தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 december 2011

கொலைகாரரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு கொலைவாள்.

27 December, 2011 by admin

இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியான பின் சர்வதேச நெருக்கடிக் குழ வடக்குக்கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பின்மை குறித்து ஆதாரங்களுடன் மிகவிரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது (Sri Lanka: Women�s Insecurity In The North and East : International Crisis Group Report : 20 December 2011 ; Page II). வடக்குக் கிழக்குப் பெண்களின் மீதான பாலுறவு அத்துமீறல் குறித்த இலங்கை அரசின் வழமையான எதிர்விணை அதனை முற்றிலுமாக நிராகரிப்பதுதான் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மரணமுற்ற பெண் போராளிகளின் உடல்களைக் கையாளும் படையினரின் வழிமுறை, அந்த உடல்களின் மீதான பாலுறவு நிந்தனைகள், பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிர்வாணமான உடல்கள் என அனைத்தும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசின் பதில் அவை பொய்யானவை என்பதுதான். ஓளிப்பதிவு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான இலங்கை அரசின் பதில் இதுதான் எனச் சுட்டிக்காட்டுகிறது நெருக்கடிக் குழுவின் அறிக்கை.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன சொல்கிறது?

மறுபடியும் ஒரு சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்கிறது அது. யார் மேற்கொள்ள வேண்டும்? இலங்கை அரசின் வழிகாட்டுதலில் மேற்கொள்ள வேண்டும்? இலங்கை அரசுதான் ஏற்கனவே இவையெல்லாம் பொய் எனச் சொல்லிவிட்டதே, பிறகெப்படி அது சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் எனும் கேள்விக்கெல்லாம் நல்லிணக்க ஆணைக்குழு செல்வதே இல்லை.
யுத்த காலம் முதல் கிரீஸ் பூதம் வரையிலான வடகிழக்குப் பெண்களின் மிதான பாலியல் அத்துமீறல்கள், வல்லுறவு போன்றவற்றுக்கு சிங்களப் படையினர்தான் காரணம் என ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்படுகிறபோது, அதனை முற்றாக மறுக்கும் ராணுவமும் அரசும், அதே ராணுவக் கட்டமைப்புக்குள், அதனை அப்படியே வைத்துக் கொண்டு, எவ்வாறு சுயாதீன விசாரணை என்பது மேற்கொள்ள முடியும் எனக்கேட்கும் நெருக்கடிக் குழவின் அறிக்கை, இதில் ஐக்கிய நாடுகள் சபை தெளிவான வழிகாட்டுதல்களைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கோரியிருக்கிறது.

சிங்களப் படையினரின் பிரசன்னத்தின் கீழ் வடகிழக்குத் தமிழ்ப்பெண்கள் தொடர்ந்து அச்சநிலையிலேயே வைக்கப்பட்டிருப்பதாகவும் நெருக்கடிக் குழவின் அறிக்கை தெரிவிக்கிறது.யுத்தத்தின் இறுதிக் காலங்கள் பற்றி நல்லிணக்க ஆணைக்;குழவின் அறிக்கையில் (Report of the Commission Of Inquiry On Lessons Learnt And Reconciliation : November 2011 ), பக்கம் 36, பத்தி 3.18,3.19,3.20 போன்றவற்றில் மொத்தமாக 31 வரிகளில் குறிப்பிடப்படுகிறது. 15 ஜனவரி 2009 முதல் 18 மே 2009 வரையிலான 5 மாத சம்பவங்கள் இந்த 31 வரிகளில் விவரிக்கப்படுகிறது.
இலங்கை அரசினதும் ஆணைக்குழுவினதும் வக்கிரமும் புத்திசாலித்தனமும் வெளிப்படும் பகுதி இது. இதே காலப் பகுதி குறித்து நோர்வே அரசும், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவும் விரிவான விளக்கங்களுடன் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. நோர்வே அறிக்கை 2009 ஆம் ஆண்டு இதே ஜனவரி மாதம் முதல் மே 18 வரையிலுமான சம்பவங்களை 64 பக்கம் முதல் 68 ஆம் பக்கம் வரை 6 பக்கங்களில் பதிவு செய்திருக்கிறது. இந்தக்காலகட்டத்தில் மட்டும 30,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லபட்டிருக்கலாம் எனவும் அந்த அறிக்கை சர்வதேச நெருக்கடிக் குழுவை மேற்கோள் காட்டிப் பதிவு செய்கிறது. ஐநா அறிக்கை 40,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பதிவு செய்கிறது.

இந்த ஐந்து மாத காலத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச - அவரது சகோரரகள் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச சம்பந்தப்பட சர்வதேசிய நகர்வுகள் நிறைய நடைபெற்றிருக்கின்றன. வெள்ளைக் கொடியுடன் போராளிகள் சரணடைதல் தொடர்பாக பசில் ராஜபக்ச உத்திரவாதம் அளித்திருக்கிறார். இதுபற்றியெல்லாம் நோர்வே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இலங்கை நல்லிணக்கக் குழுவின் இந்த நகர்வுகளின் சுவடுகளைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. இந்தத் தேதியில் இலங்கைப் படை இந்த இடத்தினைக் கைப்பற்றியது என்ற பட்டியலை தராதரமாகக் குறிப்பிடும் ஆணைக்குழு அறிக்கை, மொத்தத்தில் இந்த யுத்தத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று மட்டும் ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கிறது.

2009ஜூலை 2006 முதல் மே 2009 வரை மரணமுற்ற படையினரின் எண்ணிக்கை 5,556. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் 22,247 பேர் இதில் அடையாளம் காணப்பட்டவர் 11,812 பேர் பெயருடன் அடையாளம் காணப்பட்டவர். பிறரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை. வெகுமக்கள்? இலங்கைப் படையினரிடமோ அல்லது இலங்கை அரசின் பிற நிறுவனங்களிடமோ எந்தத் தரவுகளும் இல்லை என்கிறது ஆணைக்குழு. யுத்தம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் அரசு தரப்பில் இதுபற்றி எந்த முயற்சிகளும் இல்லை. இருப்பதெல்லாம் மருத்துவத்துறை புள்ளிவிவரங்கள்தான். அதன்படி மருத்துவமனைகளில் இறந்தவர்கள் 2000 பேர் வரையிலானவர்களுக்குத்தான் கணக்கு இருக்கிறது.

தமிழ்ப் பொதுமக்கள் மீது பேரன்பு கொண்ட அரசு என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பீத்திக் கொள்ளும் ஆட்சியின் இலட்சணம் இது. பாதுகாப்பு அமைச்சின் இலட்சணம் இது. இலங்கை சிவில் சமூக நிறுவனங்களின் இலட்சணம் இது. இந்த வகையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் நடைபெற்ற வெகுமக்கள் பேரழிவு குறித்து அறிக்கை முழுமையாக மௌனம் சாதிக்கிறது. அது மட்டுமல்ல படையினரால் வெகுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற எந்தவிதமான சான்றுகளையும் எவரும் தரவில்லை என்றும் அறிக்கை சொல்கிறது. வெகுமக்களுக்குப் பொறுப்புச் கூறவேண்டும் எனும் எந்த அக்கறையும் இல்லாத இந்த நல்லிணக்கக்குழவின் அறிக்கை இனக்குழக்களுக்கு இடையில் நல்லுறவை வளர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் என நினைப்பது வேறும் கேலிக் கூத்தன்றி வேறில்லை.

இந்த அறிக்கையினை சிங்கள அறிவுஜீவிகளின் தரப்பிலிருந்து பல்வேறு தரப்பினர் போற்றிப் புகழ்கிறார்கள். வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் இந்த அறிக்கை விசாரணைகளின் பின்னான ஆதாரங்களுடன் இருக்க, ஐநா நிபுணர் குழு அறிக்கை விசாரணைகளின் பின்னான ஆதாரங்கள் அற்றது என்கிறார். ஐநா சபை ஊழியர்கள், சர்வதேச ஊடகங்கள், சேவை அமைப்புகள், மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு ஆதாரம் அழிந்த யுத்தத்தை நடத்த வேண்டும் எனும் முடிவு செய்து படுகொலை புரிந்த இலங்கை அரசின் அமைச்சர் ஐநாவிடம் ஆதாரங்கள் கேட்பது கேலிக் கூத்தாக இருக்கிறது. இலங்கை அரசு மட்டுமல்;ல இலங்கையின் சிங்கள அறிவுஜீவிகளும் நீPதித்துறையினரும்; கூட இனவாதம் பாரித்திருக்கிறார்கள் என்பதற்கு தாயன் திலக, ரஜீவ விஜேசிங்க முதல், சட்டத்தரணி கொமின் தயாசிறி வரை நாம் ஆதாரங்கள் காட்டலாம். கொமின் தயாசிறி நல்லிணக்க ஆணைக்குழ அறிக்கை குறித்து சொல்வதைப் பாருங்கள் :

