இந்திய நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக இலங்கை தொடர்பான விவகாரங்கள் அதிகளவில் எதிரொலிப்பைக் காண முடிகிறது.
மனித உரிமைகள் 13வது திருத்தச்சட்டம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கச்சதீவு தமிழக மீனவர்கள் மீதான நடவடிக்கைகள் கொமன்வெல்த் மாநாடு என்று அடிக்கடி இலங்கை தொட்பான சர்ச்சைகள் இந்திய நாடாளுமன்றத்தில் வெடிக்கின்றன.
இத்தகைய விவாதங்களில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தவிர்ந்த திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் இலங்கை அரசுக்கு எதிரான காட்டமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
சிலவேளைகளில் பாஜக உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தமிழகத்துக்கு அப்பாலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கத் தவறுவதில்லை.
எனினும் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கின்ற களமாக இந்தியா நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுவதை இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை தீ்மானிக்கும் சவுத் புளொக் விரும்பவில்லை என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் முன்வைக்கின்ற கருத்துகள் நடத்தப்படுகின்ற விவாதங்களை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு எவ்வாறு பார்க்கிறது என்பதை அண்மையில் வெளியான ஒரு கடிதமே வெளிக்கொண்டு வந்துள்ளது.
கச்சதீவு விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு முட்டுக்கட்டை போட்டுள்ள விவகாரத்தை இந்தக் கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது.
கச்சதீவை திரும்பப் பெற வேண்டுமென்று தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன் இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி மட்டுமன்றி தமிழகத்திலுள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்களும் கூட கச்சதீவைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசோ அதுபற்றி எதுவுமே கூறுவதில்லை.
நாராயணசாமி போன்ற சில மத்திய அமைச்சர்கள் தமிழக அரசியல் தலைவர்களின் கருத்தை மதித்து கச்சதீவு விவகாரத்தில் மன்மோகன்சிங் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக்கை ஊட்டுவதை மட்டும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
அண்மையில் புதுடில்லி சென்றிருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கச்சதீவு விவகாரம் முடிந்து போன பிரச்சினை அதனை மீள ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பீரிஸின் இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருந்தது.
தமது நாட்டில் வந்து இருந்து கொண்டே திமிராகப் பேசுகிறார் பீரிஸ் என்று பலரும் கொந்தளித்தனர்.
ஆனால் பீரிஸின் இந்தப் பேச்சுக்கு காரணமே இந்திய வெளிவிவகார அமைச்சு தான் என்பது அவர்களில் பலருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
கச்சதீவு விவகாரத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள நிலைப்பாடு இலங்கை அரசுக்கு முற்றிலும் சார்பானது.
தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது என்பதை இது குறித்து எழுதப்பட்ட ஒரு கடிதம் உறுதி செய்துள்ளது.
கச்சதீவு விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தக் கோரி திமுக உறுப்பினர் இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் லிங்கம் ஆகியோர் சபாநாயகர் மீரா குமாரிடம் விண்ணப்பித்திருந்தனர்.
தற்போதைய மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் இந்த விவாதம் நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் கேட்டிருந்தும் அதற்கான எந்த நடவடிக்கையையும் நாடாளுமன்றச் செயலகம் எடுக்கவில்லை.
ஒரு சிறப்பு விவாதம் நடத்த முன்னர் அது சார்ந்த அமைச்சிடம் கருத்துக் கேட்கும் வழக்கப்படி நாடாளுமன்றச் செயலகத்தினால் இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு கடந்த 5ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லா நாடாளுமன்றச் செயலருக்குப் பதில் அனுப்பியிருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் 1974, 1976ம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட இரண்டு உடன்பாடுகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைகள் குறித்து ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்தியா தனது கடல் எல்லைப் பரப்பில் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை என்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்டபடியே எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட போது கச்சதீவு இலங்கை கடற்பரப்புக்குள் சென்று விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமான பகுதி, இந்த விவகாரம் முடிந்து போன ஒன்று. அதை திரும்பவும் மறுபரிசீலனை செய்ய முடியாது.
இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. நெருக்கமான நட்புக் கொண்ட அண்டை நாடாக இலங்கை உள்ள போது கச்சதீவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது ஏற்புடையதல்ல.
