ஒரு புலிக்கூட்டத்திற்கு ஒரு கழுதை தலைவனாகினால் ...............
ஈழ முரசின் கட்டுரையை ....நீங்களும் வாசியுங்கள்
****************************************************
உங்களுக்காக தருகிறேன்
*****************
எதிரியிடம் கூனிக்குறுகி மண்டியிட்டு வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் என்ற கொள்கையோடு வாழ்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் வழிவந்த பெருமை மானமுள்ள ஒவ்வொரு தமிழருக்கு உண்டு. பண்டைத் தமிழரின் தன்மான உணர்வைப் பறைசாற்றும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
இதில் ஒன்று கோச்சேரமான் கணைக்காலிரும்பொறை எனும் சேர மன்னனால் எழுதப்பட்டது. செங்கணான் எனும் சோழ மன்னனுடன் நடைபெற்ற யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு புற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது தனக்கு வழங்கப்பட்ட நீரை அருந்த மறுத்து உயிர்நீக்கும் முன்னர் அப்பாடலை கணைக்காலிரும்பொறை எழுதியிருந்தார்.
அது வருமாறு:
‘குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளீர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே’
குழந்தை இறந்து பிறந்தாலும், அல்லது உயிரற்ற வெறும் தசைப்பிண்டம் பிறந்தாலும், அதனை வாளால் கீறி அடக்கம் செய்யும் வீரமரபில் வந்தவன் என்ற வகையில் நாயினும் கீழாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் வயிற்றுத் தீயை அணைப்பதற்காக எதிரியிடம் தண்ணீரைப் பிச்சையாக வாங்கி அருந்துவதை விட செத்து மடிவது மேலானது என்று இப்பாடல் மூலம் தெரிவித்து விட்டு தனது உயிரை கணைக்காலிரும்பொறை அவர்கள் மாய்த்துக் கொண்டார். சங்க காலத்தில் நிகழ்ந்த இவ் அற்புதம் தமிழீழ தாயக மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் மீண்டும் நிகழ்ந்தேறியது.
எதிரியிடம் மண்டியிட்டு மானமிழந்து அடிமைகளாக வாழ்வதைவிட இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவுவது மேலானது எனக் கருதி தமிழீழ மண்ணிலும், தமிழீழக் கடலிலும் தமது இன்னுயிர்களை ஆயிரமாயிரம் புலிவீரர்கள் ஈகம் செய்தார்கள். முள்ளிவாய்க்காலில் எதிரியிடம் சிறைப்பட்ட பொழுதும்கூட தமக்குப் பக்கபலமாக நின்ற மக்களையும், தம்மோடு கூடநின்ற போராளிகளையும் காட்டிக் கொடுக்காது தமது உயிர்களை எத்தனையோ போராளிகள் ஈகம்செய்தார்கள்.
இந்த மான மாமறவர்களின் குருதியின் மீதும், அவர்களின் ஈகத்தின் மீதும் அரசியல் செய்து வாக்குப்பிச்சை கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மகிந்தரின் முன்னிலையில் மண்டியிட்டு கூனிக்குறுகி நிற்பது ஒவ்வொரு மானமுள்ள தமிழரையும் சீற்றம்கொள்ள வைத்துள்ளது.
அதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை மாவீரனாக வர்ணித்து தேர்தல் மேடைகளில் முழங்கி வாக்குப் பிச்சை எடுத்த அதே விக்னேஸ்வரன் இப்பொழுது மகிந்தரிடம் மண்டியிட்டு வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்திருப்பது எந்தவொரு மானமுள்ள தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.
பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் சிங்களத்தோடு ஒட்டி உறவாடித் தனது இரண்டு புதல்வர்களையும் சிங்கள மாமியார்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தவர் என்ற வகையில் இது விக்னேஸ்வரனுக்கு புதிதன்று. எதிரியிடம் மண்டியிடுவதும், எதிரிக்கு அடித்தொண்டு புரிவதும் விக்னேஸ்வரனைப் பொறுத்த வரையில் பழகிப் போன விடயங்கள்தான்.
முதலில் பிரேமதாசாவிற்கும், பின்னர் சந்திரிகாவிற்கும், அதன் பின்னர் சரத் பொன்சேகாவிற்கும் பரிவட்டம் கட்டிப் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஆரத்தழுவி அவரை மகிழ்விப்பதற்காக சிங்கக் கொடியைப் பேருவகையோடு கையில் ஆட்டியசைத்த சம்பந்தருக்கோ அன்றி அவரது வாரிசான சுமந்திரனுக்கோ இது புதிய விடயம் அல்லவே.
ஆனால் சங்கத் தமிழர்களின் வழிவந்து, தமிழீழத்துக் கரிகாலன் பிரபாகரனின் வழிநிற்கும் ஒவ்வொரு மானத் தமிழர்களுக்கும் இது ஏற்புடையதொன்றன்று. அதிலும் தமிழீழ மண்ணை மீட்பதற்காக தமது பிள்ளைகளையும், தாய் - தந்தையரையும், சகோதரர்களையும், உற்ற நண்பர்கள் - உறவினர்களையும் களப்பலிகொடுத்த எந்தவொரு தமிழர்களால் இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று.