அரசாங்கத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அண்மைக் காலத்தில் இவ்வளவு தைரியமாகவும், நேர்மையாகவும் பரிந்துரைகளை எந்தவொரு ஆணைக்குழுவும் முன்வைத்ததில்லை. இவ்வாறான பரிந்துரைகளின் மூலம் வெளிநாட்டு தலையீடுகளை தவிர்க்க முடியும். தாருஸ்மன் அறிக்கை ஒருபக்கச் சார்பானது. இந்த அறிக்கை பக்கச் சார்பற்றத்தன்மை அற்றது. அதிகாரப்பகிர்வு, மொழிப் பயன்பாடு உள்ளிட்ட பல விடயங்களில் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கது.

கொமின் தயாசிறி அறிக்கையின் முக்கியத்துவமாக மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அதிகாரப் பகிர்வு, மொழிப் பண்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்த பரிநதுரைகளை வெளியிடாத இதுவரைத்திய இலங்கை ஆவணங்கள்தான் எது? இவை இரண்டும் இலங்கை அரசின் பசப்பல்களில் மிகப் பொதுவான அம்சங்கள். 13 ஆவது சட்டத்திருத்ததிற்கு அப்பால் சென்று அதிகாரப்பகிர்வு என்று பேசிய மகிந்தா இன்று காணி-காவல்துறை அதிகாரம் சாததியமில்லை எனச் சொல்லும் பசப்பல்வாதியாக முகம் காட்டுகிறார். திஸவிதாரணவின் சரவகட்சிக் குழு அறிக்கைக்கு என்ன ஆனது? இதுவெல்லாம் மிகச் சமீபத்திய இலங்கை ஜனாதிபதியின் சொந்த முகத் தோற்றங்கள். ஐநா அறிக்கை பக்கச்சார்பானது என்கிறார் தயாசிறி. அந்த அறிக்கை இலங்கை அரசு-விடுதலைப் புலிகள் என இருவர் மீதும்தானே சுயாதீன விசாரணையைக் கோருகிறது? இலங்கை அரசு மீது மட்டுமே விசாரணையைக் கோரவில்லையே? பிறகு எப்படி அந்த அறிக்கை பக்கச் சார்பானது ஆகும்?

சரி, தயாசிறி இந்த அறிக்கை பக்கச் சார்பானது இல்லை என்கிறார். ஏன்ன ஆதாரம்? இலங்கைப் படையினரை அது குற்றம் சாட்டியிருக்கிறதா? இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் கோதாபாயாவைக் குற்றம் சாட்டியிருக்கிறதா? இல்லையே! இவர்கள் மீது அல்லவா ஐநா அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ஆணைக்குழ அறிக்கை பக்கச் சார்பற்றது என்பதற்கு தயாசிறி வைக்கும் ஆதாரம் ஆளும் கட்சி அமைச்சர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது என்பது. அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வெள்ளைக் கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறாரே, அதற்காக அவர்மீது விசாரணை செய்ய வேண்டும் என அறிக்கை பரிந்துரை செய்கிறதா? இல்லையே!

இலங்கை அரசு மேலதிக விசாரணை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள் யார்?

எவரேனும் சிங்கள அமைச்சர்களா, அல்லது சர்வதேச அமைப்புக்கள் போர்க்குற்றமும் மனித உரிமை மீறல் குற்றமும் மனித குலத்துக்கு எதிரான குற்றமும் சாட்டும் படைத்துறைக்குப் பொறுப்பான சிங்கள அமைச்சர்களா? இல்லையே! குற்றம் சாட்டப்படுபவர்கள் இருவரும் தமிழ் அமைச்சர்கள். சமூக சேவைகள் மற்றம் சமூக நல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் போன்றவர்கள்தான் அந்த அமைச்சர்கள்.இதிலும் இனவாதம்தான் செயல்பட்டிருக்கிறது. மிகப்பெரும் இலங்கை அரசின் திட்டத்தில் பலிகடாக்கள் ஆக்கப்பட்டவர்கள்தான் இந்த அமைச்சர்கள்.

