தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 december 2012

அவலங்களின் அத்தியாயங்கள்- 47


ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதமும்! இலங்கை-இந்திய ஒப்பந்தமும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 47): நிராஜ் டேவிட்
பேச்சுவார்த்தைக்கு என்று இந்திய அரசால் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்,  அங்கு “அஷோகா ஹோட்டலில்” அடைத்துவைக்கப்பட்டிருந்தது பற்றியும், இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட இருந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது பற்றியும் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருந்தோம்.
புதுடில்லியில், இந்தியாவின் விஷேட கொமாண்டோ பயிற்சி பெற்ற கறுப்புப் பூனை படைப் பிரிவு வீரர்களின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் பூட்டப்பட்ட அறைகளுக்குள் இந்திய பிரதமருக்கும், புலிகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்திருந்த சம்பாஷனைகள் பற்றி அதிகம் வெளியே தெரியச் சந்தர்ப்பம் இல்லை. ஆனால் அங்கு புலிகளின் தலைவர்கள் ஒருவகையில் சிறைக் கைதிகள் போன்று வைக்கப்பட்டார்கள் என்பதற்கான மற்றொரு ஆதாரம் 5 வருடங்களின் பின்னரே வெளியிடப்பட்டது.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி அனுப்பியிருந்த ஒரு இரகசியக் கடிதம் பின்னர் அம்பலமானபோதுதான் இந்த உண்மை வெளிவந்தது.
ராஜீவின் இரகசியக் கடிதம்:
இலங்கை-இந்திய ஒப்பந்தம் இரண்டு நாடுகளின் தலைவர்களாலும் 29.07.1987 அன்று கைச்சாத்திடப்பட்டபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் தலை நகர் புதுடில்லியில் கறுப்புப் பூணைகளின் பாதுகாவலிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
30.07.1987 அன்று இந்தியப் படைகள் அமைதிகாக்கவென்று கூறி ஈழ மண்ணில் கால் பதித்தபோதும், ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் இந்தியாவிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில்லேயே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகவும் அந்தரங்கமான அந்த இரகசியக் கடிதத்தை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.
பிரபாகரன் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு, பிரபாகரன் விடயத்தில் எதிர்காலத்தில் இந்தியா எவ்வாறு நடந்துகொள்ள இருக்கின்றது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக அந்த இரகசியக் கடிதம் அமைந்திருந்தது.
ளுழுருவுர் SOUTH ASIAN NETWORK ON CONFLICT RESEARCH (SANCOR) என்ற அமைப்பு 1993ம் ஆண்டு கொழும்பில் வெளியிட்ட மிகவும் பிரபல்யமான ஆய்வு நூலான “ஸ்ரீலங்காவில் இந்திய தலையீடும், அதில் இந்திய உளவு அமைப்பு வகித்த பங்கும்” (INDIAN INVATION IN SRI-LANKA –THE ROLE OF INDIA’S INTELLIGENCE) என்ற நூலில் வெளியிடப்பட்டிருந்த அந்த இரகசியக் கடிதத்தில் காணப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
1. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அமைய இருக்கும் இடைக்கால நிர்வாக சபைக்கு எப்படியான பணிகள் இருக்கும் என்பது பற்றி தீக்ஷித் மூலம் 01.08.1987 அன்று அறிவித்திருந்தேன். ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடியதான தொழில் வசதிகள் பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தீக்ஷித் அறிவித்தபோது, அதற்குப் பிரபாகரன்:
அ) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆ) ஆயுதங்களை ஒப்படைக்கச் சம்மதம் தொவித்துள்ளார்.
இ) ஆயுதங்களை ஒப்படைக்கும்போது அவரும் யாழ்பாணத்தில் இருந்து ஆயுத ஒப்படைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகின்றார்.
2) ஒப்பந்தத்தை நல்லமுறையிலும், அமைதியான முறையிலும்  நடைமுறைப்படுத்தப்படுவதைக் கருத்தில்கொண்டு, பிரபாகரன் ஆகஸ்ட் 2ம் திகதி யாழ்பாணம் கொண்டுவரப்படுவார். இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட பின்வரும் அட்டவணைப்படி ஆயுதங்களை ஒப்படைக்க பிரபாகரன் சம்மதித்துள்ளார்.
02.08.1987-மாலை: பிரபாகரனின் யாழ் வருகை.
03.08.1987: இந்தியப் படைகள் யாழ் நகர் உட்பட குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நிலைகொள்ளும்.
03.07.1987- நன்பகல்: ஆகஸ்ட் 4ம் திகதி மாலை 6மணிக்கு முன்னர் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்துவிடுவார்கள் என்பதை முறைப்படி இந்தியத் தூதருக்கு அறிவிக்கும். இச் செய்தி பகிரங்கமாக வெளியிடப்படும்.
04.07.1987, 05.07.1987: புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள். இது பத்திரிகைகளிலும்,  தொலைக்காட்சி ஊடகங்களிலும் காண்பிக்கப்படும்.
05.07.1987: வடக்கு கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால சபை அமைக்கப்படும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவிக்கவேண்டும். இதுபற்றிய விடயங்கள் இந்திய அரசுடன் பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
3) பிரபாகரன் கொடுத்த வாக்கையும் மீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் புலிகளிடமுள்ள ஆயுதங்களை இந்தியப்படையினர் பலவந்தமாக களைவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
4) ஆகஸ்ட் 3ம் திகதி முதல் 5ம் திகதிவரை ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படவேண்டுமானால் மேலும் 48 மணி நேரம் நீடிக்கப்படலாம். போர் நிறுத்தம் இந்தியப்படைகளால் கண்காணிக்கப்படும்.
அந்தக் கடிதத்தில் காணப்பட்ட சில முக்கிய விடயங்கள் இவைதான்.
இந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், இந்தக் கடிதத்திலுள்ள விடயங்கள் பற்றி கருத்துத் தெரிவித்த ஆய்வாளர்கள், “இந்தியா புலிகள் விடயத்தில் கடும் போக்குடன் நடந்துகொண்டதும், புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது பிடியில் உள்ள ஒருவர் போன்று ராஜீவ் கருதிச் செயற்பட்டதும் இக்கடிதத்தின் மூலம் தெளிவாக வெளித்தெரிவதாகத் குறிப்பிட்டிருந்தார்கள்.
தமது அழைப்பை ஏற்று இந்தியா சென்றிருந்த ஒரு இனத்தின் தலைவரை தம்மிடம் உள்ள ஒரு கைதி போன்று இந்தியப் பிரதமர் கருதி செயற்பட்டதுதான், பின்னாட்களில் பல விபரீதங்கள் இடம்பெறக் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காண்பித்துள்ளார்கள்.
“ரோ” வை இனி நம்பமாட்டேன்- பிரபாகரன்.
இதேபோன்று, புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவில் இருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் எப்படியான நிலையில் காணப்பட்டார் என்பது பற்றி, தென் இந்தியாவின் இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பின்நாட்களில் நினைவு கூர்ந்திருந்தார்.
இலங்கைக்கான இந்தியப் படைகளின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் அப்பொழுது பொறுப்பாக இருந்த திபீந்தர் சிங்கை, இந்தியாவில் பிரபாகரன் சந்தித்திருந்தார். அஷோக்கா ஹோட்டலில் பிரபாகரன் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அவர் இலங்கைக் மீண்டும் கொண்டுசெல்லப்பட முன்னதாக, சென்னையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பிரபாகரனுடனான தனது சந்திப்புப் பற்றி IPKF in SriLanka என்ற தலைப்பில் 1992 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலில் இவ்வாறு நினைவுகூறுகின்றார்.
“என்றுடைய அணுபவத்தில் பிரபாகரனுடனான சந்திப்பு நான் மிகவும் விரும்பிய ஒரு விடயமாகவே இருந்தது. அப்பொழுது நான் தங்கியிருந்த சென்னையின் பிராந்திய இராணுவ தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினருக்கான பகுதியில் பிரபாகரனை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மொழிபெயர்ப்பு செய்வதற்காக யோகரெட்ணம் யோகி மற்றும் வேறு இரண்டு போராளிகளுடன் பிரபாகரன் அங்கு வருகைதந்தார். அவர் எனது அறைக்குள் நுளைவதற்கு முன்னர் தனது காலில் இருந்த பாத அணிகளை அறையின் வாசலில் கழட்டிவிட்டே அறைக்குள் பிரவேசித்தார்.
நீளமான காற்சட்டையும், வெளியில் விடப்பட்ட மேற்சட்டையும் அணிந்திருந்த அவர் அதிகம் உயரமில்லாதவராகவும் அனால் மிகவும் திடகாத்திரமானவராகவும் உறுதியான உடற்கட்டை கொண்டவராகவும் காட்சி தந்தார். அவரது முகம் கடுமையானதாகவும், உறுதியானதாகவும் அதேவேளை சாந்தமான தோற்றத்தைக் கொண்டதாக காணப்பட்டது.
இக்காலகட்டத்தில் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு மாபெரும் “இரட்சகராக” கருதப்பட்ட பிரபாகரனைப் பற்றி வெளியாகியிருந்த பல சாகசக் கதைகளில் சில உண்மையானதாகவும், பல மிகைப்படுத்தப்பட்டதாகவே இருந்தன.தேநீர் அருந்தியபடி அவர் பேசியபோது, இந்தியாவின் வற்புறுத்தலின் பெயரிலேயே தாம் ஸ்ரீலங்கா அரசுடனான யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டி ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் யுத்தத்தினாலும், பொருளாதார தடைகளினாலும் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட பாரிய கஷ்டங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன்தான் இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான இந்த அழுத்தத்தை பிரயோகிக்கவேண்டி இருந்தது என்று நான் பிரபாகரணுக்கு விளக்கினேன். அதற்கு பிரபாகரன் பலமாக தலையை அசைத்து அதனை மறுத்தார்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரன் உண்மையிலேயே புதுடில்லியில் வீட்டுக்காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்துவதற்கோ அல்லது மறுப்பதற்கோ நாங்கள் இரண்டு தரப்பினருமே நினைக்கவில்லை. இப்படியான பல சம்பாஷனைகளின் பின்னர், இறுதியாக கருத்து தெரிவித்த பிரபாகரன்,
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சையோ அல்லது “ரோ” புலனாய்வு பிரிவையோ தாம் இனி ஒரு போதும் நம்பப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். இவ்வாறு லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பிரபாகரனுடனான தனது சந்திப்புப் பற்றி நினைவு கூர்ந்திருந்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம்- இந்தியாவின் நற்பெயருக்குத் தோண்டப்பட்ட படுகுழி
ஈழ மண்ணில் இருந்துகொண்டு ஸ்ரீலங்கா படைகளுடனான போருக்கு தனித்து முகம்கொடுத்துக் கொண்டிருந்த ஒரே விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்,  ஈழமண்ணில் இருந்து இந்தியாவினால் அபகரித்துச் செல்லப்பட்ட நிலையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஈழத்தமிழர்களின் ஒரே தலைவனாக அப்பொழுது இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனை நயவஞ்சகமாக அழைத்துச்சென்று இந்தியாவில் தடுத்துவைத்துவிட்டு, ஈழத்தமிழர்களைக் காப்பாற்றவெனக்கூறி ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்தார்.
1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி காலை 11மணிக்கு இலங்கை கட்டுநாயக்கா விமாண நிலையத்தில் வந்திறங்கிய ராஜீவ் காந்தி, அன்று பிற்பகல் 3.37 மணிக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். எதிர்காலத்தில் இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு மிகப்பெரிய அவப்பெயரைப் பெற்றுக்கொடுக்க இருக்கின்ற ஒரு ஒப்பந்தத்தில் தான் கைச்சாத்திடுகின்றேன் என்றும் அப்பொழுது ராஜீவ்காந்தி நினைத்திருக்கமாட்டார்.
ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை, அவர்களின் அரசியல் இருப்பை குழிதோண்டிப் புதைத்துவிடக் கூடியதான இந்த ஒப்பந்தம், ஸ்ரீலங்காவினதும், இந்தியாவினதும் தேசிய மற்றும் கேந்திர நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவின் கேந்திர நலனை மட்டுமல்ல தனது உயிரைக்கூட பறித்துவிடக்கூடியதாக இந்த ஒப்பந்தம் அமைந்துவிடும் என்பதை பிரதமர் ராஜீவ் காந்தி அப்பபொழுது எண்ணியிருக்கமாட்டார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் நற்பெயருக்கு தோண்டப்பட்ட ஒரு பாரிய படுகுழி என்பதையும் எவருமே அப்பொழுது உணர்ந்துகொள்ளவில்லை.
nirajdavid@bluewin.ch
( தொடரும்..)

  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-24
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-25
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-26
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-27
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-28
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-29
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-30
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-31
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-32
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-33
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-34
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-35
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-36
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-37
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-38
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-39
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-40
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-41
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-42
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-43
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-44
    அவலங்களின் அத்தியாயங்கள் பாகம் -45 
    அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்- 46
  • (அவலங்களின் அத்தியாயங்கள்- 47
  • Geen opmerkingen:

    Een reactie posten