சிறீலங்கா அரசியலமைப்பின்படி ஒரு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்பவர் தனது பதவிப் பிரமாணத்தை அரசுத் தலைவரின் முன்னிலையில் அல்லது மாகாண ஆளுநரின் முன்னிலையில் மேற்கொள்ளலாம். அவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள விரும்பாதவர் ஒரு சமாதான நீதவானின் முன்னிலையில் தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு மூன்று தெரிவுகள் விக்னேஸ்வரனுக்கு இருந்த பொழுதும்கூட மகிந்தரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு அவர் எடுத்த முடிவும், தனது முடிவில் அவரும், சம்பந்தரும், சுமந்திரனும் விடாடிப்பிடியாக இருந்தமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றிய மூன்று செய்திகளை தமிழர்களுக்கு உணர்த்தி நிற்கின்றன. டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், கே.பி போன்ற தேசத்துரோகிகளின் வழியில் ஒட்டுண்ணி அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கப் போகின்றது என்பது முதலாவது செய்தி.
மகிந்தருக்கு எதிராக மேற்குலக தேசங்களில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களும், பாரத உபகண்டத்தில் தாய்த் தமிழக உறவுகளும், உலகின் ஏனைய பாகங்களில் தமிழகம் - தமிழீழம் ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்ட புகலிடத் தமிழர்களும் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதில் சிறீலங்கா தூதரங்களுக்கு உறுதுணையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்பது இரண்டாவது செய்தி.
மாவீரர்களினதும், மானச்சாவெய்திய மக்களினதும் நிறைவேறாத நெடுநாள் கனவாக விளங்கும் தமிழீழத் தனியரசுக்கான எண்ணக்கருவை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபூண்டு நிற்கின்றது என்பது மூன்றாவது செய்தி.
ஈழத்தீவில் தமிழர்களுக்கு உரிமையில்லை என்று கூறிய சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலமும், ரணில் விக்கிரமசிங்கவை திருப்திப்படுத்துவதற்காக சிங்கக் கொடியை பேருவகையோடு ஆட்டியசைத்ததன் மூலமும் ஏற்கனவே தனது ஒட்டுண்ணி அரசியல் மூலோபாயத்தை சம்பந்தர் வெளிப்படுத்தி விட்டார். அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்த பொழுதே மகிந்தருக்கு உறுதுணையாக செயற்படும் தனது எண்ணத்தை சம்பந்தர் வெளிப்படுத்தி விட்டார்.
தவிர தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தாய்த் தமிழகத்தையும், தமிழீழத் தனியரசுக் கனவைச் சுமந்து மேற்குலக தேசங்களில் குரல்கொடுத்து வரும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களையும் வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு கூறியதன் மூலம் தமிழீழத் தனியரசுக்கான எண்ணக்கருவைக் குழிதோண்டிப் புதைக்கும் தனது முடிவை ஏற்கனவே விக்னேஸ்வரும் வெளிப்படுத்தி விட்டார்.
இந்த வகையில் மகிந்தரின் முன்னிலையில் கூனிக்குறுகி மண்டியிட்டு வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் மூலம் தமிழர்களுக்கு விக்னேஸ்வரனும், சம்பந்தரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படுத்தியுள்ள மூன்று செய்திகளும் புதியவை அல்லவே. பண்டைய பபிலோன் சாம்ராச்சியத்தின் தளபதிகள் தமது வீரர்களிடம் அடிக்கடி முதுமொழி ஒன்றைக் கூறுவார்களாம். ‘ஒரு கழுதைக் கூட்டத்திற்கு ஒரு புலி தலைவனாகி தலைமைதாங்கினால் அக் கழுதைக் கூட்டம் புலிப்படை போன்று போர்புரியும்.
ஆனால் ஒரு புலிக்கூட்டத்திற்கு ஒரு கழுதை தலைவனாகினால் அப்புலிப்படை கழுதைக்கூட்டம் போன்று அங்கிங்கென சிதறியோடிவிடும்’ என்பதுதான் அந்த முதுமொழி. இது இப்பொழுது ஒவ்வொரு தமிழருக்கும் ‘அதுவும் ஒவ்வொரு தமிழீழவருக்கும்’ பொருந்தும். ஏனென்றால் பிரபாகரன் எனும் புலியின் வழிகாட்டலில் புலிகளாக வாழும் எம்மை இப்பொழுது கழுதைக்கூட்டம் ஒன்று வழிநடத்த முற்படுகின்றது. இதனைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் நாம் நடந்து கொள்ளத் தவறினால் புலிகளாக விளங்கும் எமது நிலை கழுதைக்கூட்டத்தின் நிலையாகவே மாறிவிடும்.
நன்றி: ஈழமுரசு
Geen opmerkingen:
Een reactie posten