தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 september 2013

இந்தியப் போர்க் கப்பல்கள்! வெடிக்கும் மற்றொரு சர்ச்சை!

இலங்கைக் கடற்படைக்கு இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இந்தியா கட்டிக் கொடுக்கப் போவதான தகவல் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் இந்தியா வழங்கக்கூடாது என்றும், அதனுடனான இராணுவத் தொடர்புகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே இந்தப் போர்க் கப்பல்களை இந்தியா வழங்கப் போகிறது.
இலங்கைக் கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை அதிகரித்துக் கொள்வதற்காகவே இந்த இரண்டு போர்க் கப்பல்களும் இந்தியாவினால் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கு இந்தியா உதவிகளை வழங்குவது இது முதல்முறை இல்லை.
விடுதலைப் புலிகள் 2000ம் ஆண்டு ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் மூலம் வடக்கில் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் இந்தியா முதலாவதாக சுகன்யா வகையைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியது.
இந்தியக் கடற்படையில் ஐஎன்எஸ் சரயு என்ற பெயருடன் இருந்த 101 மீற்றர் நீளமான இந்தப் போர்க் கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட முன்னர் பல நவீன கண்காணிப்பு தாக்குதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இலங்கைக் கடற்படையில் அந்தப் போர்க் கப்பல் சயுர என்ற பெயருடன் செயற்பட்டு வருகிறது.
அதன் பின்னர் 2007ல் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது இந்தியக் கரையோர காவல்படையிடம் இருந்து வரஹா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கைக்கு குத்தகைக்கு வழங்கியது இந்தியா.
74 மீற்றர் நீளம் கொண்ட விக்ரம் வகையைச் சேர்ந்த இந்தக் கப்பலுக்கு இலங்கைக் கடற்படை சாகர என்று பெயரிட்டுள்ளது.
இந்த இரண்டு போர்க் கப்பல்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கியமான பங்கை வகித்திருந்தன.
2000ம் ஆண்டு நவம்பரில் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்ட சயுர போர்க் கப்பல் கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கைகளுக்கு குறிப்பாக போர்நிறுத்த காலத்தில் அவர்களின் ஆயுதக் கப்பல்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல்களில் சயுர முக்கிய பங்கு வகித்தது.
2006ல் போர் தொடங்கிய பின்னரும் அடுத்தடுத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதல்களிலும் சயுரவுக்கு முக்கியான பங்கு இருந்தது.
2007ல் இந்தியக் கடலோர காவல்படை வழங்கிய சாகரவும் இலங்கைக் கடற்படையில் இணைக்கப்பட்ட பின்னர் கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கைகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டது.
போருக்குத் தேவையான ஆயுதங்களை கடல்வழியாக கொண்டுவர முடியாமல் தடுக்கப்பட்டமைக்கும் கடல்வழி முற்றுகை மூலம் கடற்புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டமைக்கும் இந்தியா வழங்கிய இந்த இரண்டு கப்பல்களும் முக்கிய காரணமாகின.
இது விடுதலைப் புலிகள் தோல்வியைச் சந்திப்பதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவ ரீதியாக எந்த உதவிகளையும் வழங்கவில்லை. தமக்கு எந்தப் பங்கும் கிடையாது என்று இந்தியா கூறி வந்தாலும் இந்த இரண்டு போர்க் கப்பல்களும் போரை முடிவுக்கு கொண்டுவர கணிசமான உதவிகளை வழங்கியதை மறுக்க முடியாது.
இப்போது போர்ச்சூழல் மாறிவிட்ட போதிலும் இலங்கைக் கடற்படை ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை மேலும் அதிகரித்துக் கொள்வதில் அக்கறை செலுத்தி வருகிறது.
இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை வாங்கப் போவதாக இலங்கைக் கடற்படை நீண்ட காலமாகவே கூறிவந்த போதிலும் இந்தியாவே அவற்றை வழங்கப் போகிறது என்ற தகவல் இப்போதுதான கசிந்துள்ளது.
