தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 november 2010

ஐயாவின் பதிவுகளும்,எனது பின்னூட்ட முரண்களும்..04- ரூபன்

அக்காலத்தில் “ஏரிக்கரைப் பத்திரிகை” நிறுவனத்தின் “தினகரன் விழா”வானது வருடம்
தோறும் வடக்கில் நடந்து வந்தது. பல களியாட்ட விழாவை இது நடத்திய போதும்,
“மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி” எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்து
வந்தது.ஏரிக்கரை நிறுவனம் (Lakehouse) பத்திரிகையாக மாறியபின் (மாற்றப்பட்ட பின்),
நடாத்தப்பட்ட “மாட்டுச்சவாரி” களியாட்ட விழா” வை பெற்றோல் குண்டுவீசி அன்றைய
தீவிரவாத இளைஞர்கள் குழப்பினர். இதுவே நேரடியான அரசுக்கு எதிரான தீவிரவாத
இளைஞர்களின் வன்முறை சார்ந்த “முதலாவது” நடவடிக்கையாகும்!
1970 ஆம் ஆண்டு யூலை மாதம்  19ம் நாள், இலங்கையைக் “குடியரசாக” மாற்றுவதற்கு,
“புதிய அரசியல் நிர்ணய சபையை” சிறீமாவோ பண்டாரநாயக்கா கொண்டுவந்தார். செல்வா
தலைமையில் தமிழர் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். ஒற்றை ஆட்சிக்குப் பதிலாக
“சமஸ்டி” ஆட்சியையும், பௌத்தம் அரசு மதம் என்பதற்றுப் பதிலாக – மதசார்பற்ற –
குடியரசு  “தமிழும் – சிங்களமும் ஆட்சிமொழி” என்று இவர்கள் சபையில் தாக்குதல்
செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாராளுமன்ற பாதையில் நம்பிக்கை இழந்த உள்ளுர் மற்றும் வெளிநாட்டுத்
தீவிரவாத இளைஞர்கள்: (பாராளுமன்ற பாதையை நிராகரித்தவர்கள் – “ரீ.எல்.ஓ” (TLO)
மற்றும், இன்னோர் பிரிவினரான “இலண்டன் பிரிவினர்” “ஈ.எல்.ஓ” (ELO) வை உருவாக்கினர்.
ஆண்டு 1971….
71ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு சிவகுமாரன், துரையப்பா வீட்டின் மீது
பெற்றோல் குண்டை வீசினான். ..
.
இக்குண்டுவீச்சு  நடந்த பின்னர்…
மூன்று நாட்களின் பின்னர்… (1971 .02 . 07)….
“தமிழர் ஐக்கிய முன்னணி”க்கான கூட்டம், பிரபாகரனின் பெரியப்பா முறையான 
கணேசமூர்த்தியின் பெருமளவான முயற்சியால், இதே நாளில் வல்வெட்டித்துறையில் “ஐக்கிய
முன்னணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!”  செல்வாவைத் தலைவராகவும், கணேசமூர்த்தி –
காசியானந்தன் ஆகிய இருவரையும் செயலாளராவும் கொண்டு -  முறையே கதிரவேற்பிள்ளை, ரி.
திருநாவுக்கரசு, ஏ.குமரகுரு ஆகியவர்களை நிர்வாக அங்கத்தவர்களாகக் கொண்டு இம்
முன்னணி உருவாக்கப்பட்டது.
இதை அடுத்து சிவகுமாரன் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தான்…
இலக்குத் தவறிய குண்டையடுத்து, இரண்டாவது நாளாள (1971.03.13) ஆகிய அன்று
ரோகணவிஜயவீரா கைது செய்யப்பட்டார். இதையடுத்து 1971.04.05 ஜே.வி.பி தாக்குதலில்
இறங்கியது….
ரோகணவிஜயவீராவை விடுவிப்பதற்கான யாழ். கோட்டைத் தாக்குதல் “பாஸ்கா-71″ திருவிழாவை
அடுத்து நடந்தது. அப்போது திருநெல்வேலி மின்சார நிலையத்தில் குண்டொன்றை
வெடிக்கவைத்து, பிரபல எழுத்தாளரும் “தீண்டான்மை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்” 
முன்னணி உறுப்பினருமான கே. டானியலை பொய்க்குற்றம் சாட்டி  பொலீசில் மாட்டிவிட்டனர்
எதிர்த் தரப்பினர்.
இக்காலகட்டத்தில்  தாழ்த்தப்பட்ட மக்களின்  மீது பல வகையான காழ்ப்புணர்ச்சி கொண்ட
காட்டிக் கொடுப்புக்களும், அவைகளிடம் அமைப்புருவாக்கும் நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு
முறியடிக்கப்பட்டு வந்தன. வன்னியில் நீர்ப்பாசனத்துறை பொறியியலாளராகக் கடமையாற்றிய
யேசுரட்ணம் என்பவர் மக்களை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்தார். இவர் யாழ்.
சாதிவெறியர்களால் தூற்றிக் கேலி செய்யப்பட்டதுடன், கொலைப் பயமுறுத்தலாக இவரது
வீட்டுக்குக் குண்டுவீசி எச்சரித்தனர்.
ஜே.வி.பியினது கிளர்ச்சியை அடுத்து, அதனுடன் இணைந்து மலையகம் உள்ளிட்ட மாபெரும்
மேதினத்தை நடத்தத் திட்டமிட்ட இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும்
தடைசெய்யப்பட்டனர். காட்டிக் கொடுப்பினூடாக, அமைப்புருவாகி வந்த தீண்டாமை ஒழிப்பு
வெகுஜன முன்னணியின் முன்னணி உறுப்பினர் பலரும் கைதுசெய்யப்பட்டனர். ஜேவிபி மற்றும்
திராவிட முன்னேற்ற கழக உறுப்பினரின் கைதையடுத்து, எஞ்சிய திராவிட உறுப்பினர்கள்
“தமிழர் ஐக்கிய முன்னணி”க்கு சார்பாக சாய்ந்தனர். இத்துடன் திராவிடக் கழகம்
செயலிழந்தது.
“தமிழர் ஐக்கிய முன்னணி”க்கு ஆதரவு வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து
வந்தவர்களும், குறிப்பாக சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றவர்களால், தழிழரசுக்
கட்சியினர் புதிய அரசியல் நிர்ணய சபையிலிருந்து வெளியேறவேண்டும் என்ற கருத்தைப்
பலமாக முன்வைத்தனர். இவ்வழுத்தத்தால் இவர்கள் நிர்ணய சபையிலிருந்து வெளியேறினர்.
72ம் ஆண்டு சுதந்திர தினத்தை அடுத்து…
அரசில் அங்கம் வகித்த தொழில்துறை தரகர்கள் மீது (தமிழ்) செறிவான கொலை மிரட்டல்களை
தீவிரவாத இளைஞர்கள் மேற் கொண்டனர். இக்காலத்தில் சிவகுமாரனின் துணையுடன் இலங்கை
மன்னனைத் தலைவராகக் கொண்டு, சாம்.தம்பிமுத்துவை செயலாளராகக் கொண்டு “ஈழத்தமிழர்
இளைஞர் இயக்கம்” ஆரம்பிக்கப்பட்டது.
யாழ். முனியப்பர் கோவிலில் “இலங்கை அரசுடன் போராடுவதற்கு எல்லாத் தமிழ் தலைவர்களும்
ஒன்றுபட வேண்டுமென்று” கோசத்தை முன்வைத்து, ஓர் அடையாள உண்ணாவிரதத்தை
முன்னெடுத்தனர். இவ் உண்ணாவிரதத்தின் போது தீவுப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் –
கா.பொ. இரத்தினமும், உடுப்பிட்டி தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
மு.சிவசிதம்பரமும் வருகை தந்திருந்தனர்.
இணைப்பாட்சியிலா? ஒற்றை ஆட்சியிலா? அல்லது “தமிழீழத்திலா?” என்ற கேள்வியை இவர்கள்
கேட்டனர். “யாழ் நகரசபை மேயர் பதவியை  கைப்பற்றுவதற்காக “தமிழரசுக் கட்சியும்”,
“தமிழக்; காங்கிரஸ் கட்சியும்” கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனவே… “ஏன் தமிழர்களின்
நலனுக்காக இணைய முடியாது”(?) என இவ்விளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
இடையில்…
ஏற்கனவே 71, செப்ரம்பரில்… பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறி – யின் காரின் மீது
சிவகுமாரன் குண்டு வீசியிருந்தான்! தீவிரவாத இளைஞர்களால் அன்று தயாரிக்கப்பட்ட
“துரோகியல் பட்டியலில்” தமிழ் தொழிற்துறை தரகர்களின் பெயர்கள் மட்டுமே இடம்
பெற்றிருந்தது. இதற்குள்தான் இவர்களின் போராட்டத்தை மட்டுப்படுத்தினர். சிவகுமாரன்
இப்பட்டியலுக்கு வெளியேயும் தாக்குதல் நடத்தியதால், ஏனைய குழுவினரிடம் முரண்பட்ட
போக்கும் காணப்பட்டது.
1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி புதிய அரசியல் அமைப்பை சிறிமாவின் கூட்டு முன்னணி
அரசு கொண்டுவர திட்டமிட்டிருந்தது.
இவ் அரசியலமைப்பை எரிக்கும் இயக்கத்தை தமிழர் கூட்டணியினர் கோரினர். இளைஞர்கள்
தீவிரமாக இதில் பங்கெடுத்தனர். மே 16ம் திகதி துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள்,
போன்றவற்றை இளைஞர்கள் ஒட்டி 22ம் திகதி அரசியல் அமைப்பை எரிக்கும் கோரிக்கையை
வெளிப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அரசு, அன்றே ஊரங்குச் சட்டத்தைப்
பிறப்பித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்ட, ஒட்டிய இளைஞர்களைக் கைது செய்தது.
மே 22ம் திகதி 19 தமிழ் எம்பிக்களில் 15 பேரும், இளைஞர்களும் இணைந்து, வண்ணார்பண்ணை
நாவலர் ஆச்சிரமத்தில் அவ் அரசியல்யாப்பை எரித்தனர். இதே தினத்தன்று துரோகியல்
பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த குமாரசூரியரை சுட்டுக்கொல்ல முயன்றதாக பொலீஸ்
தரப்புக் குற்றம் சாட்டியது. இதில் ஒரு வேடிக்கையான விசயமும் இருக்கிறது. நாவலரை
தமிழ் தேசிய தலைவராகவும், அவரது உடமைகளை தமிழ்த் தேசிய சொத்தாகவும் அரசு
அறிவித்துப் பாதுகாக்க வேண்டுமென்று குமாரசூரியர் அரசிடம் கோரிக்கையை வைத்து, தமிழ்
தேசிய சொத்தாக அரசு ஏற்றுக் கொண்டதே அந்த விடயமாகும்.
அரசியல் யாப்பை எரித்து மூன்று நாட்களுக்குள் 43 மாணவர் பேரவை உறுப்பினர் உட்பட
எல்லாமாக 72 பேரை அரசு கைது செய்திருந்தது. இக்கைதில் இருந்து தப்பி இந்தியா சென்ற
செட்டியும், பிரபாகரனும் “ஈழத்தின் சந்திரபோஸ்” என்று அழைக்கப்பட்ட இராசரத்தினத்தை
சந்தித்து “புதிய தமிழ் புலிகளை” உருவாக்கினர். செட்டி என்பவர், எம்.பி
ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தின் செல்வாக்கின் கீழ் இருந்த இளைஞர்களில்
துடிப்பான இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயாவின் சில கருத்துக்களை வாசகர்களின் சிந்தனைக்காக கீழே தருகிறேன்…
“செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர்
எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக்
கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.
அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை
என்றும், அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த
நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச
ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர்
இந்தியாவிற்குச் செல்கிறார்.” (ஐயாவின் பாகம் இரண்டு)
ஆணைக்கோட்டை சுந்தரதாஸ் வீட்டின் மீது குண்டுவீசிய அதேநாள்!
