தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 december 2011

பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல் தலைவர்கள் மன்னிப்புக்கோரவேண்டுமாம் !


வடக்கு, கிழக்கு பிரிவினைவாத பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிய இலங்கை வாழ் அனைத்து அரசியல் தலைவர்களும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் கூட்டிணைந்த அறிக்கையொன்றை விடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. 285 பரிந்துரைகள் அடங்கிய மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, யுத்த காலத்தின் போது பொதுமக்களின் இலக்குகள் மீது பாதுகாப்பு தரப்பினரால் வேண்டுமென்றே தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே பல அனுபவங்களைப் பெற்ற படைத்தரப்பினருக்கு மாற்று வழிகள் காணப்படவில்லை.

சாதாரண பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் காயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை இந்த ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கைகளின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் அவை எந்தத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டவை என்பது தொடர்பில் உறுதியாகக் கூற முடியவில்லை. எவ்வாறாயினும் மனிதாபிமான நடவடிக்கையின் நிமித்தம் உரிய விசாரணைகளை நடத்தி ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யுத்தத்துக்கு பின்னர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத நிலையில் நீண்ட காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தீர்க்கமான முடிவை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும். யுத்தத்துக்கு பின்னர் செயற்பட்டு வரும் ஆயுத கும்பல்களை நிராயுதமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுத குழுக்களை நிராயுதமாக்குமாறு ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்திய போதிலும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. அவ்வாறு கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாயின் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதலையும் தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தெற்கில் முக்கிய இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தேசிய அபிலாஷைகளைக் கருத்திற் கொண்டு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுத்திருப்பார்களாயின் இவ்வாறான யுத்தமொன்றைத் தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

பிரிவினைவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்க்காமையால் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளனர். அதனால் அனைத்து அரசியல் தலைவர்களும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தவறியுள்ளதால், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் கூட்டிணைந்த அறிவித்தலொன்றை விடுக்க வேண்டும். மதத் தலைவர்கள், சிவில் சமூகங்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten