தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 december 2011

சொன்னா கேளாங்கள்,பின்னால் ஏமாந்ததாக புலுடா வேறா!!-பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா!- அனலை நிதிஸ் ச. குமாரன்!!

CIA இன் உளவாளிகள் அன்ரன் பாலசிங்கம்,மற்றும் தந்தை செல்வா மகன் என்று அன்றே இந்தியாவும் தமிழ் முற்போக்கு இயக்கங்களும் கூறின,இன்று அது உண்மையாகி நாடுகடந்த அரசு அமெரிக்க குடிமகனால் ஆளப்படுகிறது,புலிகள் இறுதிவரை அமேரிக்கா சார்பாக செயற்பட்டு அண்டை நாட்டை எதிரியாக்கினர்,அவர் ஆதரவுகள் இன்றும் அதையே தொடர்கின்றன,இந்தியாவுடன் அமெரிக்கா உறவானதும் புலிகளை அழித்து முடித்தனர்,வேண்டாத செலவு செய்ய அமெரிக்கா என்ன முட்டாளா??தமிழனை பொறுத்தவரை நல்ல தீர்வுகளை எதிர்ப்பதும் தன்னை பலவீனமாக்குவதும் பதவிக்காக உறவுகளை பலிகொடுப்பதும் இறுதியில் ஏமாற்றி விட்டார்கள் என்பதும் முன்னைய தலைவர்களை பழிபோட்டு துரோகியாக்குவதும் பழமையான ஒன்றே,பிரபாகரன் கூட இலங்கை அரசு ஏமாற்றி விட்டது என்று மாவீரர் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்,இப்போது அனலை கூறுகிறார்.அண்ணன் தம்பியை நம்பாமல் அமெரிக்கனுக்காக உறவுகளை கொன்றால் இதுதான் முடிவு,இப்படித்தான் புலம்பணும்,அன்று கேட்பவன் மறந்தாலும் நின்று கேட்பவன் விடுவானா??உண்மை வழியில் நடந்தால் வெற்றி நிச்சயம்!!
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா!- அனலை நிதிஸ் ச. குமாரன்
[ செவ்வாய்க்கிழமை, 13 டிசெம்பர் 2011, 02:29.32 AM GMT ]
ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்பினார்கள் உலகத்தமிழர்கள். நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் செய்திகள் வருவதையொட்டி அதிர்ந்துபோய் உள்ளார்கள் உலகத்தமிழர்கள்.
விடுதலைப்புலிகளுடன் பேச்சு ஆரம்பிக்கும் காலத்தில் புஷ் தலைமையிலான அரசு சிறிலங்காவின் அரசு பக்கமே ஆதரவை அளித்து வந்ததென்று இப்போது செய்திகள் கசிந்துள்ளன.
மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த ஈழத்தமிழர்களை அமெரிக்கா காப்பாற்றும் என்று நம்பினார்கள் உலகத்தமிழர்கள். அது நடைபெறவில்லை. போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத்தர அமெரிக்கா துரிதமாக நடவடிக்கைகளை எடுக்குமென்று ஒரு கருத்து பரவலாக இருந்தது.
காலங்கள் வேகமாகவே கடந்து செல்ல குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்கும் செயற்பாடுகளே அதிகளவில் இடம்பெறுகிறது. இதற்கும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் உறுதுணையாக இருக்கிறது என்கிற கருத்து இப்போது வலுவாக அடிபடுகிறது.
இவைகள் மட்டுமன்றி, அமெரிக்காவின் முன்னணி உலங்கு வானூர்தி நிறுவனமான பெல் நிறுவனம் இரண்டு பெல் 412 ரக உலங்கு வானூர்திகளைச் சிறிலங்காவின் விமானப்படைக்கு விற்றுள்ளது.
நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்திற்குக் காரணமானவர்களையும், போர்க்குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை இனம் கண்டு தண்டனை பெற்றுத்தரும் வரையில் சிறிலங்கா அரசுடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யாது என்று கூறியிருந்தது அமெரிக்க அரசு.
குறிப்பாக, இராணுவ ஒப்பந்தங்களைச் செய்யாது என்று அடித்துக் கூறியது. பெல் நிறுவனமானது அமெரிக்க அரசின் ஒத்துழைப்பின்றி குறித்த உலங்கு வானூர்திகளை விற்பனை செய்ய முடியாது. சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவின் கொள்கை என்னவென்பதை அறிய இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் உதவியாக இருக்கிறது.
பேச்சளவிலையே வீரத்தை காட்டும் அமெரிக்கா
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார்.
“குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க வேண்டியது சிறிலங்கா அரசின் பொறுப்பு. மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிருபிக்க வேண்டிய தேவை உள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும்" என்று பிளேக் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முன்னணி தலைவர்கள் கூட சிறிலங்கா மீது பல அழுத்தங்களைப் பிரயோகிக்கும் விதத்தில் பேசியே வந்துள்ளார்கள். செய்கையளவில், அமெரிக்க அரசு தொடர்ந்தும் சிறிலங்கா அரசிற்கு மறைமுகமாக உதவிகளை செய்தே வந்துள்ளது.
தற்போது வெளிவந்திருக்கும் தகவல்களின்படி, சிறிலங்காவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களில் உள்நாட்டில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த யுத்த நடவடிக்கைகளில் அமெரிக்காவின் உதவியை அப்போது பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்க வெகுவாக நம்பியிருந்ததாகவும், அமெரிக்காவின் அனுசரணையுடனேயே விடுதலைப்புலிகளைக் கட்டுப்படுத்த சர்வதேச உதவிகளைப் பெற முடியும் எனவும் அவர் நம்பியிருந்ததாகவும் அத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் உதவிகளை ரணில் பெறுவதில் அக்கறை கொண்டிருந்தது மட்டுமல்லாது, அவர் ஒரு அமெரிக்க விசுவாசி எனவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரம்பரைச் செல்வந்தர்கள் என்பதால், இடதுசாரிச் சிந்தனைகள் மீது அவருக்கு நாட்டமில்லை எனவும் 2003-ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ஆஷ்லி வில்ஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகிறது.
அமெரிக்காவின் ஒத்துளைப்புடனேயேதான் விடுதலைப்புலிகளுடன் ஈடுபட்ட பேச்சுவார்த்தைகளில் ரணில் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்து காலத்தை வீணாக்குவதன் மூலமாக தமிழீழ விடுதலையின் வேகத்தை குறைப்பதுடன், இயக்கத்திற்குள் சண்டையை உருவாக்கி பிரிவினையை உண்டாக்குவதன் ஊடாக விடுதலைப்புலிகளின் ஆயதப் பலத்தை இல்லாதொழிக்கலாம் என்கிற கருத்து ரணிலுக்கும் அமெரிக்க அரசிற்கும் இருந்தது. இதில் இரு தரப்பினரும் வெற்றியும் கண்டனர் என்பது உலகறிந்த உண்மையே.
சிறிலங்கா அரச விடயத்தில் செயலளவில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அரசுகள், தமிழர் விடயத்தில் பேச்சளவிலேயே நேரத்தைக் கழித்தது. தமிழர்களின் பிரச்சினையில் ஆர்வம் உண்டு என்கிற வகையில் செயற்பட்டு அவர்களின் விடுதலைப் போராட்டத்தை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிச்செல்ல உதவியாக இருந்தது அமெரிக்க அரசுகள்.
புஷ் தலைமையிலான அரசு தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை பலரும் அக்காலகட்டத்தில் அறிவர். இருப்பினும், சிறிலங்கா விடயத்தில ஒபாமா தலைமையிலான அரசு பதவியேற்றதும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் வரும் என்றே பரவலாக உலகத்தமிழர்களினால் பேசப்பட்டது. தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்திலேயே தற்போதைய அமெரிக்க அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அமெரிக்காவின் இரட்டை வேடம்
வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளைத் திருத்தியமைக்கவும், புதிய மருத்துவமனைகளை அமைக்கவும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் உதவ முன்வந்துள்ளது. பசுபிக் கட்டளைப் பீடத்தின் குறித்த திட்டத்திற்கான நிதியுதவி அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (யுஎஸ் எய்ட்) கொழும்பு பணியகம் ஊடாக வழங்கப்படவுள்ளது என அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் இத்திடீர் செயற்பாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெறுவதாக தமிழர்கள் கொண்டாட முடியாது. அமெரிக்க அரசுகள் எப்போதுமே தமது அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்றவாறே காய்களை நகர்த்தி வந்துள்ளார்கள்.
அமெரிக்காவின் உதவிகளைக் கண்டித்து பேசியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. இது குறித்து அவர் கூறியதாவது, “இது அமெரிக்கப் படையினரை சிறிலங்காவுக்குள் கொண்டு வருகின்ற தந்திரமாக இருக்கக் கூடும். மருத்துவமனைகள் மூலம் அமெரிக்கா இங்கு கால் வைக்கக் கூடும். ஏனைய நாடுகளிலும் இது தான் நடந்தது." இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, இந்தத் திட்டம் சார்ந்த எல்லாப் பணிகளையும் சிறிலங்கா அரசே கவனித்துக் கொள்ளுமென்று தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் ஆதரவு வழங்கியதையும் ராஜபக்ச ஒப்புக்கொண்டார்.
உலக நாடுகளில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வுகளிலும், அமெரிக்க அரசு வெறும் பார்வையாளராக இருக்க விரும்பியதில்லை. ஏற்கனவே வீதி திருத்தம், துறைமுக, மின் திட்டங்களில் சீனாவும், தொடருந்து, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியாவும் பணியாற்றுவதை அமெரிக்க அரசு மிக அவதானமாக கவனித்துக் கொண்டுள்ளது.
இரு நாடுகளின் செயற்பாடுகளுடன், தனது அரசும் மனிதாபிமான செயற்பாடுகளில் அக்கறை கொண்டு செயற்படுகிறது என்பதை உலக அரங்கில் காட்டவே அமெரிக்க அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது.
மனிதாபிமான செயற்பாடுகளை ஒரு புறம் செய்வதாக பிரச்சாரங்களைச் செய்துவிட்டு, மறுபுறம் சிங்கள அரச படையினருடன் நட்புறவைப் பேணி வருகிறது அமெரிக்க அரசு. சிங்கள அரச படைகளுடன் கூட்டுப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களென உடன்பாடுகளை தொடர்ந்தும் அமெரிக்க அரசு செய்து வருகிறது.
பெல் நிறுவனம் விற்றுள்ள இரு உலங்கு வானூர்திகளின் நிகழ்வு இதன் ஒரு அங்கமே. கடந்த வாரம் அமெரிக்காவிலுள்ள ரென்னசி என்கிற இடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் குறித்த இரு உலங்கு வானூர்திகளையும் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
சிறிலங்காவின் விமானப்படையுடன் தமக்கு 40 வருடங்களுக்கும் மேலாக உறவுண்டு என பெல் நிறுவனத்தின் உபதலைவர் லாரி றொபேட்ஸ் குறித்த நிகழ்வில் தெரிவித்தார். இரண்டு உலங்கு வானூர்திகளையும் எயார் மார்ஷல் அபேவிக்கிரம பொறுப்பேற்றுக்கொண்டார்.
பெல் 412 உலங்கு வானூர்திகள் தமது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நம்பத்தகுந்த ஆற்றல் வாய்ந்தவை என எச்.டி.அபேவிக்கிரம தெரிவித்தார். சிறிலங்காவின் பாதுகாப்புப் படையில் கணிசமான உலங்கு வானூர்திகள் அணி உள்ளது. இதில் பெரும்பான்மையானவை பெல் ரகத்தைச் சேர்ந்தவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி அவர்களுக்குத் தக்க தண்டனையைப் பெற்றுத்தர அமெரிக்க அரசு தொடர்ந்தும் குரல் கொடுக்குமென்று கூறிவிட்டு, மறுபுறத்தில் சிங்கள அரசுடன் பல்வேறு விதமான உடன்பாடுகளைச் செய்து மனிதப் பேரவலத்தையே உண்டுபண்ணிய சிங்கள அரச படையினருக்கு தனது நாட்டில் உருவாக்கப்பட்ட உலங்கு வானூர்திகள் மற்றும் இராணுவ உபகரணங்களை விற்பதன் மூலமாக அமெரிக்க அரசாங்கங்கள் எவையென்றாலும் தமது சொந்த நலன்களுக்காகவே அனைத்தையும் செய்கிறது என்பதை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலைகளையே தொடர்ந்தும் சிறிலங்கா விடயத்தில் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் செய்து வருகிறது அமெரிக்க அரசுகள்.
யாரை நம்பி என்ன பலன் என்பதற்கிணங்க, நமது கைகளே நமக்கு உதவும் என்கிற வாக்கை ஏற்றுக்கொண்டு முன்னேறுவதே புத்திசாலித்தனம்.
nithiskumaaran@yahoo.com

Geen opmerkingen:

Een reactie posten