நல்லூர் அருளம்பலத்தின் நெருங்கிய சகாவும், நல்லூர் வீசிச் செயமனுமாக இருந்த
குமரகுலசிங்கத்தை கொலை செய்ய செட்டியின் தலைமையிலான புதிய புலிகள் திட்டமிட்டனர்.
கோப்பாயில் “ரக்ஸ்சி” ஒன்றை மறித்துக் கடத்திய செட்டியின் தலைமையிலான குழுவினர்,
குமரகுலசிங்கத்தின் வீட்டுக்குள் புகுந்து அவர்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை
மேற்கொண்டனர். இதில் காயங்களுடன் செயமன் தப்பியிருந்தார். தாக்குதலை முடித்துத்
தப்பிய செட்டி குழுவினர், காரைவிட்டு இறங்கித் தப்பிய போது அதன் “ரக்ஸ்சி” சாரதியான
உலகநாதனை செட்டி சுட்டுக் கொன்றுவிட்டே எல்லோரும் தப்பியிருந்தனர். இதுவே
திட்டமிட்டு தேடிச்சென்று தொழிற்துறைத் தரகுகளை அழிக்கும் முதலாவது அமைப்பு
நடவடிக்கையாகும். இதில் பிரபாகரனும், கண்ணாடியும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் அமைப்புமுறை உருவாக்கப்பட்ட பின், தொழிற்துறைத் தரகுகளை கொல்லுவதைத்
தவிர வேறு அரசியல் வர்க்க நலன் மாற்று (தமிழ்) வணிகத் தரகுகளுக்கு
இருந்திருக்கவில்லை! 1865 இல் உருவாக்கப்பட்ட பிரித்தானிய முறையிலான உள்ளுராட்சி
அமைப்பு முறை 72 வரை நடைமுறையில் இருந்தது. 1938ல் கிராம மட்டத்திலான உள்ளுர்ப்
பரிபாலனம் வாக்குரிமையோடு மாற்றத்தைக் கண்டது. சர்வசன வாக்குரிமையை அடுத்து,
உள்ளுர் அரசியல் முகாமைத்துவத்தில் மக்கள் பங்களிப்புத் திறந்து விடப்பட்டது. 1930
களிலும், 1940களிலும் மாநகரசபைகள், பட்டினசபைகள், நகரசபைகள், கிராமசபைகள் உள்ளிட்ட
நான்கு சபைகளைக் கொண்ட உள்ளுராட்சி இலாக்கா இயங்கி வந்தது.
அதிகாரப் பரவலாக்கமும் சட்ட நிர்வாக அதிகாரங்களைப் பரவலாக்கும் முறை, 9 மாகாணங்களாக
மறுசீரமைக்கப்பட்டது. நகர்ப்புறங்களின் உள்ளுராட்சி அமைப்பு முறை, 12 மாநகர
சபைகளையும், 38 நகரசபைகளையும் கொண்ட பிரதேச சபைகளாகவும் இயங்கின. 1947ம் ஆண்டின்
29ஆவது இலக்க மாநகரசபை சட்டத்துக்கும், 1939ஆம் ஆண்டின் 61ஆவது இலக்க நகரசபை
சட்டதிட்டத்துக்கும் அமைவாகவே இயங்கி வந்தன.
இலங்கை சுதந்திரமடைந்த(?) 1948ம் ஆண்டுக்குப் பின்னர்…
அரசியல் அதிகாரப்பரவலாக்கலும், பன்முகப்படுத்தலும் 9 மாகாணத்துக்குமான அரசு
அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த முறை “கச்சேரி முறை” என்று பேசப்பட்டது.
பின்பு இது “மாவட்ட பரிபாலனம்” என மாற்றமடைந்தது. இந்த அரசு அதிபர்கள்
கொழும்பிலுள்ள தலைமை அலுவலகங்களுக்கு ஊடாகவே இயங்கினர். அரசாங்க அதிபர் உள்நாட்டு
அலுவல்கள் அமைச்சுக்கு மட்டுமே பொறுப்பாக இருந்தார்.
மாவட்ட சபைகள் 1968ல் முன்வைக்கப்பட்ட போதிலும், 1972 இல் சிறிமாவின்
கூட்டுமுன்னணியால் கொண்டுவரப்பட்ட “புதிய அரசியல் அமைப்பின்” மாவட்ட அரசியல்
அதிகாரமும், பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி (வரவு செலவு) திட்டமும்,
“பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பை” ஏற்படுத்தவில்லை! இது யதார்த்தத்தில் ஆளும்
கட்சியின் அரசியலலை ஒருமுகப்படுத்துவதையே உச்சநிலைக்குக் கொண்டு வந்தது. ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஆளும் அரசியல் தலைமைத்துவத்தை பிரதிபண்னும், ஏனைய மத்திய வணிகத்துறை
அரசியல்வாதிகளை ஓரங்கட்டும் ஓர் அபிவிருத்தி தொழிற்றுறை தரகு நடவடிக்கையாகவே இது
அமைந்தது.
அதாவது பிரிட்டீசாரின் இருப்பில் இருந்து வந்த “கச்சேரி” அதிகாரமுறைக்கு புறம்பாக,
நேரடியான அபிவிருத்தியில் பங்கேற்கும் தொழிற்துறைத் தரகுகள், மக்களிடம் இலகுவாக
செல்வாக்குப் பெறும், அரசில் இருக்கும் கட்சியின் நேரடி முகவர்களின் அதிகாரம்
அபிவிருத்தி நடவடிக்கையால் “அரசியல் செல்வாக்காகப்” பெருகுவது தொழிற்துறை தரகின்
தேவையாக இருந்தது. இதற்கு இவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் எனப்
பெயரிட்டனர். இவ் அரசியல் செல்வாக்கால் உருவான துரையப்பா “துரோகப்பாவாகவும்”,
குமாரசூரியர் துரோகியாகவும்” துரோகியல் பட்டியல் உருவாகியது!” (வணிகத் தரகுகளால்).
ஆனால் “கச்சேரி” முறைக்குள் இலாபங்களைப் பெற்றுவந்த தமிழ் வணிகத்தரகுகள் தமிழ்
தொழிற்துறை புதிய தரகுகளை துரோகிகளாகக் காட்டி (அழித்து) தமிழ் பகுதிகளில்,
வணிகத்தரகை மட்டுமே வைக்க நினைத்தனர். “வணிகத் தரகே” தமிழ் மக்களுக்கான விடுதலை
என்றும், இதுவே தேசிய விடுதலைக்கான போக்கு என்றும் (சிறுபான்மையின் விடுதலை
தொடர்பாக) இன ரீதியாக தமது வர்க்க நலனை நியாயப்படுத்தினர்.
செட்டியின் “புதிய தமிழ் புலிகளின்” தாக்குதலுக்கு அடுத்தநாள், மட்டக்களப்பில்
தமிழர் கூட்டணியின் கூட்டம் கூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மட்டக்களப்பு இராஜன்
செல்வநாயம் மற்றும் வட்டுக்கோட்டை எம்பி ஏ.தியாராஜா மீது அடுத்தடுத்து கொலைகள்
ஏவப்பட்டது.
இதை அடுத்து ஒரு கிழமையின் பின்னர். (1972.06.25) செல்வா, தர்மலிங்கம்,
சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், செல்லச்சாமி, மணிசேகரம், தங்கத்துரை கொண்ட 7- பேர்
குழு “தமிழர் கூட்டணியாக” புனரமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரபாகரனின் செயல் தீவிரமடைந்தது. 1972.08.27 இன்று புதிய
விளையாட்டு அரங்கில் நடந்த “காணிவேல்” நிகழ்ச்சியில் துரையப்பா பங்குபற்றுவதாக
இருந்த தருணத்தில் புதிய புலிகளின் பிரபா குண்டொன்றை வெடிக்கவைத்தார். அதே நாளில்
யாழில் நடத்திய கொள்ளை ஒன்றிலும் தோல்வியுற்றார்.
1972.09.11 அன்று கூட்டம் ஒன்றில் இருந்து திரும்பிய எம்.பி சுப்பிரமணியத்தின்
காரின் மீது தீவிரவாத இளைஞர் குண்டை வீசினர். மீண்டும் 17ம் திகதி பிரபாகரனால்
துரையப்பா விளையாட்டு அரங்கில் குண்டு வைக்கப்பட்டது.
