களுக்காக வாழ்ந்த மட்டக்களப்பு மக்கள் குழுத்தலைவர். மக்கள் விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தில் மன்னிக்க முடியாத நிகழ்வாகவும், மறக்க முடியாத துயர சம்பவமாகவும் நடந்தேறியிருந்தன
வணக்கத்துக்குரிய பங்குத்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை சென் மேரிஸ் பாடசாலையிலும் , உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார் .
தனது குருக்கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று
1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .
உதவித் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவலையத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார்
1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார் இதேகாலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார் . 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார் .
பாதர் சந்திரா அவர்களின் மக்கள் சார்ந்த பல நிகழ்வுகளில் இரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம் .19.1.1986 அன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்திருந்த இருதயபுரம் சிங்கள விசேட அதிரடிப் படையினரால் அதிகாலைவேளையில் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது .ஊரில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன நடந்தது ? மக்களின் நிலை என்ன ? என்பதை எவராலும் அறிய முடியாமல் இருந்த வேளையில் பாதர் சந்திரா அவர்கள் தனது மோட்டார் சைக்கிலில் உயிரைவிட மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமென்பதற்காக துணிந்து சிங்கள இராணுவத்தின் காவலையும் மீறி உள்ளே சென்று மக்களுக்கு பக்கபலமாக நின்றார். இச்சுற்றி வளைப்பில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சிங்கள அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர் .
இன்னுமொரு நிகழ்வாக 1988ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுகுணா, இஸ்லாமியக் பெண்ணான ரிபாயா ஆகிய இருவரையும் EPRLF குழுவினர் பிடித்து சென்று தங்களது வாவிக்கரை தங்குமிடத்தில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த மக்கள் குழுத்தலைவர் பாதர் சந்திரா அவர்கள் இந்தியப் படை அதிகாரிகலுடன் தொடர்பு கொண்டு இருவரையும் மீட்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் சுகுணாவை மாத்திரம்தான் அவரால் மீட்க முடிந்தது. மற்றைய பெண்ணான ரிபாயாவுக்கு என்ன நடந்தது என்பதை அன்ரில் இருந்து இன்று வரையும் அறிய முடியவில்லை. இந்த சம்பவத்தில் நேரடியாக பங்குகொண்டவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற இரா. துரைரெட்ணம் என்பதை உறுதிப்படுத்தபட்ட பின்பும் அவராலும் இதற்குரிய பதில் இன்று வரையும் வழங்கப்படவில்லை. பாதர் சந்திரா அவர்களும் தான் இருக்கும் வரை ரிபாயாவை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு – அம்பாறையில் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டு இருதயபுரம், நற்பட்டிமுனை, உடும்பன்குளம், மண்முனை கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை , மயிலந்தனை புணணை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் பாதர் சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. இவ்வாறு மக்கள் நலன் பாதுகாப்பு என்பதில் தூய எண்ணத்துடன், செயல்பட்ட துறவியான இவர் இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்த வேளையில் பல இடையூறுகளை மக்கள் சேவையில் சந்தித்திருந்தார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் இலக்குத் தவறிய பயணத்தில் செயல்பட்ட இயக்கங்கள் பாதையிலிருந்து விலக்கப்பட்ட நிலையில், இந்தியப்படையினரின் பிரசன்னம் எமது மண்ணில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன், தமிழ் இயக்கங்களான, EPRLF, TELO, ENDLF போன்றவற்றின் உறுப்பினர்களும் துணைபோயினர்.
இந்நாளில் தங்களைத் தமிழ்த்தேசியவாதிகளாகக்காடடி நிற்கின்ற இரா.துரைரெட்ணம், பிரசின்னா, ஜனா போன்ற வர்களின் தலைமையில் தமிழ்த்தேசவிரோதக் குழுக்கள் அந்நாளில் செயல்பட்டதை எவரும் மறுப்பதற்கில்லை, தமிழ்மக்களும் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களின் துரோகத்தனத்திற்கு அன்று இந்தியப் படையினர் துணைநின்றனர். இதற்கு பின்பு சிங்களப்படையினருக்கும் இவர்கள் துணைநின்றனர்.
