தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 december 2011

தனி ஈழம், தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தூண்டிவிடும் என்பது அபத்தம்!- 1986ல் புலிகளின் தலைவர் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வியின் தொடர்ச்சி

[ சனிக்கிழமை, 03 டிசெம்பர் 2011, 03:18.23 AM GMT ]
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொரில்லா யுத்தத்தில் ஈடுபடும்போது சிங்கள இராணு​வத்​​​தினரிடம் சிக்கிக்கொண்டால், ஒரு சிறு தகவலைக்கூட அவர்களிடம் இருந்து கறந்துவிட முடியாது.
காரணம், ஒவ்வொரு வீரரும் தன்கூடவே கொடிய விஷமான சயனைட் நிரப்பப்பட்ட சிறு குப்பி ஒன்றை வைத்திருக்கிறார். தப்ப முடியாத, நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், உடனே அந்தக் குப்பியைக் கடித்து விஷத்தை விழுங்கி உயிர்த் தியாகம் செய்துவிடுவார்கள்!
இப்படி சயனைடை விழுங்கி இறந்தவர்கள் மட்டுமே இதுவரை 30 பேர் இருக்கும். இராணுவ மோதல்களில் உயிர்விட்டவர்கள் கணக்கு மிக மிக அதிகம்.
அவர்களுடைய இயக்கப் புத்தகத்தில் இந்த இளம் கொழுந்துகளின் புகைப்படங்களைப் பார்த்தபோது, நம் கைகள் நடுங்கின... உள்ளம் அழுதது. இந்த இழப்புகளை எல்லாம் தாங்கிக்கொண்டு தொடர்ந்து கடமையாற்றும் அந்த லட்சியவாதிகளை வர்ணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டும்.
விடுதலை இயக்கத்தில் பிரபாகரன் சேர்ந்தது ஏன்? அதற்கு என்ன பின்னணி?
பிரபாகரனே சொன்னார்..
ஒரு நாள் என் அம்மாவிடம் ஒரு பெண்மணி பேசிக்கொண்டு இருந்தார். தனது மகள் திருமணத்துக்குப் பணம் திரட்டிக்கொண்டு இருந்தார் அந்தப் பெண்மணி என்பது புரிந்தது. அந்தப் பெண்மணியை உற்றுப் பார்த்தேன். அவரது கால்கள் முழுவதும் நெருப்பில் எரிந்து கருகிக்கிடந்தது.
1958-ல் நடந்த இனக் கலவரத்தில் அவர்களது குடும்பம் நாசமாக்கப்பட்ட கதையை அவர்கள் பேச்சில் இருந்து அறிந்தேன். என் இதயத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது அந்த நெருப்பில் கருகிய கால்கள். அப்பொதெல்லாம் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் செய்திகள் வரும்... கூடிக் கூடிப் பேசுவோம். பாணந்துறையில் குருக்களைக் கொலை செய்ததைப்பற்றி ஊர் பீதியுடன் பேசியது... என் இதயத்தை இச்செய்திகள் தாக்கிச் சின்னாபின்னமாக்கும்.
நான் கடைக்குட்டி. வீட்டில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை. வெளியே நடமாட விட மாட்டார்கள். புத்தகம்தான் துணை. நெப்போலியன், அலெக்ஸாந்தர். வீரசிவாஜி. நேதாஜி போன்றவர்களின் வரலாறுகளைப் படித்தவாறு இருப்பேன். வெளியே இருந்து என்னைத் தாக்கிய துயரச் செய்திகளும், இந்த வரலாறுகளைப் படிப்பதும் எனக்குள் மாற்றங்களைச் செய்தன.
வல்வெட்டித்துறையில் நிரந்தர இராணுவ முகாம் உண்டு. கள்ளக் குடியேற்றம், கள்ளக் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பது இந்த இராணுவ முகாமின் நோக்கம் ஆனால். இராணுவத்தினர் அப்பாவிப் பொதுமக்களை அநாவசியமாகத் திடீரென்று தாக்குவார்கள். பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் என் உள்ளத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது.
எனது இளமைப் பருவத்தில் சத்தியசீலன் போன்றோர், ஈழத் தமிழர் நிலை பற்றி எடுத்துரைக்க ஆரம்பித்து இருந்தனர். இன்று மேற்கு ஜெர்மனியில் அகதியாக இருக்கும் அவரைப் போன்றோர்தான் இம்மாதிரி இயக்கங்களின் முன்னோடி. தமிழ் ஈழம்தான் தமிழர் துயர் தீர ஒரே வழி என்ற கருத்துக்களைப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் மெதுவாக எடுத்துச் சொல்வது உண்டு.''