1972.10.03 பாராளுமன்றத்தில் செல்வாவின் வாக்குமூலம் “இனித் தமிழர்களைக் கடவுள்தான்
காப்பாற்ற வேண்டும்”
1973ம் ஆண்டு… மாணவர் பேரவை உட்பட 40 இளைஞர்களைக் கொண்ட “இளைஞர் பேரவை”யை கூட்டணி
உருவாக்கியது. இதைத் தொடர்ந்து மாங்குளத்தில் குமாரசூரியர், மற்றும் அருளம்பலம்,
துரையப்பாவின் மீது கொலை முயற்சிகள் தொடரப்பட்டன.
73 சுதந்திர தினத்தன்று சிவகுமாரன் அருளம்பலம் ஏற்றிய இலங்கைக் கொடியை இறக்கிக்
கிழித்தெறிந்தான். இதேநாள் உரும்பிராயில் நால்வர் பஸ்சை எரித்ததற்காக கைது
செய்யப்பட்டனர்.
(இது ஒரு வைப்பகப்படம். இதில் காணப்படும் “பஸ்சின்” நம்பர் எந்த “லைனுக்கு” உரியது
என்று சி.ரி.பி யில் வேலை செய்தவர்கள் யாராவது உறுதிப்படுத்தினால் நல்லது. இது 764
“லைனுக்கு” உரியதா?)
1973.10.12 சிறையிலிருக்கும் இளைஞர்களை விடுவிக்கக் கூறி உண்ணாவிரதம்
நடத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் கண்ணாடி பத்மநாதன் உட்பட சிலர் அநுராதபுரம்
சிறையிலிருந்து தப்பியிருந்தனர். இளைஞர்களை விடுதலைச் செய்யக் கோரி 1973.10.02
வடக்குக் கிழக்கில் பூரணகர்த்தால் நடந்தது.
செட்டியும் இக்காலத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்…
இனி.. கால ஒழுங்கில் ஐயாவுடனான முரண்பாடு 01..
“அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா,
ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே
ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும்
கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன்
எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை
ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவிட்டு,
அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்”. என இப்பொழுது ஐயா
பதிவிட்டிருக்கிறார்.
நாம் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியிலும், என்.எல்.எவ்.ரீ (ஜயா அதன் மத்திய குழு
உறுப்பினர்) யில் இருந்தவேளை “கண்ணாடியை பிரபாகரன் படுத்த பாயில் வைத்து சுட்டுக்
கொன்றதாக” அவ் அமைப்புக்களால் எமக்கு கூறப்பட்டது. இது எமது அமைப்பில் மட்டுமே
கூறப்பட்ட செய்தியல்ல. கிட்டத்தட்ட எல்லா விடுதலை அமைப்பிலும் இவ்வாறான பிரச்சாரம்
செய்யப்பட்டிருந்தது. புலிகளால் நடத்தப்பட்ட ஒவ்வொரு சகோதரப் படுகொலைகளின் போதும்,
இப் பிரச்சாரம் மேலெழுந்ததைக் பின்னரும் காணக்கூடியதாக இருந்தது.
இங்கே முரண்பாடு செட்டி சுட்டாரா? பிரபா சுட்டாரா? என்பதல்ல, ஏன் அன்று
கீழணிகளுக்கு பிரபா படுத்த பாயில் சுட்டதாகவும், இன்று அது செட்டியின் வேலை என்றும்
கூறப்படுவதும்தான் இங்கு முக்கியம். இன்று ஐயா சொல்வதே நிஜமாக இருந்தால், அன்று ஏன்
பிரபாவின் மீது இந்த வீண் பழியைப் போட்டார்கள்?
இல்லை என்றால் 40 வருடப் போராட்டத்தில் தொடர்ச்சியாக பிரபா நின்றுபிடித்து, இன்று
முள்ளிவாய்க்காலில் அழிந்துபோன “பச்சாத்தாபத்தில்” இவை எழுதப்படுகிறதா?
தொடரும்….
- ரூபன் -

Geen opmerkingen:

Een reactie posten