2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப் போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப் போராட்டத்தில் நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும் மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காத மனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள்.
அந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம்.
இன்று எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டு மூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள். அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்தவர்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டு போனார்கள். எங்கள் புறநானூற்றுச் சான்றுகள் இடித்து வீசப்பட்டன.
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின் போது அதில் சிக்கி தப்பித்து வாழும் எனது உண்மைக் கதை இது.
ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த் தவிர்ப்பு வலயப் பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளர் ஆவேன்.
உண்மையில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயங்களிலேயே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத்தாக்குதல்களும் இடம்பெற்றன. பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறியதும் இங்குதான்.
சிறிலங்கா அரசினால் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம், ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன. இந்தப் பிரதேசங்களில் படையினர் அகோரமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டனர்.
இதில் சுதந்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசசார்பற்ற நிறுவனத்தினர் வழங்கிக் கொண்டிருந்த உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக கூடி நின்ற பல நூற்றுக்கணக்கான மக்களை இலக்குவைத்து படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் அவ்விடத்திலேயே கோரமாகப் பலியாகியது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோல இரண்டாவது தடவையாக அரசு அறிவித்த போர்த்தவிர்ப்பு வலயமான மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கக்கூடிய தமிழினப் படுகொலையை அரச படையினர் மேற்கொண்டனர்.
மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள்.
அரச படையினர் கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில் அங்கே நான் பணியாற்றி வந்தேன். மருத்துவமனைகளைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்ற போதிலும் மருத்துவமனைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை இலங்கை இராணுவம் ஒரு போர் உத்தியாகவே கையாண்டது.
வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற போதெல்லாம் சிறிலங்கா சிங்கள இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினர்.
புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்தன. இதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டன.
மருத்துவமனையை நோக்கி தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் கால்களுக்கு அன்ரனா மற்றும் மண்மூட்டைகள் போடப்பட்டு படுக்கையாகக் கிடந்தவர்களின் விடுதி மீது 2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம்வார காலப்பகுதியில் கிபிர் விமானம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதி முற்றாகச் சிதைவடைந்து சுமார் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதும் அவர்களின் சிதைந்த உடலங்களை கட்டட இடிபாடுகளுக்கிடையில் நான்கு ஐந்து நாட்களாக பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்து அடக்கம் செய்ததுவும் இங்கு நினைவுகூரப்படுவது அவசியமானது.
இதேபோன்று 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் மத்தியில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவமனையை இலக்கு வைத்து அரச படையினர் மேற்கொண்ட சரமாரியான எறிகணைத் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் ஸ்தலத்திலேயே துடிதுடித்துப் பலியான துயர்நிறைந்த சம்பவங்களையும் எவரும் எளிதில் மறந்திடமுடியாது.
மருத்துவ உதவியாளர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்ததாலும் பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு உருவாகியிருந்ததாலும் படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்பட்டது. மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களது பாதுகாப்பையும் கருத்திற்கொள்ளாது அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் உடல்கள் காணப்பட்டதால் அப்பகுதி மயான பூமியாக காட்சியளித்தது. இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள்' இயந்திர மனிதர்கள் போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது ஒரேயொரு சத்திரசிகிச்சைக் கூடமே மிகவும் குறைந்த வசதிகளுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தது.
கொத்துக்குண்டுகள்
கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக்குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைந்து அனைத்து திசைகளிலும் சீறிபாயும்.
இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது.சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.
பொஸ்பரஸ் குண்டு
உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வகைக்குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும்.
இந்த வகைக் குண்டுவீசப்பட்டவுடன் அதன் சுவாலை 'தறப்பாலில்' பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாயினர். பொஸ்பரஸ் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் தற்காலிக கூடாரங்கள் மீது படர்ந்து பின் அங்கிருந்த பலரின் உடலிலும் பற்றிக் கொண்டது.
இதனால் மிக மோசமான முறையில் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளாகி பலர் இறந்தார்கள்.
மேற்குறித்த கொத்துக் குண்டுகளும் பொஸ்பரசுக் குண்டுகளும் சர்வதேச போர் விதிமுறைகளின்படி தடைசெய்யப்பட்டவையாகும். அத்துடன் யுத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதை யுத்த வலயத்திற்குள் அகப்பட்டிருந்த மக்கள் நன்கறிவர்.
எறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள்
இரட்டைவாய்க்கால், அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளில் எறிகணை தாங்கிகளின் கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்கள் அகோரமாக நடத்தப்பட்டன. கடும் மழை பெய்துவந்த நிலையில் இத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தமையினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால், புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்புவலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு வந்து பதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணைத் தாக்குதல் மற்றும் எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர கொலை தாண்டவத்தை ஆடியது. இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர்.
கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இனவெறி தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களின் மனித உடலங்கள் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் அடக்கம் செய்யப்பட்டன.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கு சிக்குண்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவ முன்வராது தங்கள் பாதுகாப்பே முக்கியம் என்பதாக ஒதுங்கிக் கொண்டார்கள். பாவம் மக்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
உணவு, குடிநீருக்கு நெருக்கடி
கற்பனையும் செய்ய முடியாத அளவிலான மனிதப் பேரவலத்தைக் காண நேர்ந்தது. எந்த மனிதாபிமான தொண்டு நிறுவனமும் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியாத பாதகமான பாதுகாப்புச் சூழலே உருவாகி இருந்தது. குறுகிய நிலப்பரப்பில் சிக்குண்டுள்ள மக்கள் தமது கைகளாலேயே பதுங்கு குழிகளைத் தோண்டி அவற்றுக்குள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் குடிநீருக்கும் உணவுக்கும் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அந்த மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு சமூகப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பும் தடைப்படாத போக்குவரத்து வசதியும் இல்லை. இப்போதைய நிலைமையிலும் மக்களுக்கு தொண்டாற்ற முனைந்த சமூகப் பணியாளர்கள் என்ற வகையில் சாவின் விளிம்பில் இருந்தும் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.
யுத்தம், ஈவு இரக்கமில்லாது கோரப் பசியோடு தமிழ் உறவுகளின் உயிர்களை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனை ஒருபுறம், ஆனால் குழந்தைகள் பசி பசி என கதறிய அழுகைக் குரல் தான் என்னுள் பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது.
கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம்
துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிறிய குழி ஒன்றுக்குள் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக கூடாரத்துக்கு திரும்பி வந்தேன்.
பல் குழல் எறிகணை வீச்சில் சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள். காப்பாற்றுவதற்காக நிறையவே போராட வேண்டியிருந்தது. கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. ஒருவர் தூரத்தே நிற்பதை பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருக்க ஏக்கப் பார்வையோடு அவர் இருந்த கிடங்கின் அருகில் சென்று பார்த்த பொழுது அதுஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவே காட்சியளித்தது.
ஆங்காங்கே மனிதச் சடலங்கள் குவிக்கப்பட்டு இருந்தமையினால் நாம் காலடி வைக்கும் பொழுது கால்கள் இலகுவில் மண்ணுள் புதையுண்டன. சில கிடங்குகளில் மனிதச் சடலங்கள் அரைகுறையாக எரியூட்டப்பட்டுக் காட்சியளித்தன. உக்கிரத் தாக்குதலின் போது தம்மைப் பாதுகாக்க வேண்டி மக்களால் அவசரமாகத் தோண்டப்பட்ட பாதுகாப்புக் கிடங்குகளினுள் அத்தாக்குதலில் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான மக்களின் சடலங்கள் அங்கேயே புதைக்கப்பட்டன.
தொடர்ந்தும் இழப்புக்களை சந்திக்க முடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம் சரணடைந்தனர். வெட்டுவாய்க்கால் (வட்டுவாகல்) பாலத்தினைச் சரணடைந்த மக்கள் கடந்து சென்ற சந்தர்ப்பத்தில் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.
எல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம் வருமாறு கூறி, அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு குடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்த பின்பு, விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களைப் படையினர் வாகனத்தில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர் அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதைகளின் பின்னர் படுக்கொலை செய்தார்கள்.
மக்களில் கதறல்கள் மற்றும் கெஞ்சல்கள் இராணுவத்தினரின் மனங்களைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்தது. பல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைத் காண அலைந்து திரிந்தார்கள்.
உடற்காயங்கள், உளக்காயங்கள் என்பவற்றுடன், அன்புக்குரியவர்களைக் காணவில்லை என்பது அச்சுறுத்தல்களுக்குக் கீழான அடிமை வாழ்வும் மக்களை மேலும் உறுத்தின.
தமிழர்களின் பாரம்பரிய பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்த பூர்விகக் குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளிச்சிறைக்குள் பணயக் கைதிகளாய் தமிழர்களை சிங்களம் இன்னமும் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைத்திருப்பதும் தமிழர்கள் சொந்த இடங்களிற்கு மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ்நிலை உள்ளது குறிப்பிடதக்கது.
பல நிலங்கள் இராணுவத்தினதும் கடற்படையினதும் உல்லாச விடுதிகளுக்கு என அரசினாலேயே கவரப்பட்டிருப்பது உலகிற்கே இப்போது தெரிந்திருக்கிறது.
இதற்கிடையில், தமிழர்கள் தமது இழந்த உறவுகளுக்காக துக்கம் கொண்டாட முடியாது என்று இராணுவம் அறிவித்திருக்கிறது. ஆனால், தெற்கில் யுத்த வெற்றி விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, புத்த மக்கள் அதிகம் வாழாத தமிழர் பகுதிகளில் வெசாக் தினக் கொண்டாட்டங்களை இராணுவத்தின் முழுமையான ஈடுபாட்டுடன் அரசு செய்கிறது. வெசாக் கூடுகளும் புத்தரின் வாழ்க்கைக் கதைகளைக் காட்டும் கொடிகளும் பதாகைகளுமாக இந்த ஏற்பாடுகள் பரபரக்கின்றன. கூடவே, வாள் ஏந்திய துட்டகைமுனுவின் சிங்கக்கொடிகளும் ஆதிக்கத்தின் அடையாளத்தைக் காட்டி நிற்கின்றன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்து தமிழர்களும், அவர் தம் அமைப்புகளும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம். இது வரலாற்றுக் கடமை!
http://www.tamilwin.com/show-RUmsyFSdLZnoy.html
Geen opmerkingen:
Een reactie posten