அவ்வாறு விவாதம் செய்தால் இரு நாடுகளின் நட்புறவில் மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர்ககையை ஏற்கக்கூடாது என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
கச்சதீவு விவகாரம் முடிந்து போன பிரச்சினை. அதனைத் திருமப ஒப்படைக்க முடியாது என்று புதுடில்லியில் பீரிஸ் கூறியதற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சு தமது நிலைப்பாட்டை விளக்கி எழுதிய கடிதத்தின் உள்ளடக்கத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஜி.எல்.பீரிஸ் புதுடில்லியில் வெளிப்படையாக இதைக் கூறியது போல வெளிவிவகார அமைச்சோ அல்லமு இந்தியப் பிரதமர்“ மன்மோகன் சிங்கோ இதனை வெளிப்படையாகக் கூறவில்லை.
அவ்வாறு கூறும் துணிச்சல் இருந்திருந்தால் கச்சதீவு விவகாரம் கிளம்பிய போதே கூறியிருப்பார்கள்.
எதிர்வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுவதால் அதைப்பற்றி வாய் திறக்கவில்லை.
ஆனால் இலங்கை அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதற்காக கச்சதீவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கே சவுத் புளொக் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்றமே ஜனநாயகத்தின் உயர்ந்த நிலை என்று கூறும் இந்தியாவில் அங்குள்ள ஒருபகுதி மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை வெளிவிவகார அமைச்சு தடுக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பையே ரத்துச் செய்யும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சினால் ஒரு விவாதத்துக்கு தடை போட முடியும் என்பது ஒரு பகுதி மக்களின் ஜனநாயக உரிமையை கேள்விக்குட்படுத்துவதாகவே இருக்கும்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இவ்வாறு நடந்து கொண்டுள்வதற்கு காரணம் இலங்கையுடனான நட்புறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே.
பகிரங்கமாகியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் கடிதம் இலங்கையுடனான நட்புறவை மதிக்க வேண்டும் என்பதற்காக சவுத் புளொக் இவ்வாறு நடந்து கொள்கிறதா? அல்லது இலங்கைக்குப் பயந்து இவ்வாறு செய்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பக் காரணமாகியுள்ளது.
இலங்கையுடன் சீனாவும், பாகிஸ்தானும் வளா்த்துக் கொண்டுள்ள நட்புறவை சவுத் புளொக் கொள்கை வகுப்பாளர்கள் அச்சத்துடன் நோக்குகின்றனர்.
இலங்கை விடயத்தில் பல சமயங்களில் கடும் போக்குடன் நடந்து கொள்வதற்கும் அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கும் சவுத் புளொக் கடுமையாகவே யோசிக்கிறது. பின்நிற்கிறது.
ஏனென்றால் இலங்கைக்கு அதிகளவில் நெருக்குதல் கொடுத்தால் இந்தியாவுடனான உறவுகளை முறித்து விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு வலுவாக உள்ளது.
அதனால் நடபு நாடு அண்டை நாடு என்று கூறி இந்திய வெளிவிவகார அமைச்சு அவ்வப்போது இலங்கையைத் தன்பக்கம் இழுத்துப்போட முனைகிறது.
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்ததன் மூலம் இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக கருதுகின்ற போதிலும் அதனைப் புறக்கணித்து விட்டு சவுத் புளொக் இலங்கை அரசுக்கு சார்பாகவே செயற்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு இப்போதுள்ள ஒரு பிரச்சினை இலங்கையுடன் ஊசலாடும் உறவு அறுந்து போய் விடக்கூடாது என்பதாகவே இருக்கிறதேயன்றி தமிழ்நாட்டின் கவலைகளோ கரிசனைகளோ அல்ல.
இத்தகைய கட்டத்தில் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புற்க்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகிறது.
இந்திய நாடாளுமன்றத்திலும் அது அவ்வப்போது எதிரொலிக்கிறது.
இந்தநிலையில் கச்சதீவு விவகாரத்தில் தமிழ்நாட்டின் கருத்துகளைப் புறந்தள்ளி வைத்துள்ள சவுத் புளொக் கொமன்வெல்த மாநாட்டில் மட்டும் தமிழ்நாட்டின் கவலைகளையும் கோரிக்கைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten