தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 december 2012

தான்தோன்றித் தனமாக உளறும் அனலை நிதிஸ் ச. குமாரன்,யார் கேட்பார் என்ற அலட்சியம்!!



2009 january இல் பிபிசி தமிழில் பேட்டி அளித்த அரசியல் பொறுப்பாளர் நடேசர் மட்டும் புலித்தேவன் தலைவரால் கேபி வெளிநாட்டுப்பிரிவுகளுக்கு பொறுப்பாக நியமித்துள்ளதாக அறிவித்தனர்,அதனை நானும் கேட்டுள்ளேன்,ஆகவே அனலை தலைவரில் சந்தேகம் கொள்ளாமல் மற்றவர்களை குற்றவாளிகள் என்பது தலைவரை மறைமுகமாக கோழை என்பதாகவும் தலைவர் கேபிக்கு அஞ்சியே பதவி கொடுத்தாஆர் என்பதாகவுமே அமைத்துள்ளது.இதைவிட பிரபாகரன் துரோகி என்றிருக்கலாம்,கேபி க்கு அதிகாரம் கொடுத்தான் அவரோடு ஒத்துழைக்காத காஸ்ரோ,நெடியவன் அனலை பார்வையில் நல்லவர்கள் என்றால் அனலை யார்??பிரபாகரனுக்கு மதிபளிக்காத அனலை எப்படி புலிகளின் ஆதரவாளர்??புரியவில்லை மக்களே!!

 கனடாவுக்குள் ஏதிலியெனப் புகலிடம் தேடிய ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்க்கு சமீபத்தில் ஒரு பேட்டியை விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசத் தொடர்பாளராக இருந்த கே.பி என்கிற குமரன் பத்மநாதன் வழங்கியிருந்தார்.
இப்பேட்டியில் தான் தோன்றித்தனமாக தமிழீழ விடுதலை குறித்தும் அதற்காகப் போராடிய போராளிகள் குறித்தும் கே.பி. உளறி இருக்கிறார்.
பத்திரிகையாளர் ஜெயராஜ் சில தசாப்தங்களாகவே தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதுடன், சிறிலங்காவின் மறைமுக தூதுவராகவே கனடாவில் இயங்கி வருகிறார். கே.பி. கைது செய்யப்படுவதற்கு முன்னரே நல்லதொரு உறவை ஜெயராஜ் கே.பியுடன் பேணி வருகிறார்.
தாய்லாந்தில் வசித்து வந்த கே.ரி.ராஜசிங்கம் போன்ற தமிழர்களைப் போன்றே ஜெயராஜும் தன்னால் இயன்ற அளவில் ஈழத் தமிழருக்கு எதிராகவும் சிங்களத்துக்கு ஆதரவாகவும் பிரசாரத்தைச் செய்து வருகிறார். இவர்களைப் போன்ற பல எட்டப்பர்களைப் பாவித்தே புலம்பெயர் ஈழத் தமிழர் மத்தியில் பொய்ப் பிரசாரங்களைச் செய்வதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாசகார வேலைகளைச் செய்து வந்தது சிங்களம்.
கே.பியை முன்னிலைப்படுத்தி பல உலக ஊடகங்கள் பேட்டி எடுத்தமைக்கு ஜெயராஜே காரணமாக இருந்தார். தமது சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் இவர்கள் போன்ற எட்டப்பர்கள் கூறும் பொய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இது போன்ற கட்டுரைகளை எழுதுவது தேவையற்ற ஒன்றாக இருப்பினும், இவர்களின் பொய்களை வெளிக்கொண்டு வரும் வகையில் சில பதிவுகளை மேற்கொள்வதன் மூலமாக இன்னும் பல தகவல்களை அறியாமல் இருக்கும் மக்கள் அறிய உதவியாக இருக்கும் என்கிற காரணத்தினாலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது.
இது போன்ற கட்டுரைகளைப் படித்தாவது கே.பி., ஜெயராஜ், ராஜசிங்கம் போன்ற எட்டப்பர்கள் திருந்துவார்களோ திருந்தமாட்டர்களோ என்பது முக்கியம் அல்ல. இவற்றை வாசிக்கும் மக்கள் சிந்தித்துச் செயலாற்றுவார்கள் என்று எண்ணுகிறோம். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்து மக்களை மென்மேலும் முட்டாள்களாக்க முயற்சிகளைச் செய்வது பத்திரிகை தர்மம் அல்ல என்பதனைச் சிங்கள அரசின் எடுபிடிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஈழப் போராளிகளின் போராட்டத்தின் பின்னர் அவர்களைக் குறை சொல்லியே ஏதிலி அந்தஸ்தைப் பெற்ற ஜெயராஜ் போன்றவர்கள் உண்மைக்குப் புறம்பாகச் செயற்படுவது சிறப்பான அம்சம் அல்ல. மானிட தர்மத்துக்கே செய்யும் துரோகம்.
பதவிக்கு ஆசைப்பட்ட கே.பி.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு தானே பொறுப்பு என்று மார்தட்டிய கே.பி., பின்னர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று பிரகடனப்படுத்தினார். 2002-இல் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்தார்.
2003-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், ஆனால் தொலைவிலிருந்து கள நிலைமைகளைப் பார்த்து வந்ததாகவும் கூறியுள்ளார் கே.பி.
எதற்காக இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்கிற காரணத்தை இவர் கூறவில்லை. பத்திரிகையாளர் ஜெயராஜும் இது சம்பந்தமாகக் கேள்வி எழுப்பவில்லை.
கே.பி. மேலும் கூறுகையில்,
“2008-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினேன். 2008-ஆம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னைச் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார். 2008-ஆம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன.”
“புத்தாண்டு பிறந்தபோது இராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டுப் பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது.
எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயற்பாடுகளைச் சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காகத் தொடர்பு கொண்டிருந்தேன்"என்றும் கே.பி. கூறினார்.
பதவி விலக்கப்பட்ட ஒருவரை விடுதலைப் புலிகளின் தலைவர் மீண்டும் இயக்கத்தில் இணைத்திருந்தால், அவருக்கு அதிக பொறுப்புக்களுடைய பதவியை அவர் கொடுத்திருக்க மாட்டார். கே.பியின் தகவலின்படி தன்னை விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்க தலைவர் ஒப்புக்கொண்டார் என்றே கூறியுள்ளார். இதிலிருந்து கே.பி. வலுக்கட்டாயமாகவே இப் பதவியைப் பெற்றார் என்பதனை ஊர்ஜிதப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே விடுதலைப் புலிகளின் வலையமைப்புக்கள் அனைத்தும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், எதற்காக இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டவருக்கு முக்கிய பதவி ஒன்றைத் தலைவர் அளித்தார் என்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
உயர் பதவி ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளவே நான்காம் கட்ட ஈழப் போரின் இறுதியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க கே.பியும் இணைந்தே செயலாற்றி இருக்கிறார் என்கிற ஐயப்பாடே தற்போது பரவலாக இருக்கிறது. இவருடைய பேட்டியும் இதனையே உறுதிப்படுத்துகிறது. பதவி ஆசையில் தமிழீழப் போராட்டத்தையே மழுங்கடித்த பெருமை கே.பியையும் சாரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நோர்வேக்கு சான்றிதழ் கொடுக்கும் கே.பி.
நோர்வேயின் பங்கு என்ன என்கிற கேள்விக்கு, கே.பியின் பதில் நோர்வேக்கு நற்சான்றிதழ் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. இது குறித்து கே.பி. கூறும் போது “நோர்வே யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு.
நோர்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நோர்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினர்."
ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச வந்தவுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இரட்டிப்பாக்கினார். விடுதலைப் புலிகளுடன் ரணில் அரசு செய்த சமாதான ஒப்பந்தத்தை இல்லாதொழித்தார். ஸ்கண்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டார்.
பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், மனித உரிமை அமைப்புக்களின் ஊழியர்கள் எனப் பலர் கொலை செய்யப்பட்டனர். பலர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இக் கொடுமைகளை நிறுத்த நோர்வேயினால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது என்பதே உண்மை.
திருகோணமலையின் முக்கிய பகுதிகளைச் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினார்கள் விடுதலைப் புலிகள். உடனேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான கண்டனங்கள் சர்வதேச நாடுகளிடம் இருந்தும், மத்தியஸ்த நாடான நோர்வேயிடம் இருந்தும் வந்தது.
விடுதலைப் புலிகளின் தலைமை உடனேயே கைப்பற்றிய இடங்களை விட்டு தளம் திரும்புமாறு விடுதலைப் போராளிகளுக்குக் கட்டளையிட்டது. ஆக விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தின் சரத்துக்களை மீறினால் குற்றம், ஆனால் சிங்களம் குறித்த சரத்துக்களை மீறினாலோ அல்லது கிழித்து எறிந்தாலோ குற்றம் இல்லை என்கிற வாதத்தையே நோர்வே அப்போது ஏற்றுக் கொண்டது.
மத்தியஸ்தம் வகிக்க முக்கிய தகமைகள் இருக்க வேண்டும். இத் தகமைகளுக்குப் பொருத்தம் இல்லாத நாடாகவே நோர்வே செயற்பட்டது. இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களே நோர்வேயின் குறித்த செயற்பாடுகளுக்குக் காரணமாக இருந்தது.
கே.பி. சொல்வதொன்றும் தானாகக் கூறுவது என்று கூறிவிட முடியாது. இந்தியாவின் முக்கிய கொள்கை வகுப்பாளர்கள் எழுதிக் கொடுக்க அதனை ஜெயராஜ் கே.பியுடன் கலந்து ஆலோசித்த பின்னரே வெளி வந்திருக்கும் பேட்டியென்றே இதனைக் கூற வேண்டும்.
கோலாலம்பூரில் இருக்கும் ஹில்டன் ஹோட்டலில் ஒரு கூட்டத்தை நோர்வே கூட்டியது என்று கூறும் கே.பி., யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். அத்துடன் பொதுமக்களின் நிலைமையைக் கண்ணீர் மல்க எடுத்துக் கூறி, அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நோர்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன் எனக் கூறியுள்ளார் கேபி. இதற்கு அப்போது சிறிலங்காவுக்கான நோர்வே தூதர் ஹட்ரம் யுத்த களத்தின் உண்மை நிலவரத்தைத் தங்களிடம் தெரிவித்ததாக் கூறியுள்ளார்.
அக் கூட்டத்தில் ஹட்ரம் கூறியதாக கே.பி. கூறியுள்ளதாவது, “சிறிலங்காவின் இராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது. சாலைப் பகுதியில் 55-ஆவது பிரிவு, விசுவமடுவில் 57-ஆவது பிரிவு, தேவிபுரத்தில் 58-ஆவது பிரிவு, முல்லைத்தீவு நகரில் 59-ஆவது பிரிவு நிலை கொண்டிருக்கிறது.
சிறப்புப் படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது. விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டைப் பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர்.”
“புலிகளை அழிக்க சிறிது காலம்தான் இராணுவத்துக்குத் தேவை. அதனால் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி. மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர்.
நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும்" என்று நோர்வேயின் தூதுவர் கூறியதாக கே.பி. கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக கே.பி. விசுவாசமாக செயற்பட்டிருந்தால் நிச்சயமாகப் போரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். போரைத் தடுப்பதற்குப் பதில் போரை முடிக்கவே கே.பிக்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்தது என்பதனை கே.பியே மறைமுகமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
விடுதலைப் புலிகளைச் சரணடையச் செய்வதே யுத்தத்தை முடிக்க ஒரே வழி என்கிற நிலைப்பாட்டையே சர்வதேசம் வைத்திருந்தது. யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகளின் படையணிகள் சென்றபோது பின்வாங்கப் பணித்தது சர்வதேசம் குறிப்பாக இந்தியாவின் அதீத பங்களிப்பு இதில் இருந்தது.
கச்சிதமாக அனைவரும் இணைந்து அரங்கேற்றிய நாடகம் பல்லாயிரம் மக்களைக் காவு கொண்டதுடன் தமிழினம் இன்று சிங்களத்தின் முற்றுகைக்குள் வாழ வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமான கள நிலவரம்.
இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் தொடரும்....

http://news.lankasri.com/show-RUmqzCTYNUixy.html

Geen opmerkingen:

Een reactie posten