கோவாவில் உள்ள அரசு பாதுகாப்புத்துறை சார் நிறுவனமான பிஎஸ்யு கோவா சிப்பிங்யார்ட் நிறுவனமே இந்த இரண்டு போர்க் கப்பல்களையும் 2017 - 2018 காலப்பகுதிக்குள் கடடிக் கொடுக்கவுள்ளது.
இந்தியா ஏற்கனவே வழங்கிய சுகன்யா விக்ரம் வகை போர்க் கப்பல்களை விட இப்போது வழங்கவுள்ள சரயு வகை போர்க் கப்பல்கள் அளவில் பெரியவை.
2300 தொன் எடையையும் 105 மீற்றர் நீளத்தையும் கொண்டவையாக இவை இருக்கும்.
110 கடற்படையினர் பணியாற்றும் இந்தப் போர்க் கப்பலில் ஒரு ஹெலிகொப்டர் மற்றும் நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த உடன்பாடு எத்தனை மில்லியன் டொலர் பெறுமதி கொண்டது என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை.
இலங்கையுடன் கடல் சார்ந்த இரண்டு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள சூழலில்தான் இந்தியா இந்தப் போர்க் கப்பல்களை விற்கும் முடிவை எடுத்துள்ளது.
முதலாவது பிரச்சினை போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கக்கூடாது என்று அதனுடன் பாதுகாப்பு உறவுகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு எழுப்பிவரும் குரல்.
இரண்டாவது பிரச்சினை தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகள்.
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இராணுவ உதவிகளை வழங்கக்கூடாது என்றும் தமிழகத்தில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அதை இந்திய அரசாங்கம் காதில் போட்டுக் கொள்வதே இல்லை.
இலங்கைக்கு உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் ஓடிச்சென்று உதவியுள்ளது.
கடற்புலிகளை ஒடுக்கப் போர்க் கப்பல்களை வழங்கியது போன்று, புலிகளின் வான் தாக்-குதல் அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான இந்திரா ரக ரேடர்களையும், விமான எதிர்ப்புப் பீரங்கிகளையும் இலங்கைக்கு வழங்கியிருந்தது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், ஆண்டுக்கு 800ற்கும் அதிகமான இலங்கைப் படையினருக்கு அளித்து வரும் பயிற்சிகளை இந்தியா இன்னமும் நிறுத்தவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை மட்டுமே, இப்போதைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.
வழக்கம் போலவே இலங்கைக் கடற் படையும் இந்தியக் கடற்படையும் போர்ப் பயிற்சிகளை நடத்துகின்றன.
தமிழ்நாட்டில் இருந்து வலுவான குரல்கள் எழுந்தாலும் கூட, இலங்கைக்கான இராணுவ உதவிகளை வழங்குவதிலும், அதனுடன் பாதுகாப்பு உறவுகளை வளர்த்துக் கொள்வதிலும் இந்தியா ஒருபோதும் பின் நிற்கவில்லை.
மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம், தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருந்தாலும், அதற்காக இலங்கைக் கடற்படையுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை.
கச்சதீவு விவகாரத்தில் கூட, இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டைக் கோபத்துக்குள்ளாக்கும் முடிவைத் தான் எடுத்துள்ளது.
கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானதல்ல என்று வரலாற்றுக்கு முரணான கருத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது கூட இலங்கை அரசுக்கு மிகவும் சாதகமானதொன்று என்பதில் சந்தேகமில்லை.
இலங்கைக் கடற்படையால் தமது நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்திருந்தும், இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கப்படுவதை தமிழ்நாடு விரும்பவில்லை என்பதை உணர்ந்திருந்தும், இந்தியா எதற்காக இலங்கையுடன் ஒட்டிக் கொண்டு நிற்கிறது என்ற கேள்வி பலரிடம் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இல ங்கையுடன் தந்திரோபாயமான உறவுகளை யும் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகவே தெரிகிறது.
