தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 december 2012

இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு !!


விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் 2009ல் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை இராணுவம் ஆண்டுதோறும் பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தி வருகிறது. பல்வேறு சிக்கல்கள், சர்ச்சைகள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில் தான் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு இடம்பெற்று வருகிறது.

போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவத்தின் கருத்தரங்கில் பங்கேற்கக்கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்புவது வழக்கம்.

இலங்கை 
இராணுவத்தைப் போலவே இலங்கை கடற்படையும் பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தி வருகிறது.

காலி கலந்துரையாடல் என்ற பெயரில் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரங்கு இம்முறை மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் இராணுவம் எதிர்கொள்வதைப் போன்று சர்ச்சைகள், சிக்கல்களை இலங்கைக் கடற்படை எதிர்கொள்வதில்லை.

அதற்கு முக்கிய காரணம் இலங்கையின் புவிசார் அமைவிடம் தான்.

இந்து சமுத்திரத்தில் யாராலும் தவிர்க்க இயலாத ஒரு புள்ளியில் இலங்கை அமைந்துள்ளதால் இலங்கைக் கடற்படையின் இந்தக் கருத்தரங்கை பிறநாடுகள் அதிகம் விமர்சிப்பதில்லை.

மனிதஉரிமை மீறல் விவகாரங்ளில் இலங்கையுடன் கடுமையாக மோதிக்கொள்ளும் நாடுகள் கூட இலங்கைக் கடற்படையை வலுப்படுத்தவும் அதனுடன் இணைந்து செயற்படவும் தயாராக உள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தனியான அமைப்பாக செயற்படுமானால் கடலோரக் காவற்படைக்கு பெருமளவு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் என்று அண்மையில் இலங்கைக் கடலோரக் காவற்படையின் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

தற்போது இலங்கைக் கடற்படையின் ஒரு குழந்தையாகவே பார்க்கப்படும் கடலோரக் காவற்படையை வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்காக தனியான அமைப்பாக உருவாக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிடக் கூடும்.

அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் இலங்கையின் கடலோரக் காவற்படைக்கு படகுகள் போன்ற உதவிகளை வழங்கத் தயாராக உள்ளன. ஒரு பக்கத்தில் இலங்கை இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வலியுறுத்தினாலும் இந்த நாடுகள் கடற்படை சார்ந்த விடயங்களில் இலங்கையுடன் ஒத்துழைக்கவே விரும்புகின்றன.

இதனால்தான் கடற்படையினால் காலிக் கருத்தரங்கை சர்ச்சைகளின்றி நடத்த முடிகிறது.

கடந்தவாரம் காலிக் கருத்தரங்கில் உரையாற்றிய இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்து சீனாவின் வலைக்குள் அவர் எந்தளவுக்குச் சிக்கியுள்ளார் என்பதை வெளிப்படுத்தியது.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீட்டை முற்றிலும் நியாயப்படுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தமை இராஜதந்திர மட்டங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில் சீனாவுக்காக பரிந்து பேசிவிட்டு சீனாவுடன் இலங்கை அணி சேரவில்லை என்றும் தொடர்ந்தும் அணிசேராக் கொள்கையையே இலங்கை கடைப்பிடிப்பதாகவும் அவர் கூறியிருப்பதுதான் வேடிக்கை.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனத் தலையீட்டுக்கான அடிப்படைக் காரணங்களை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விரிவாக விளக்கியிருந்தார்.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்த பின்னர் தான் இங்கு பதற்றம் தீவிரமடையத் தொடங்கியது.

ஆனால் அதைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சீனாவின் எண்ணெய் விநியோகப் பாதையின் பாதுகாப்புக்கான நகர்வாக நியாயப்படுத்தியுள்ளது தான் உச்சக்கட்ட நகைச்சுவை.

ஏனென்றால் இந்து சமுத்திரத்தில் சீனா தனது படை வலிமையையும் பொருளாதார வலுவையும் ஒன்று குவித்து வருவதற்குக் காரணம் தனியே மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகத்தை உறுதிசெய்து கொள்வதற்காக மட்டுமல்ல.

சீனாவின் படை வலிமையை உறுதிசெய்து கொள்வதற்கும் தனது முதன்மை எதிரியான இந்தியாவை சுற்றிவளைப்பதற்கும் தான் சீனா இவ்வாறு செயற்படுகிறது என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

அதைவிட இந்து சமுத்திரத்தில் வலுவாக காலூன்றியுள்ள அமெரிக்க கடற்படைக்கும் சவால் விடுவதுதான் சீனாவின் நோக்கம்.

அதனால் தான் சீனா தன்னிடமுள்ள அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட ஒரே விமானந்தாங்கிப் போர்க்கப்பலைக் கூட இந்து சமுத்திரத்தில் நிறுதத்த் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டது போன்று சீனாவின் எண்ணெய்த தேவை அதிகரித்து வருவது உண்மையே.

1985ம் ஆண்டில் 20 மில்லியன் தொன் பரல் எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நிலையில் இருந்தது சீனா.

ஆனால் 2010ம் ஆண்டில் தனது எண்ணெய்த தேவையான 455 மில்லியன் தொன்னில் 200 மில்லியன் தொன்னை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தது.

அதிகரித்த சனத்தொகை மற்றும் தொழில் வளர்ச்சி என்பவற்றினால் 1993ம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி தேவையை விடக் குறைந்து போனது. இதன் பின்னர் சீனா பிறநாடுகளை நம்பவேண்டிய நிலைக்குள்ளானது.

