தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 november 2010

புதிய வாழ்வினைக் கட்டியெழுப்ப திண்டாடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் (படம் இணைப்பு)

புதிய வாழ்வினைக் கட்டியெழுப்ப திண்டாடும்
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண்
போராளிகள் (படம் இணைப்பு)
சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்துநின்ற பத்மா, ராசாத்தி மற்றும் ஜனோ ஆகிய மூவரும் விடுதலைப் புலிகளமைப்பின் முன்னாள் பெண் போராளிகள்.

இப்பெண்கள் பற்றிய கதைகளை கேட்டு மட்டக்களப்பில் இருந்து Rebecca Murray எழுதிய செய்திக் கட்டுரையை The Christian Science Monitor என்னும் புகழ்மிக்க இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இலங்கைத்தீவிலுள்ள பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் வாழ்வு ஒளிமயமானதாக இருக்கும் என்பதைக் காட்டும் நம்பிக்கையின் சமிக்கையாக இவர்கள் இருக்கிறார்கள்.

சிறிலங்காவில் 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த கொடூரமான போரின் விளைவாக பத்மா மற்றும் ராசாத்தி ஆகிய இருவரும் ஒற்றைக் கண்பார்வையினை இழந்தவர்கள். விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியுடன் இணைந்து செயற்பட்ட யனோ தனது ஒற்றைக் காலினை இழந்து நிற்கிறாள்.

ஐ.ஓ.எம் நிறுவனத்தின் உதவியினால் இவர்கள் சிறிலங்காவினது ஆடை உற்பத்தித் தொழில்துறையில் இவர்கள் மூவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

ஆனால் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கும் இவர்களது தோழிகள் மற்றும் தோழர்களில் பெரும்பாலானவர்கள் வேலையற்றவர்களாகவே இருக்கும் அதேநேரம் மாதமொன்றுக்கு 6000 ரூபாயினை பெறுவதையிட்டு இவர்கள் அகமகிழ்கிறார்கள்.

குறித்த இந்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் இவர்கள் பருத்தி துணியிலான ரீ-சேட்டுக்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறாhர்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் மீண்டும் இணைந்திருந்தாலும் இன்னமும் பல தடைகளைத் தாண்டிப் பயணிக்கவேண்டியுள்ளது.

சிறிலங்காவில் வாழும் சிறுதேசியமான தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த கொடூரமான போரின் விளைவாக 100,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

2004ம் ஆண்டு புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் அந்த அமைப்பினது கிழக்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த கேணல் கருணாவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கருணா அந்த அமைப்பிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்த கொண்டார். இந்த நிலையில் வன்முறைகளும் ஆட்கடத்தல்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்தது.

2009ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து நாட்டினது வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 300,000 அதிகமான தமிழ் அகதிகள் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 25260 பொதுமக்கள் மாத்திரமே இன்னமும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்க, ஏனையோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இடிந்தழிந்த வீடுகள், அழிந்துவிட்ட உள்ளளுர் உட்கட்டுமானங்கள் இன்னமும் திருத்தப்படாத நிலையில் போதிய வேலை வாய்ப்புக்கள் இன்றி மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மோசமானதொரு சூழமைவில் வசித்து வருவதாகத் தெரிகிறது.

சிறிலங்காவிலுள்ள வேலைத்தகுதி பெற்ற இளைஞர்களில் வெறும் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக மத்திய வங்கி கணக்கிடுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண்போராளிகள் பெரும்பாலும் கல்வியினை இடைநடுவில் விட்டவர்களாகவும் உள நலன் பாதிக்கப்பட்டவர்களாகவும் காயமடைந்தவர்களாகவுமே காணப்படுகிறார்கள்.

இதன் காரணமாக இவர்கள் தங்களுக்குப் பொருத்தமான பணிகளைத் தேடிப் பிடிப்பதற்குப் பாடாய்ப்படுகிறார்கள்.

"முதலில் எங்களுக்கு வாழுவதற்கு ஒரு வீடும் பொருத்தமானதொரு தொழிலும்தான் தேவையாகவுள்ளது. இங்கு எங்களுக்கான வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தருவதற்கு எவருமில்லை. போர் இடம்பெற்ற அந்தக் காலப்பகுதியினை நான் முற்றாக வெறுக்கிறேன். ஒரு வீட்டினைக் கட்டுவதோடு எங்களது குடும்பங்களைப் பராமரிப்பதற்கே நாங்கள் விருப்புகிறோம்" என ராசாத்தி தனது உள்ளக் கிடக்கையினை எங்களிடம் கூறுகிறார்.

