சிவில் நிர்வாத்திற்குள், இராணுவத் தலையீடுகள் அதிகரித்து விட்டதான குற்றச்சாட்டு, அதிகரித்துள்ள சூழலில் மற்றொரு முன்னாள் இராணுவ அதிகாரி சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்த மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியே அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2005 ஏப்ரல் 25ம் திகதி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த பின்னர் இவர் பிரதி இராணுவத் தளபதியாகப் பணியாற்றியிருந்தார்.
இவரது தலைமையின் கீழ் தான் மாவிலாறில் நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கப்பட்டது.
இராணுவப் பலனாய்வுத்துறைப் பணிப்பாளராகவும் பதவி வகித்த மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இந்தோனேசியாவுக்கான தூதுவராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.
இப்போது அவர் பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே இந்தப் புதிய அமைச்சை அரசாங்கம் உருவாக்கியது.
இந்தப் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்று காண்பிப்பது தான்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் பிடியில் இருந்து விடுவித்து சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுவரை அரசாங்கம் அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமலே இருந்து வந்தது.
இது குறித்து சில மாதங்களுக்கு முன்னர் கேள்வி எழுந்த போது பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சில் இருந்து பிரிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
திடீரென அரசாங்கம் நவநீதம்பிள்ளை வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பொலிஸ் திணைக்களத்தை தனியாக நிர்வகிப்பதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சை உருவாக்கியதன் மூலம் அதற்கான காரணம் என்ன என்பது அப்பட்டமாகவே தெரிந்தது.
யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணிந்து செயற்படவில்லை என்றும், நவநீதம்பிள்ளையைக் கண்டு பயப்படவில்லை என்றும் அடிக்கடி கூறிக்கொண்ட அரசாங்கம் நவநீதம்பிள்ளையின் வருகைக்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதை மறுக்க முடியாது.
இது அவரை அரசாங்கம் எத்தகைய கண்ணோட்டத்துடன் பார்த்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவியது.
நவநீதம்பிள்ளையை திருப்திப்படுத்துவதன் மூலம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் தனக்குள்ள நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
அதன் ஒரு கட்டமாகவே பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சில் இருந்து விடுவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆனால் அரசாங்கத்தின் துரதிஷ்டம் என்னவென்றால், அரசாங்கத்தின் உள்நோக்கத்தை நவநீதம்பிள்ளை தெளிவாகப் புரிந்து கொண்டது தான்.
இந்த நடவடிக்கை அவரைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை கொழும்பு வந்த மறுநாள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நடத்திய சந்திப்பிலேயே வெளிப்படையாகி விட்டது.
எதற்காக சட்டம் ஒழுங்கு என்ற புதிய அமைச்சை அரசாங்கம் உருவாக்கியது? எதற்காக பொலிஸ் திணைக்களம் நீதியமைச்சின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்று ஹக்கீமிடம் கேட்டிருந்தார் அவர்.
இது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பதிலளித்திருந்த ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களம் கொண்டு வரப்படாதது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு பொலிஸ் திணைக்களத்தை இன்னொரு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருமாறு பரிந்துரை செய்திருக்கவில்லை.
சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவே பரிந்துரை செய்தது. நல்லிணக்க ஆணைக்குழு பொலிஸ் திணைக்களத்தை நீதி அமைச்சின் கீழ் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
பொதுவாக ஜனநாயக நாடுகளில் உள்ளது போன்று நீதி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதையே நவநீதம்பிள்ளையும் மேற்கு நாடுகளும் விரும்புவதாகத் தெரிகிறது.
ஆனால் அரசாங்கமோ மீண்டும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தைக் கொண்டு வந்துள்ளது.
இதனால் பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்துக்கும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் நிர்வாகத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் தெரியவில்லை.
இவற்றை நிர்வகிக்கும் இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் தான் வேறுவேறாக இருக்கப் போகிறதேயன்றி நிர்வாக அணுகுமுறைகளில் எந்த வேறுபாடும் இருக்காது.
இந்த உண்மையை நவநீதம்பிள்ளை புரிந்து கொண்டுள்ளதால் தான் எதற்காக நீதி அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தைக் கொண்டு வரவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
80 ஆயிரம் பேரைக் கொண்டுள்ள பொலிஸ் திணைக்களத்தை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வந்திருந்தாலும் இன்னமும் பொலிஸ் திணைக்களத்தின் சில பகுதிகளின் அதிகாரங்களைப் பங்கிடுவதில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகிறது.
சிறப்பு அதிரடிப்படை பொலிஸ் திணைக்களத்தில் முக்கியமானதொரு பிரிவு. சிவில் கடமைகளில் ஈடுபடும் பொலிஸாரினால் சமாளிக்க முடியாத பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு அமைச்சு அல்லாத அமைச்சின் கீழ் இதனை நிர்வகிக்க அரசாங்க உயர்மட்டம் விரும்புவதாகத் தெரியவில்லை.
எனினும் முதற்கட்ட அதிகாரப் பகிரிவின்போது விசேட அதிரடிப்படை சட்டம் ஒழுங்கு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தாலும் இந்த முடிவில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.
அடுத்து ஸ்ரீலங்கா பொலிஸ் புலனாய்வு அமைப்புக்களை பாதுகாப்பு அமைச்சில் இருந்து சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கும் உடன்பாடு எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
புலனாய்வு அமைப்புக்களின் மீதான கட்டுப்பாட்டை தன்வசம் வைத்திருக்க பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விரும்புவதாகத் தெரிகிறது.
அதுவே பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கு அவசியமானது என்று கோத்தபாய ராஜபக்ச கருதுகிறார். அவ்வாறு பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் பாதுகாப்பு அமைச்சின் வசம் இருந்தால் குற்ற விசாரணைகளில் துப்புத் துலக்குவதில் பாதுகாப்பு அமைச்சால் தடைகளை ஏற்படுத்த முடியும்.
குறிப்பாக மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளில் நடவடிக்கை எடுக்கும் போது பாதுகாப்பு அமைச்சின் தலையீடு நிச்சயம் இருக்கவே செய்யும். இதனை ஐநா மனித உரிமைகள் பேரவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றே தெரிகிறது.
சுதந்திரமான ஒரு அமைப்பாக பொலிஸ் திணைக்களத்தை உருவாக்கும் திட்டத்துக்கு தடையை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நகர்வுகள் சர்வதேச அளவில் அது எதிர்பார்த்த சாதகமான பலனைக் கொடுக்கும் போல6த் தெரியவில்லை.
சுபத்ரா
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWms7.html#sthash.VSgwakKG.dpuf
Geen opmerkingen:
Een reactie posten