தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 november 2012

புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் ஏன் யுத்தம் மூண்டது? (அவலங்களின் அத்தியாயங்கள்- 40) – நிராஜ் டேவிட் !



இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏன் முரண்பாடு ஏற்பட்டது? புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் ஏன் யுத்தம் மூண்டது? தமிழர்களைக் காப்பாற்றவென்று இலங்கை வந்த இந்தியப் படையினரை விடுதலைப் புலிகள் எதற்காகத் தாக்கினார்கள்?
அவலங்களின் அத்தியாயங்கள் என்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்துவருகின்ற வாசகர்கள் அடிக்கடி எழுப்புகின்ற கேள்விகள் இவை.
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவர்கள், புலம்பெயர் இளையதலைமுறையினர் போன்றவர்களுக்கு இதுபோன்ற சந்தேகங்கள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
எனவே இந்தக் கேள்விகள், சந்தேகங்கள் போன்றனவற்றிற்கான பதிலைச் சரியானபடி தேடியதன் பின்னர்தான் இந்திய-புலிகள் யுத்தத்தின் மற்றய பக்கங்களை இந்தத் தொடரில்; பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.
வரலாறு
இந்தியாவின் கடந்தகால சரித்திரம் தெரிந்தவர்களுக்கும், இந்தியா இலங்கை விடயத்தில் கடைப்பிடித்துவந்த கடந்தகால கொள்ளைகள் பற்றிய அறிவை ஓரளவு கொண்டிருப்பவர்களும், ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பெரிதாக ஒன்றும் ஆச்சரியம் இருக்கச் சந்தர்பம் இல்லை.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர, இந்தியா ஒருபோதும் ஈழத்தமிழருக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தது கிடையாது என்பதுதான் உண்மையான வரலாறு.
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகள் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததாக வரலாறு இல்லை. சினிமாவை அடிப்படையாகக்கொண்ட கலாச்சாரத் தொடர்புகள் அல்லது வியாபார ரீதியிலான தொடர்புகள் என்பன தவிர மிகவும் மேலோட்டமான ஒரு அரசியல் தொடர்பு மாத்திரமே இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்தது.
1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் காரணமாக 10 இலட்சம் மலைநாட்டுத் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டு, இலங்கையின் பூர்வீகத் தமிழ்க் குடிகள் சந்தேகப் பிரஜைகள் ஆக்கப்பட்ட காலம் தொடக்கம், இலங்கையில் இருந்த தமிழர்கள் பற்றி இந்தியா ஒருவிதப் பாராமுகப் போக்கையே கடைப்பிடித்து வந்தது.
ஈழத் தமிழரில் அக்கறை இன்றி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்:
1954 இல் கைச்சாத்திடப்பட்ட நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சாஸ்திரி-சிறிமா ஒப்பந்தம், 1974 கச்சத்தீவு ஒப்பந்தம் போன்றவை முதற்கொண்டு, 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தம் வரை, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் போதிய அக்கறை இன்றியே இந்த ஒப்பந்தங்கள்; இந்தியாவினால் செய்துகொள்ளப்பட்டிருந்தன.
குடியுரிமைப் பறிப்பில் சிங்களப் பேரினவாதிகள் இலங்கையில் ஆரம்பித்த தமிழ் இன விரோத நடவடிக்கைகள், மொழி உரிமை, நில உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, கலாச்சார உரிமை என்று தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தபோதும், சிங்களத்தின் இந்த அநீதியை எதிர்த்து இந்தியா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் பல்வேறு காந்திவழி சாத்வீகப் போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும், அவற்றிற்குத் தார்மீக ஆதரவைக்கூட வழங்க அந்த ’காந்தியின் தேசம்’ அப்பொழுது முன்வரவில்லை.
தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டம் சிங்கள இனவாத அரசுகளினால் அடக்கி ஒடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் சரி, 1956, 1958, 1961 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடாத்தி நூற்றுக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த காலங்களிலும் சரி, குறிப்பிடத்தக்க எந்தவொரு பிரதிபலிப்பையும் இந்தியா வெளிக்காண்பிக்கவில்லை.
1958 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் இலங்கைத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து சென்னையில் ஒரு பேரணி நடாத்தப்பட்டது. அது போன்று ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து சிறிய அளவிலான ஒருசில அடையாள போரட்டங்கள் தமிழ் நாட்டில் அவ்வப்பொழுது இடம்பெற்றனவே தவிர, இந்தியாவின் நடுவன் அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடியதான நடவடிக்கைகள் எதுவும் இலங்கைத் தமிழர்களுக்குச் சார்பாக அக்காலத்தில் எடுக்கப்படவேயில்லை.
ஈழத்தமிழ் தலைவர்களின் நகர்வுகள்
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவை எப்படியாவது சம்பந்தப்படுத்திவிட இலங்கையில் இருந்த தமிழ்த் தலைவர்கள் பல முயற்சிகளையும் அப்பொழுது மேற்கொண்டிருந்தார்கள்.
இந்தியாவின் தேசியத் தலைவர்களைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி விளக்கி அவர்களது அனுதாபத்தைப் பெற்றுவிடும் நோக்கத்தில் தமிழ் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிவடைந்தன.
இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழருக்குச் சார்பான ஒரு எழுச்சி அலையை ஏற்படுத்தி இந்தியாவின் மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமே இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவை தலையிடவைக்கமுடியும்; என்று எண்னிய தமிழ் தலைவர்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு சென்ற ஈழத்தமிழ் தலைவர்கள்:1972ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தந்தை செல்வா தலைமையில் அமிர்தலிங்கம் அடங்கலான ஒரு குழு தமிழ் நாடு சென்று அப்போதய முதலமைச்சர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் உட்பட பல தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும், சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி விலாவாரியாக விளக்கம் அளித்தார்கள்.
தமிழ் தலைவர்களின் இந்த விஜயத்தின் போது தந்தை செல்வா அவர்கள் புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரைச் சந்திக்கவேண்டும் என்று பலத்த முயற்சி மேற்கொண்ட போதிலும், தமிழ் தலைவர்களைச் சந்திக்க டெல்லி மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் தலைவர்களின் இந்த தமிழ் நாட்டு விஜயம் மற்றும் அவர்கள் தமிழ் நாட்டில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் என்பன இலங்கைத்தமிழர் பற்றி இந்தியத் தமிழர்களிடம் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியதுடன், இலங்கைத் தமிழருக்கு சார்பான ஒரு நிலையை அவர்கள் எடுப்பதற்கும் ஏதுவாக அமைந்தது.
தமிழ் நாட்டில் வீச ஆரம்பித்த ஈழத் தமிழ் அலை இந்திய நடுவன் அரசிற்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்ததுடன், இலங்கை சம்பந்தமாக இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்துவந்த அதன் கொள்கையை மீள்பரிசீலனை செய்யவேண்டிய ஒரு தர்மசங்கடத்தையும் அதற்கு ஏற்படுத்தியிருந்தது.
அக்காலத்தில் ஈழத் தமிழருக்கு சார்பாக தமிழ்நாட்டு அரசு காண்பித்த ஆதரவு, கடைப்பிடித்திருந்த கொள்கை என்பன, 1975 இல் கருணாநிதி தலைமையிலான தமிழ் நாட்டு அரசை இந்தியாவின் மத்திய அரசு கலைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது. கருணாநிதி தலைமையிலான அரசைக் கலைப்பதற்கு ~இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தமிழர்களுக்குச் சார்பாக தி.மு.க. தலையிட்டதையும் ஒரு காரணமாகக் இந்தியாவின் மத்திய அரசு குற்றம் சுமத்தியிருந்தது.
இந்திய அரசின் பாராமுகத்திற்கான காரணம்:இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு தென் இந்தியாவில் வசித்து வந்த தமிழர்கள் தனி திராவிட நாடு கேட்டுப் போராட்டம் நடத்திவந்ததும், இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்று அங்குள்ள தமிழர்களின் போராட்டம் அடிக்கடி தொடர்ந்து வந்ததும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாததற்கு ஒரு பிரதான காரணமாக இருந்தது.
அத்தோடு அக்காலகட்டத்தில் சீனா, பாக்கிஸ்தான் என்று தனது அயல்நாடுகளுடன் இந்தியா சிண்டுமுடித்துக்கொண்டு இருந்ததால் மற்றய அயல்நாடான இலங்கை பக்கம் இருந்து சிக்கல்கள் எதுவும் எழுவதை அது அப்போது விரும்பவில்லை என்பதும் மற்றொரு காரணம்.
ஈழப் பிச்சனையில் அக்கறையெதுவும் காண்பிக்காது, இலங்கை அரசின் சண்டித்தனத்தையெல்லாம் கண்டும் காணாதது போன்று இருந்துவந்த இந்தியாவிற்கு, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டேயாகவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் 1980களின் ஆரம்பத்தில் ஏற்பட்டது.
ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பாசத்தினால் அல்ல, இந்தியாவின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் விவகாரங்களில் மூக்கை நுளைக்கவேண்டிய அவசியமொன்று இந்தியாவிற்கு தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டது.
அவலங்கள் தொடரும்.
nirajdavid@bluewin.ch

  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-24
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-25
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-26
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-27
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-28
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-29
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-30
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-31
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-32
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-33
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-34
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-35
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-36
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-37
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-38
  • அவலங்களின் அத்தியாயங்கள் பாகம்-39
  • http://news.lankasri.com/show-RUmqzAQVOdmr3.html-40
  • Geen opmerkingen:

    Een reactie posten