இவர்கள் மீது கோரப்படும் விசாரணைகள் எத்தகையது? சட்டத்திற்குப் புறம்பான ஆயுதக் குழக்கள் எனும் தலைப்பின் கீழ் இந்த இரு அமைச்சர்களும் தொடர்புபட்ட பல்வேறு கடத்தல் மற்றும் வெள்ளை வான் சம்பவங்களை 172 முதல் 174 ஆம் பக்கம் வரை ஆணைக்குழவினர் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த இரு குழுக்களினதும் தலைமைத்துவத்தினரின் அணுகுமுறையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் தன்மையற்றதாக இருப்பதால் நல்லிணக்கத்திற்கு இச்செயல்பாடுகள் தடையாக இருக்கும் என ஆணைக்குழு பதிவுசெய்கிறது. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி ஆணைக்குழவின் முன் சாட்சியமளிதத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது பற்றிக் குறிப்பிடும்போது, �பெரும் மழைக்குப் பின், ஈரம் இருக்கத்தான் செய்யும்� எனக் குறிப்பிட்டதாக அறிக்கை பதிவு செய்திருக்கிறது.

இதுவன்றி கிழக்கு மாகாணத்தில் 600 காவல்துறையினர் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது சம்பந்தத்தை மறுத்தாலும் அது குறிதது சுயாதீன விசாரணை மேற்கொள்ப்பட வேண்டும் என பரிந்துரை செய்யும் விசாரணைக் குழு, இது செய்யப்படவில்லையானல் இம்மாதிரிக் குற்றங்களுக்கு தண்டனை விலக்கு (impunity) அளிப்பதாக ஆகிவிடும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதுதான கொமின் தயாசிறி நல்லிணக்க ஆணைக்குழவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து முன்வைக்கும் ஆதாரம்.

இந்த ஆதாரத்தின் மூலம் வெளிநாட்டுத் தலையீடுகளையும் தவிர்க்க முடியம் எனவும் சொல்கிறார் கொமின் தயாசிறி. ஓரு வகையில், பகுதியளவில் இவர் உண்மைதான் சொல்கிறார் எனவே நாம் மதிப்பிட முடியும். அறிக்கை பகிரங்கமாக முன்வைக்கப்பட்டதற்காகவும், பரிந்துரைகள் செய்திருப்பதற்காகவும் கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இலங்கை அரசைப் பாராட்டவும் செய்திருக்கின்றன. இது ஆரம்பகட்ட வரவேற்பு மட்டும்தான் என்பதனை அமெரிக்க-பிரித்தானிய அரசுகளின் கடுமையான அறிவிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இது குறித்து மகிந்தர் விசனமும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த இரு நாடுகளும் யுத்தத்தின் இறுதிக்கட்டம் - அதாவது போர்க் குற்றம், மனித குலத்திற்கு ஏதிரான குற்றம் - குறித்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை கவனம் கொள்வில்லை என்பதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மீளவும் தமது நிலைபாடான இக் குற்றச்சாட்டுக்கள் குறித்த சுயாதீனமான விசாரணை என்பதனை இருநாடுகளும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆயுதக்குழுக்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதற்கான காரணம், இலங்கை அரசு தனது ராணுவத் தந்திரோபாயத்தின் பகுதியாகத்தான் இத்தகைய குழுக்களை திட்டமிட்டு உருவாக்கியது எனக் கொள்வோமாயின், இலங்கை அரசு தனது திட்டத்தின் விளைவான இந்த ஆயுதக்குழுக்களையே பலிகடாவாக்கி தன்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து நழுவிவிட முனைகிறது எனவும் ஆணைக்குழவின் பரிந்துரைகளை நாம் கருதமுடியும். எவ்வாறாயினும் இந்த அறிக்கையானது பிரச்சினையின் மூலகாரணமான சிங்கள இனவாத மற்றும் இனக்கொலை அரசியலையும், போர்க்குற்றங்களுக்குக் காரணமான சிங்கள ராணுவத்தின் படுகொலைகளையும் மூடிக்கட்டும் பட்டுத்துணியின் வேலையைத்தான் கச்சிதமாகச் செய்திருக்கிறது. இதுவன்றி இந்த அறிக்கை �வழவழா கொழ கொழவென� அறிக்கையிட்டிருக்கும் பல விஷயங்களை ஐம்பதாண்டு கால இலங்கை அரசின் அறிக்கைகள், ஒப்பந்தங்கள், வாக்குறுதிகள் என்பவற்றில் நாங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.

குற்றங்களுக்குக் காரணமான படையினரிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும் அரசிடமும் பரிந்துரைகளை முன்வைத்திருக்கும் இந்த நிபுணர் குழு அறிக்கையினை, கொலையாளிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கும் பிறிதொரு கொலைவாள் எனவே எம்மால் வர்ணிக்க முடியும்.

Geen opmerkingen:

Een reactie posten