பிரபாகரனின் குடும்பத்தை இலங்கை அரசு 'ஒரு கை’ பார்க்காமலா இருக்கும்? அவரது வீடு இடிக்கப்பட்டது. அப்பாவுக்கு பென்ஷன் மறுக்கப்பட்டது. நாடோடியாகத் திரிய வேண்டிய கதி ஏற்பட்டது.
போராட்ட வாழ்வின் நடுவே பிரபாகரன் திருமணம் புரிந்தார். மனைவி பெயர் மதிவதனி. தன் ஒரே குழந்தைக்கு 'சார்ள்ஸ் அன்ரனி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரபாகரனின் உயிர்த் தோழராக சார்ள்ஸ் அன்ரனி என்பவர் இருந்தார். தமிழர்களுக்காகப் போராடிய அந்த வீரரை இலங்கை இராணுவம் சூழ்ந்து நின்று சுட்டு வீழ்த்தியது.
பிரபாகரன் கோபம் கொண்டார். அன்ரனியின் உடையை அணிந்து, கையில் துப்பாக்கியோடும், கண்களில் தீப்பொறியோடும் பாய்ந்து வெளியே சென்று இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 13 பேரை அழித்துப் பழிவாங்கினார். அவர் நினைவாகத்தான் குழந்தைக்குப் பெயர்.
பிரபாகரன் 'கொரில்லா’ பயிற்சியை கியூபாவில் பெற்றதாகச் சொல்வார்கள். அதைப் பற்றிக் கேட்டபோது. ''அப்படிப் பேசப்படுவது உண்மை அல்ல. புத்தகங்களைப் படித்து நானாகவே பயின்றேன். கற்பதன் மூலம் தெரிந்துகொள்வதைவிட சுற்றியிருக்கும் 'ஆபத்து’ நமக்கு அதிகப் பயிற்சியைக் கொடுக்கும். எனக்கு 'ஆபத்து’தான் குரு...'' என்று சொல்லி சிரித்தார். சாதாரண துப்பாக்கியில் இருந்து நவீன ஆயுதங்களை இயக்குவது வரை கை தேர்ந்தவர்.
பிரபாகரனுக்கு ஓவியம், கார்ட்டூன் வரை​வதில் ஆசை உண்டு. இயற்கைக் காட்சிகளும் வரைவாராம்.
எங்கே, ஏதாவது படம் போடுங்களேன்...'' என்று கேட்டோம்.
ஸ்ரீலங்கா இராணுவத்தையே எதிர்த்துத் திணற​வைக்கும் பிரபாகரன் சற்றுத் தயக்கத்துடன். ''நீங்கள் எதிரே இருப்பதால், பயமாக இருக்கிறது'' என்றார் மதனைப் பார்த்து!
பிறகு சில படங்களைக் குட்டியாகப் போட்டுக் காண்பித்தார். எந்தப் படத்தையும் 'நீட்டாக’ முடித்துவிட்டுத்தான் தலையை நிமிர்த்தினார்.
ஒரு காலில் நிற்கும் கொக்கும் படத்தை ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டு போட்டார்.
இந்தப் படத்தில் ஒரு தவறு இருக்கிறது'' என்றார் மதன். ''என்ன?'' என்று ஆவலுடன் கேட்டார் பிரபாகரன். ''கொக்கின் கால் இப்படி உட்பக்கமாக மடங்காது'' என்றார் மதன்.
அப்படியா..?'' என்று சிரித்த பிரபாகரன், ''எத்தனையோ பிரச்சினைகள்... இனிமேல் கரெக்டாகப் போடுவேன்...'' என்றார் மதன் போட்ட திருத்தப் படத்தைப் பார்த்தவாறு.
விடைபெற வேண்டிய நேரம் வந்தபோது, தமிழ் ஈழம் பற்றி மீண்டும் பேச்சு திரும்பியது. ''தமிழ் ஈழம் பெறும் நாளை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும் என்றால், ஈழத்தை அடைவது பெரிய விஷயம் அல்ல'' என்றார்.
தன்னைச் சிலர், 'இந்திய எதிரி’ என்று வர்ணிப்​பதைப்பற்றி குறிப்பிட்டு, அந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தார் பிரபாகரன்.
இந்திய இராணுவம் நடவடிக்கையில் இறங்குவதில் உள்ள சிரமம் எங்களுக்குப் புரிகிறது. அதனால், இந்தியாவை சர்வதேச நாடுகள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலைமை ஏற்படலாம்.
தனி ஈழம் அமைக்க சம்மதித்தால் அது தமிழ் இன நாடாக அமைந்து, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு பிரிவினை கோரும் கட்டம் வரலாம் என்று சில இந்தியத் தலைவர்கள் முன்பு கருதினார்கள்.
தனி ஈழம், தமிழ்நாட்டுப் பிரிவினையைத் தூண்டிவிடும் என்பது அபத்தம். இந்தியா என்ற மாபெரும் நாடு உலகத்துக்கே வழிகாட்டும் அற்புதமான நாடு. உலகமே வியக்கும் விதத்தில் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. மக்கள் குரலுக்குத் தலை வணங்கும் ஆட்சி நடக்கிறது. சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரிவினை கோஷம் இனி இந்தியாவில் எழுவதற்கே வாய்ப்பு இல்லை.
ஜூனியர் விகடன்

Geen opmerkingen:

Een reactie posten