இலங்கை ஊடாக இந்தியாவுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன.
வடக்கே எல்லை வழியாக தொல்லை கொடுக்கும் சீனா, தெற்கே இலங்கை வழியாகவும், இந்தியாவின் கால்களை சுரண்டுகிறது.
எப்போதும், கோபத்தைக் கிளறும் பாகிஸ்தானும் கூட, இலங்கையை இந்தியாவுக்கு எதிரான களமாகப் பாவிக்கிறது என்ற சந்தேகம் இந்தியாவுக்கு உள்ளது.
சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவுகள் நாளுக்கு நாள் புதிய புதிய வடிவங்களில் விருத்தி பெற்று வருகிறது.
இந்தியா எதிர்பாராத துறைகளிலெல்லாம் இலங்கையில் சீனா கால்பதிக்கத் தொடங்கியுள்ளது,
இதெல்லாம் வெறும் வியாபார நோக்கம் தான் என்றும், இந்த உறவுகளுக்கு இராணுவ நோக்கம் கிடையாது என்றும் இலங்கையும் சீனாவும் எத்தனை முறை சொன்னாலும், இந்தியா அதை நம்பத்தயாராக இல்லை.
இந்தியாவின் பாதுகாப்பு வல்லுநர்களில் ஒருவரும், பாதுகாப்பு கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியருமான பாரத் கர்நாட், கடந்த 4ம் திகதி புதுடில்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசும் போது கூட, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் பின்வாசல் என்று அவர் இலங்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், கடந்தவாரம் கொழும்பில் நடந்த இராணுவக் கருத்தரங்கில், பேசிய சீனாவின் மூத்த இராணுவ அதிகாரியான கேணல் சூ ஹுய்யும், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், இலங்கையுடன் சீனா கொண்டுள்ள உறவு குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் சீனாவின் தலையீட்டை முறியடிப்பதற்கு, இந்தியாவுக்கு வேறு வழியுமில்லை.
இந்தியா இந்தப் போர்க் கப்பல்களை இலங்கைக்கு வழங்க மறுத்தால், சீனாவிடம் அவற்றை வாங்கும்.
எனவே தந்திரோபாயமாக நடந்து கொள்ள முனைகிறது இந்தியா.
அதுபோலவே, பாகிஸ்தான் உளவுப்பிரிவின் செல்லப் பிள்ளைகளாகவுள்ள, தீவிரவாத அமைப்புக்கள் இந்தியாவுக்கு ஊடுருவ, இலங்கையைத் தளமாகப் பயன்படுத்த முனைகின்றன என்ற சந்தேகமும் இந்தியாவிடம் உள்ளது.
அதை முறியடிக்க வேண்டுமானால், இலங்கையுடன் நெருக்கமான புலனாய்வுத் தொடர்புகள் அவசியம் என்று இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய கட்டத்தில், இந்தியா தனது பிரதான சவால்களான, சீனாவையும், பாகிஸ்தானையும் வைத்தே, இலங்கையுடனான உறவுகளைத் தீர்மானிக்க முற்படுகிறது.
இலங்கையை விடவும், இந்த இரண்டு நாடுகளும் மிகப் பெரியவை என்பதுடன், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக் கூடியவை.
இதனால் தான், தமிழ்நாட்டின் எதிர்க்குரலையும் இந்தியா புறந்தள்ளிக் கொண்டு, இலங்கைக்கு உதவ முன்வருகிறது.
இந்தநிலையில், இந்தியாவை மையப் படுத்தி சீனாவும், பாகிஸ்தானும் நகர்த்தும் காய்களால், இலங்கையின் பாடு தான் கொண்டாட்டம்.
சுபத்ரா
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTcMWipz.html#sthash.voIYXBK4.dpuf

Geen opmerkingen:

Een reactie posten