ஆனால் மத்திய கிழக்கில் இருந்து சீனா முழுமையான எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ளவில்லை. மத்திய கிழக்கின் எண்ணெயை அது முழுமையாக நிரந்தரமானதாக நம்பவும் இல்லை.

மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, சீனாவின் கடற்பாதை இந்து சமுத்திரம் வழியாகவே உள்ளதால் அதிகம் செலவு ஏற்படுகிறது.

மத்திய கிழக்கு நெருக்கடிகளாலும் சீனாவுக்குத் தலைவலி அதிகம். இதனால் சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் அரைப்பங்கையே மத்திய கிழக்கு ஈடு செய்கின்றது.

எண்ணெய் தேவைக்காக சீனா தற்போது மாற்றுவழிகளை நாடத் தொடங்கியுள்ளது.

ரஷ்யாவில் இருந்தும் பிற மத்திய ஆசிய நாடுகளில் இருந்தும் போதியளவு எண்ணெய்யை இறக்குதி செய்யக்கூடிய நிலை உள்ளதால் குழாய் வழியாக அவற்றைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறது.

அதைவிட தென் சீனக்கடல், வியட்நாம், மியன்மார், இந்தோனேசியா போன்ற நாடுகளிடம் இருந்தும் இந்த நாடுகளின் எண்ணெய் வயல்களில் இருந்தும் தனது எண்ணெய் தேவையை நிறைவு செய்வதற்கே சீனா முனைகிறது.

அதைவிட மத்திய கிழக்கில் இருந்து தரை வழியாக எண்ணெய் இறக்குமதி செய்யும் திட்டமும் சீனாவுக்கு உள்ளது.

ஆப்கானிஸ்தானுடன் உள்ள ஒடுங்கலான எல்லையும் ஆப்கானுடன் ஈரான் கொண்டுள்ள நெடிய எல்லையும் இதற்கு வசதிஜயானது. இதனை மனதில் வைத்துத் தான் அமெரிக்கா வெளியேற முன்னதாகவே ஆப்கானிஸ்தானின் உள்ளக அபிவிருத்திக்காக நிதியுதவிகளை கொட்டத் தொடங்கியுள்ளது சீனா.

இந்தநிலையில் மத்திய கிழக்கின் எண்ணெய் விநியோகப் பாதையை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்து சமுத்திரத்தில் சீனா காலூன்றுவதான தோற்றப்பாட்டை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்த முயன்றுள்ளது. அதுவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளது வியப்பானது.

அமெரிக்க இந்திய கடற்படைகளின் மூத்த தளபதிகள் மத்தியிலேயெ அவர் இந்தக் கருத்தை வெளியிட்டள்ளார்.

சீனாவின் படை மற்றும் பொருளாதாரத் தலையீட்டை இந்தியாவும், அமெரிக்காவும் சந்தேகத்துடன் பார்ப்பதாக அவர் கூறியுள்ளதை இந்த நாடுகள் நிச்சயம் ரசிக்கப் போவதில்லை.

இந்து சமுத்தரத்தைக் குறிவைத்து அதுவும் இந்தியாவைக் குறிவைத்து சீனா விரித்துவரும் முத்துமாலை வியூகத்தை சீனாவின் கடல் கடந்த முதலீடுகளாக வர்ணித்துள்ளார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் நிதியுடன் துறைமுகங்கள் ஏற்படுத்தப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றும் அது தனக்கு எதிராக விரிக்கப்படும் வலை என்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் இந்தக் கவலை உண்மையானதே.

ஏனென்றால் பாகிஸ்தானில் குவாடர், மாலைதீவில் மாராவோ, பங்களாதேஷில் சிட்டகொங், மியன்மாரில் சிட்வே ஆகிய துறைமுகங்களை கட்டி அல்லது நவீன மயப்படுத்தி அதனூடாக தனது நலன்களை கடம்டியெழுப்பும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

தன்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்படுவதை எந்த நாடுமே விரும்பாது. அச்சத்துடன் தான் பார்க்கும். இந்தியாவும் அதே கண்ணோட்டத்துடன் தான பார்க்கிறது.

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்து சமுத்திரத்தில் சீனாவின் இராணுவ, பொருளாதார தலையீட்டை நியாயப்படுத்த முயன்றுள்ளதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, உலகின் மூன்று வல்லரசுகளுக்கு மத்தியில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நடந்து வரும் பனிப் போருக்குள் தாம் அகப்பட்டு நசிபடுவதை இலங்கை விரும்பவில்லை.

இந்தியா, சீனா, அமெரிக்கா அகிய நாடுகளுக்கு மத்தியில் ஓடி ஓடி இலங்கை களைத்துப் போய்விட்டது.

அடுத்தது, இலங்கை அணி சேராமல் உள்ளது, அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவின் முத்துமாலை வியூகத்தில் இல்லை என்று நியாயப்படுத்துவது.

ஆனால் இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீட்டை எண்ணெய் பாதைக்கான பாதுகாப்புக்கு என்று நியாயப்படுத்திக்கொண்டே, அம்பாந்தோட்டைத் துறைமுகம் மட்டும் அதில் இருந்து விதிவிலக்கானது என்று அவர் கூறத் தலைப்பட்டது பொருத்தமற்றது.

அதைவிட இந்தியா, சீனா போன்ற முக்கியமான நாடுகளின் தளபதிகள் மத்தியிலேயே, சீனத் தலையீட்டை முற்றிலும் நியாயப்படுத்திக் கொண்டே இலங்கை அணி சேராமல் நிற்கிறது என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளது மிகப்பெரிய முரண்.

Geen opmerkingen:

Een reactie posten