தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 september 2013

இலங்கைத் தேசியக் கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை



இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கம் நிற்கும்வரை, தமிழ் மக்கள் சிங்களப் பெருந்தேசியவாதத்தால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகவே உணர்வார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மாலுசந்தி மைக்கல் விளையாட்டுத்திடலில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் சிங்கள மக்களுக்கு இடையே இனங்களைக் கடந்து இலங்கைத் தேசியம் என்ற உணர்வை அரசு ஏற்படுத்த விரும்பினால், முதலில் தேசியக் கொடியில் இருந்து வாளேந்திய சிங்கத்தை அகற்றுவதற்கு முன்வரவேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், பழைய காயங்களை நினைவில் வைத்துக் கொள்வதால் தேசிய ஒற்றுமையைப் பேணமுடியாது என்று அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஒலுவில் துறைமுகத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அந்தப் போர் எங்களில் ஏற்படுத்தியிருக்கும் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.
விடுதலைப் புலிகளை முறியடிப்பதாகச் சொல்லி அரசு தொடுத்த போர் பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றொழித்தது மாத்திரம் அல்லாமல், ஆயிரக்கணக்கானவர்களை அங்கவீனர்களாக்கியுள்ளது.
ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உடலில் உள்ளே இன்றும் எறிகணைச் சிதறல்களைச் சுமந்து வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் விதவைகளாக நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு போரினால் எமது உடலிலும், மனதிலும் தலைமுறைகள் தாண்டியும் ஆறமுடியாத அளவுக்குக் காயங்களை ஏற்படுத்திவிட்டு, பழைய காயங்களை மறந்துவிட்டுத் தேசிய ஒற்றுமையைப் பேணுங்கள் என்று கேட்பதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித அருகதையும் கிடையாது.
நாங்கள் இலங்கையர்கள் என்று சொன்னபோதெல்லாம் இல்லை நீ தமிழன் என்று சொல்லி சிங்களப் பேரினவாதம் எங்களைத் தாக்கியதே இதுகாலவரையான இலங்கையின் இனத்துவ வரலாறாக இருக்கிறது.
இதுவே தமிழ்த் தேசியம் வீறுகொண்டு எழுவதற்கும் தமிழ் மக்கள் ஆயுதம் தூக்குவதற்கும் காரணமாக அமைந்தது.
அரசு இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, தமிழ்- சிங்கள இனங்களுக்கிடையே என்ற உணர்வையும் ஐக்கியத்தையும் இலங்கைத் தேசியம் ஏற்படுத்துவதற்கு உண்மையாகவே விரும்பினால் ஒரு நல்லெண்ண முதற்கட்ட நடவடிக்கையாக இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்திக் கொண்டு நிற்கும் சிங்கத்தை அகற்றுவதற்கு முன்வரவேண்டும்.
விஜயனின் தந்தை சிங்கபாகு ஒரு சிங்கத்துக்கு மகனாகப் பிறந்தவர் என்ற மகாவம்சத்தின் கற்பனைப் புனைவின் அடிப்படையிலேயே சிங்களப் பெருந் தேசியவாதம் இலங்கையின் தேசியக் கொடியில் சிங்கத்தை ஏற்றி வைத்திருக்கிறது.
இலங்கையின் தேசியக் குறியீடாக இருப்பதற்கு சிங்கம் எந்தவகையிலும் பொருத்தமற்றது. இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் நாங்கள் ஒரு தனித்த தேசிய இனம். நாங்கள் பரம்பரை பரம்பரையாகவாழ்ந்து வருகின்ற வடக்கு-கிழக்கு எங்களது தேசியச் சூழல். இங்கு சிங்கங்கள் ஒருபோதும் வாழ்ந்தது கிடையாது.
அதேபோன்றே சிங்கள மக்களின் தென்னிலங்கைச் சூழல்களிலும் சிங்கங்கள் வாழ்ந்ததில்லை. இந் நிலையில் முழு இலங்கைக்கும் பொதுவான ஒரு தேசியக் குறியீடாக தேசிய விலங்காக வடக்கிலும் கிழக்கிலும் தென்னிலங்கையிலும் வாழ்கின்ற சிறுத்தைப் புலியே பொருத்தமான தேர்வாக இருக்கமுடியும்.
இலங்கை அரசாங்கம் எங்களை ஆற்றுப்படுத்துவதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் எங்களது காயங்களுக்கு அபிவிருத்தி என்ற மருந்தைத் தடவலாம் என்று நினைத்தால் அது வெறும் பகற் கனவாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியம் என்பது ஒரு வெற்றுக் கோஷம் அல்ல. இது எமது அரசியல், வாழ்புலம், உணவு, உடை, பண்பாடு என அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு உயிர்ச் சொல். இதனை அற்பசொற்ப சலுகைகளுக்காகச் சிங்களப் பெரும் தேசியவாதத்துக்குள் கரைத்து இல்லாமல் செய்வதற்குத் தமிழ் மக்கள் இனிமேல் ஒருபோதும் உடன்படமாட்டார்கள்.
இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் உரத்துச் சொல்லும்விதமாக நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTaMWjp7.html#sthash.D0I19FmY.dpuf

Geen opmerkingen:

Een reactie posten