மக்கள் சேவையை முன்னிறுத்தி செயல்பட்ட பங்குத்தந்தை சந்திரா அவர்களை 06.06.1988 அன்று மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்து தமிழ்த் தேசிய விரோதிகளினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் .அன்று மறைக்கப்பட்ட கறுப்புத் திரையினுள் இவர்களாலும், இந்தியப் படையினராலும் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையும், அடக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்து நியாயம் கேட்ட மக்கள் சேவையாளனான கிறிஸ்துவத்துறவியின் குரல் ஒய்ந்து விட்டதை எண்ணி, அடுத்த குரல்களான வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் அழித்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழீழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு எதிரான படுகொலைகளில் மிகப் பெரிய நீதியற்ற படுகொலைகளாகக் இக்கொலைகளைக் குறிப்பிடமுடியும்.
இன்று தமிழ் தேசியத்தை ஊடகத்துறையில் வளர்த்த பிதாமகர்கள் தாங்களே என நீட்டி முழங்கும் பலர் இவ்வாறன மனிதர்களின் கொலைகளை வசதியாக மறந்துவிடுகின்றனர் . தங்களின் இருப்பையும் தாம் சார்ந்தவர்களின் இருப்பையும் பதவிகளையும் தக்கவைப்பதற்காக வரலாறுகளை கூட தமக்கு வசதியான காலத்தில் தொடங்க முற்படுகின்றனர். இந்த ஊடக வியாபரிகளினது நோக்கமும் , வணபிதா சந்திரா போன்றவர்களை கொலைசெய்த கொலயளிகளினது நோக்கமும் ஒன்றாகவே இருக்கமுடியும் .
இக்கொலைகளை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் பணியில் உள்ள எவரும் நியாயப்படுத்த முடியாது.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அடிமை நிலையைத் திணிப்பதே ஆக்கிரமிப்பு வாதிகளின் கொள்கையாகும். இக்கொள்கைக்கு துணைபோயுள்ளதன்மூலம் மூன்று கல்விமான்களை மட்டக்களப்பில் அழித்து மக்கள் சார்பாக ஒலித்த குரலை அணைத்து மார்தட்டி எக்காளமிட்ட இக்குழுவினருக்கு தமிழ் மக்களின், உரிமைபற்றியோ, விடுதளைபற்றியோ, கதைப்பதற்கு எந்த அருகதையுமில்லை இவ்மூவரின் இழப்பு அன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகவிருந்தன
இருபத்தைந்து வருடங்கள் கழிந்த நிலையில் பங்குத்தந்தை சந்திரா அவர்களை நாம் நினைவு கூருகின்றோம். இவரை நினைவில் கொள்வது தமிழ்மக்களின் தலையாய கடமையாகும் ,பாதர் சந்திரா அவர்கள் வாழ்ந்தகாலம் தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு துணிந்த ,துறவியொருவர் வாழ்ந்தகாலமாகும் .இக்காலத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழ் அரசியல் வாதிகள் எவரும் ,சுயநலம் கருதி மக்கள் நலன்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை. மாறாக தங்கள் பதவி ,அரசியல் வாழ்வு என்பனவற்றிக்காக தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்த வண்ணம் செயல்பட்டனர் .இன்று இவர்கள் போற்றப் பட்டாலும் உண்மையை ஒரு போதும் மறைக்கமுடியாது
உணர்வும், உறுதியும், நேர்மையும் , பொதுநலமும் உள்ளமக்கள் எமது மண்ணில் வாழும்வரை, பாதர் சந்திரா, வணசிங்கா ஐயா போன்றவர்களின் நினைவும், தன்னலம் கருதாத மக்கள் சேவையும் மறைக்கப்படமாட்டாது என்றும் பரம்பரைபரம்பரையாக நினைவில் நிலைத்து நிற்கும்.
காலவோட்டத்தில் தமிழ்த் தேசியம் கரைந்துவிடாது காக்கப்பட புல்லுருவிகளும், துரோகிகளும், இனப்படுகொலையாளர்களும் தூக்கி வீசப்படவேண்டும். இதற்கு எமது மண்ணில் வாழும் தமிழ்மக்கள் உறுதியான பதிலை தேர்தல் காலங்களில் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழினத்தின் விடிவுக்கு, விலைபோகாத தலைவர்களை நாம் உருவாக்க முடியும்.
மதம் மொழி பார்க்காது மனிதனை நேசித்தம மனிதனின் மரணத்திற்காக ஓர்கணம் தலைசாய்த்து …..
நினைவுப்பகிர்வு:- எழுகதிர்.
FR-Sandra FR-Sandra-01
- See more at: http://www.asrilanka.com/2014/06/05/25847#sthash.62fCzvoB.dpuf

Geen opmerkingen:

Een reactie posten