தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

ஒழுக்கத்திற்காக உயிரைக் கொடுத்து இரத்தம் சிந்தியது தமிழினம்: மாவை சேனாதிராஜா எம்.பி !



அடிமைகளற்ற வாழ்வே உயர் ஒழுக்கமாக கடைப்பிடித்தவர்கள் எமது தமிழ் மக்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சி மாவடி அம்மன் பிரதேசத்தில் புதிய நூலகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா கலந்துகொள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நாவை.குகராஜா, உறுப்பினர்களான சுவிஸ்கரன், பொன்னம்பலநாதன் சுப்பையா, தவபாலன் உட்பட கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சுரேன், கரைச்சி பிரதேசபையின் செயலாளர், கட்சியின் கிளிநொச்சி கிழக்கு அமைப்பாளரும் பா.உறுப்பினரின் செயலாளருமான பொன்.காந்தன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவகர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்னர்.
இந்த நூலகம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களான சுவிஸ்கரன் செல்லத்துரை சிவச்செல்வன் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 45 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட இருக்கின்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா உரையாற்றுகையில்,
ஒரு அறிவுசார்ந்த விடயத்துக்கான வைபவத்தில் பங்குபற்றுவது மிகுந்த மகிழ்ச்சிக்கு உரியது. வள்ளுவன் சொல்லி இருக்கின்றான். “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று.
இந்த அடிப்படையில் அரை நூற்றாண்டுக்கு முன்பு உலக அறிஞர்கள் கூடி இது பற்றி ஆராய்ந்தனர். உலகத்தில் ஒழுக்கம் வரையறுத்தவற்றை ஆராய்ந்தனர். கடைசியில் ஒழுக்கத்தை பற்றிய சிறந்த வரையறையை வள்ளுவனே வகுத்திருக்கின்றான்.
ஒழுக்கம் நாம் ஆடை அணிவது முதல் உணவுவரை பேசிக்கொள்வோம். ஆனால் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக வரையறுக்கும் வள்ளுவன், ஒழுக்கம் என்பது அடிமைத்தனமற்று வாழ்வதே. அந்த உயரிய ஒழுக்கத்தை பேணிய சமூகமாக நாம் இருக்கின்றோம்.
ஒழுக்கத்திற்காக உயிர்கொடுத்து இரத்தம் சிந்தி சொத்துக்களை சுகங்களை அர்ப்பணித்த இனமாக நாம் இருக்கின்றோம்.
நாம் எமது மொழியை பேசாவிட்டால் நாம் யார், நமது மண் எது, அந்த மண்ணின் பெயர் எது என்று அழைக்க முடியாது. உயரிய ஒழுக்கத்தை பேணவும் முடியாது.
எனவேதான் எமது பண்டைய மக்கள் எமது இனத்துக்கான அடையாளங்களை வரையறுத்து வைத்துள்ளார்கள். நாம் அதை பேண வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்கான ஒரு பெட்டகம்தான் நூலகம்.
நூலகத்தை சுற்றி ஒரு ஆராக்கியமான சூழல் உருவாகும். பாரதி குறிப்பிடுவதுபோல காணிநிலம் வேண்டுவதும் அதில் மாடங்கள் வேண்டுவதும் இந்த உலக்கை வாழ்விக்கும் வகை செய்வதற்கே. அது இங்கு நிகழும் என நம்புகின்றேன் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYko6.html

Geen opmerkingen:

Een reactie posten