இந்த ஆண்டு நாட்டினது கிழக்குப் பகுதியில் கட்டடங்கள், வீதிகள், பாலங்கள் என்பனவற்றை சிறிலங்கா அரசாங்கம் நிர்மாணித்து வருகிறது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான குடும்பங்கள் மீன்பிடி மற்றும் விவசாயத்தின் ஊடாகக் கிடைக்கும் மிகவும் குறைந்தளவிலான வருமானத்திலேயே தங்கியிருக்கின்றன.

மாவட்டத்தின் கிராமப்புறத்தில் மதுப்பாவனை வீதம் அதிகரித்துக் காணப்படும் அதேநேரம் காணிப்பிணக்குகள் அடிக்கடி தோன்றி மறைகின்றன. போர் காலத்து நிலைமைகள் மீண்டும் ஏற்படுபவதற்கு இவை வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் இவர்களிடத்தே மேலோங்கிக் காணப்படுகிறது.

இந்தப் பெண்கள் போராளிகளானது எவ்வாறு?

தனது வயல்நிலத்தில் வேலைசெய்துகொண்டிருந்த போது பத்மாவினது தந்தையார் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது நடந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் பத்மா 16 வயதை அடைந்திருந்தபோது அவள் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள்.

"பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது நான் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டேன். இதனை அறிந்த எனது அம்மா அவர்களது பணியகம் சென்று கேட்டபோது என்னைத் தாங்கள் அழைத்துச்செல்லவில்லை எனக் கூறிவிட்டார்கள்" என பத்மா கூறுகிறாள்.

அதேபோலவே தனது வீட்டுக்கு அருகேயிருந்த கோவிலுக்குச் சென்றுகொண்டிந்தபோது அப்போது 15 வயதினை அடைந்திருந்த ராசாத்தி புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டாள்.

இவளது இரண்டு நண்பிகள் புலிகளின் பிடியிலிருந்து தப்பியோடியபோதும் ராசாத்தி அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர் முல்லைத்தீவு பகுதியிலிருந்த ஒரு முகாமிற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள்.

அப்போது 21 வயதை அடைந்திருந்த ஜனோ தானாக முன்வந்தே புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டதாகக் கூறுகிறாள்.

கடலிலும் தரையிலும் இவள் சமரிட்டிருக்கிறாள். 2009ம் ஆண்டினது ஆரம்பப் பகுதியில் போர் உக்கிரமடைந்த நிலையில் தங்களது முற்றுகைக்குள் அகப்பட்ட பகுதிகளை இலக்குவைத்து படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறையினைப் போக்குவதற்காக முன்னைய போர்களின் போது தங்களது உடல் அவயவங்களை இழந்தவர்களையும் கூட புலிகள் களமுனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இவர்களுள் ஒரு காலினை இழந்த ஜனோவும் ஒருத்தி. "என்னைச் சுற்றி அதிகம்பேர் இறந்து கிடந்தார்கள். துயரமான இந்த நிகழ்வினை வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன்" என்கிறாள் அவள்.

புனர்வாழ்வு, வேலை வாய்ப்புக்கான பாதை

சிறிலங்கா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற 'புனர்வாழ்வு முகாம்களில்' 3,000 பெண் போராளிகள் உள்ளிட்ட 11,000 புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.

விடுதலைப் புலிகளின் போர் அணிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களைக் கொண்ட படையணிகளே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டமை, கண்முன்னே உறவுகளும் நண்பர்களும் துடிதுடித்து மடிந்தமை மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாகி காயமடைந்தமை ஆகிய காரணங்களினால் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இன்னமும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்" என இதுவிடயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர் சொனி இன்பராஜ் கூறுகிறார்.

"கல்வியினை இழந்து நிற்பது, நிச்சயமற்ற எதிர்காலம், குடும்ப உறவுகளைப் பறிகொடுத்திருப்பது மற்றும் கல்வியினைத் தொடரமுடியாத நிலையில் இருப்பது போன்ற சோகங்கள் இவர்களது உரையாடல்களில் தொனிக்கிறது. இது போன்று துன்பங்கள் இருப்பினும் மீண்டும் சமூகத்துடன் இணைந்திருக்கும் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளான இவர்களிடத்தே வாழ்க்கை தொடர்பான நம்பிக்கை அதிகமுள்ளது" என்கிறார் இவர்.

படிப்படியாக...

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியுடன் இணைந்து செயற்பட்ட சுதர்சினி என்ற இன்னொரு முன்னாள் போராளியும் மீண்டும் சமூகத்துடன் இணையும் முனைப்புக்களில் ஈடுபட்டிருக்கிறாள்.

"விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் மருத்துவப் பணியாற்றி இருக்கிறேன். செறிவான எறிகணைத் தாக்குதல்களாலும் விமானக் குண்டுத் தாக்குதல்களாலும் காயமடைந்த பல பொதுமக்கள் அங்கிருந்தார்கள்" என்கிறாள் அவள்.

"போரின் இறுதிக் கட்டத்தில் கிளிநொச்சியில் மூர்க்கமான மோதல்கள் இடம்பெற்றிருந்தன" என மார்பிலும் அடிவயிற்றிலும் காயமடைந்த சுதர்சினி கூறுகிறாள்.

"கடினமான காலமது. எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்கள் பெரும் இடர்களைச் சந்தித்தார்கள். பொதுமக்களான எனது நண்பர்கள் பலர் கொல்லப்பட்டனர்" என அவள் தொடர்ந்து கூறினாள்.

மேலே குறிப்பிட்ட ஏனைய மூன்று முன்னாள் போhளிகளையும் போலவே சுதர்சினியும் ஐ.ஓ.எம் நிறுவனத்தின் உதவியுடன் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்திருக்கிறாள். அருகேயுள்ள பலசரக்குக் கடையில் பணிபுரியும் சுதர்சினி நாளொன்றுக்கு 1000 ரூபாயைக் கூலியாகப் பெறுகிறாள்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் செயல்திட்டத்தில் ஐ.ஓ.எம் நிறுவனம் சிறிலங்காவினது அரச திணைக்களங்களுடன் இணைந்து பணிசெய்கிறது.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 660 பேர் ஐ.ஓ.எம் நிறுவனத்தில் தங்களது பதிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 50க்கும் அதிகமானவர்கள் பெண்கள்.

தையல், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய பணிகளுக்காக ஐ.ஓ.எம் நிறுவுனம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த முன்னாள் பெண் போராளிகளுக்கு நிதியுதவியினை வழங்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் துணை இழந்த பெண்களாக இருக்கும் அதேநேரம் தங்களது குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தைச் சம்பாதிப்பதோடு தங்களது வாழ்வினை மெல்ல மெல்ல மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கான இந்த செயல்திட்டமானது குறிப்பிட்ட ஐ.நா அமைப்புக்கள் மற்றும் அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் தயாரிக்கப்பட்டது.

லைபீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போரின் பின்னர் கைக்கொள்ளப்பட்ட இதேபோன்ற செயல்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே சிறிலங்கா தனது செயல்திட்டத்தினைத் தயாரித்திருக்கிறது.

பல்வேறுபட்ட கட்டங்களைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில் முதல் அவர்களைத் தரப்படுத்தும் நடைமுறை கைக்கொள்ளப்படுகிறது. குறித்த அந்த முன்னாள் போராளி நாட்டினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறாரா என்றும் இந்தச் செயன்முறையின் போது ஆராயப்படுகிறது.

புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் மீளவும் இணைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள் தொடர்பான அனைத்து விபரங்களும் படைத்தரப்பினரால் பேணப்படுகின்றன.

"தாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்திருந்த காலப்பகுதியில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் பயிற்சிகளை முன்னாள் பெண் போராளிகள் பயன்படுத்துவதற்கு சமூகம் அனுமதிக்க மறுப்பதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது" என்கிறார் இன்பராஜ்.

"தமிழ் சமூகத்தில் காலம் காலமாக இருப்பதைப் போல பெண்களென்றால் வீட்டுப் பணிகளை மாத்திரம் தான் செய்யவேண்டும் என்ற நிலைமையினை மாற்றி, தச்சுத் தொழிலாளர்களாகவும், கட்டடப் பணியாளர்களாகவும், கணனி வல்லுநர்களாகவும் பெண்கள் பணிசெய்வதற்கு இந்தச் சமூகம் அனுமதிக்கவேண்டும்" என்கிறார் அவர்.

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு ஏற்ற உருப்படியான திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும் எனக் கூறும் இன்பராஜ் போரின் மத்தியில் சிக்குண்டு உடல் உறுப்பிழந்தவர்களாக மாறியிருப்பவர்கள் சமூகத்துடன் மீளவும் இணையும் வகையிலான தகுந்த பலனைத் தரவல்ல செயல்திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.

முன்னாள் போராளிகளாக இனங்காணப்பட்டவர்கள் மத்தியிலுள்ள மன அச்சத்தினைப் போக்கும் வகையிலும் அவர்களும் இந்தச் சமூகத்தில் நல்ல குடிமக்களாக வாழ வழிசெய்யும் வகையிலுமான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியமானது என அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது.
மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி

Geen opmerkingen:

Een reactie posten